மலை மாவட்டமான நீலகிரியில் 3 தொகுதிகள். ஆனால், ஹேர்பின் வளைவுகள் போல ரிஸ்க் அதிகம்.
குன்னூர் தொகுதியில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வில் இருந்து அப்போதுதான் அ.தி.மு.க.வுக்கு வந்த சாந்தி ராமுவுக்கு சீட் கொடுக்கப்பட்டது. வெற்றியும் பெற்றார். "தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேறவில்லை' என்ற அதிருப்தி இருப்பதால், சாந்திராமு திரும்பவும் சீட் கேட்பது கட்சியில் யாருக்கும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் குன்னூர் ஒன்றிய மாணவரணி செயலாளராக இருந்து, பின்னர் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஆகி, பின்னர், நீலகிரி மாவட்ட செயலாளர் என பதவி கொடுக்கப்பட்ட படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பால நந்தகுமாருக்கு கட்சிக்காரர்களிடம் செல்வாக்கு உள்ளது. எடப்பாடியிடமும் இவருக்கு செல்வாக்கு உள்ளது.
தி.மு.க.வில் மீண்டும் சீட் கேட்கிறார் சீனியரான மாவட்ட பொறுப்பாளர் முபாரக். பழைய பகையைக் கடந்து, முன்னாள் அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன், "தனக்கு இந்த தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும்' என முபாரக்கிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஊட்டி சட்டமன்றத் தொகுதியில்.... ஜெயலலிதாவால் 2011 தேர்தலில் மாவட்ட செயலாளர்- எம்.எல்.ஏ. -சுற்றுலாத்துறை அமைச்சரான புத்திச்சந்திரன் பின்னர் ஜெ.வாலேயே பதவி இறக்கம் செய்யப்பட்டார். இப்போது அவர் சீட் ரேஸில் இருக்கிறார். 2016 தேர்தலில் இளம் வேட்பாளராக களமிறங்கியவர் கப்பச்சி வினோத். உள்குத்தில் வீழ்ந்தார். ஆனாலும் இப்போது எடப்பாடி பழனிச்சாமியால் மா.செ.வாக ஆக்கப்பட்டிருக்கிறார் கப்பச்சி வினோத். அதனால் "வேட்பாளராகவும் களமிறக்கப்படுவார்' என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கிடையே ஊட்டியின் முன்னாள் நகரச் செயலாளரும், நகராட்சியின் எக்ஸ் துணைத்தலைவருமான கோபாலகிருஷ்ணனும் போட்டியில் இருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான காங்கிரஸின் கணேஷ் மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருக்கி றார்கள். அவருக்கு உறுதுணையாக இருந்த நகரத்தலைவர் லீலா கோவிந்தராஜன், சாதிக் ஆகியோர் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட... தனியாய் கை தூக்கி அலையும் நிலையில்தான் இருக்கிறார். அதனால், தி.மு.க.வே இங்கு போட்டியிட ஆயத்தமாகிவிட்டது. எக்ஸ் நகரச்செயலாளர் ரவிகுமார் சீட் கேட்கிறார். கட்டப் பஞ்சாயத்து, மார்க்கெட் வசூல் என கெட்டபெயரும் கூடவே வரு கிறது. குன்னூரில் இளித்துறை ராமச்சந்திரனுக்கு சீட் கிடைக்க வில்லை என் றால் அவர் ஊட்டிக்கு கேட்க வாய்ப் பிருக்கிறது. "ராமச்சந்திரன் கேட்கவில்லை என்றால் ஊட்டி சிட்டிங் நகர செயலாளரும் கடந்த எம்.பி. தேர்தலில் தி.மு.கவுக்கு நல்ல லீடிங் காட்டியவருமான ஜார்ஜுக்கு உறுதியாய் கிடைக்கும்' என்கிறார்கள்.
மலையின் உச்சியில் உள்ளது கூடலூர் தொகுதி. சிட்டிங் எம்.எல்.ஏ., தி.மு.க. திராவிடமணி சீட் கேட்கிறார். அ.தி.மு.க. சஜீவனுக்கு எதிரான போராட்டத்தில் காட்டிய சுணக்கத்தால் கட்சியினரிடமும், டேன்டீ நிறுவனம்-சாலைகள்-வீடுகள் பராமரிப்பு குறைபாடுகளால் பொதுமக்களும் எம்.எல்.ஏ. மீது அதிருப்தி காட்டுகின்றனர். ஆனாலும், சீனியர் என்ற முறையில் தாக்குப்பிடிக்கிறார் திராவிட மணி. முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவி கோமதி, அவரது கணவர் பந்தலூர் ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜாவும் சீட் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் "மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்துல காப்பி உலர் கலையகம் அமைக்கிறோம்னு சொல்லிட்டு, 10 லட்ச ரூபாய் நிதி வாங்கி வீட்டு வாசலில் கட்டிடம் எழுப்பி வாசலில் கான்கிரீட் போட்டு ஏமாத்திட்டாங்க...' என்கிற குற்றச்சாட்டுகளும் மக்களிடையே இருக்கின்றன.
காசிலிங்கம் முபாரக்கின் சாய்ஸாக இருக்கிறார். ஆனால், சஜீவனை கேரளாவில் உள்ள மருத்துவமனையில் இவர் சந்தித்ததும், கொரோனா காலத்தில் இவர் வழங்கிய உணவு பொட்டலங்களை மக்கள் ஏற்க மறுத்ததும் எதிர்ப்புணர்வை அதிகப்படுத்தி யுள்ளது. 2001 உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றபோது சுயேட்சையாக தி.மு.க.வை எதிர்த்து களம்கண்ட ர். பின்னர் ராமச்சந்திரன் தயவால் நெல்லியாளம் நகராட்சி தலைவர் ஆக தேர்ந்தெடுக் கப்பட்டார். சீட் கேட்கும் இன்னொருவரான மாங்கோடு ராஜா உடன்பிறப்புகளிடமும், பொது மக்களிடையேயும் பெயர் வாங்கி வைத்திருக்கிறார். கூடலூரில் மலையாள மக்களில் ஒரு சமுதாயமான ஈழவா மக்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வேண்டி, பல போராட்டங்கள் நடத்திய மாங்கோடு ராஜா மீது பல வழக்குகள் பாய்ந்தது... அந்த சமூகத்தினரிடம் ஆதரவைப் பெருக்கியுள்ளது.
அ.தி.மு.க.வில் சஜீவன் ஆதரவோடு வழக்கறிஞர் பொன்.ஜெயசீலன் இருக்கிறார். அதை விட எக்ஸ் சேரங்கோடு ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயராமனும் சஜீவனின் குட்புக்கில் இருக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமியும் போட்டியில் இருக்கிறார்.