"நேர்மையைக் குப்பையில் போடு!– அதிகாரிக்கு மிரட்டல்'’என்னும் தலைப்பில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சிவகிரி பிரிவு (நெல்லை மாவட்டம்) அலுவலகத்தில், இளநிலை பொறியாளராக, நேர்மை தவறாமல் கொள்கை உறுதியோடு பணிபுரிந்துவரும் மு.மாரிமுத்து குறித்து கடந்த ஆகஸ்ட் 03 -06 தேதியிட்ட நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
நேர்மையை தீவிரமாகக் கடைப்பிடித்தால் சோதனை வராமலா இருக்கும்? அச்சோதனை, மேலதிகாரிகள் மூலம் மாரிமுத்துவைக் கடுமையாகத் துரத்தியபடியே உள்ளது.
5 ஆம் வகுப்பு வரை படித்த மாரிமுத்து 1997-ல் சாலைப் பணியாளராகத்தான் அரசுப் பணியில் அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று, பி.காம்., எம்.காம். முடித்து, பகுதி நேர மாணவ ராகப் பயின்று டி.சி.இ., முடித்துவிட்டு, முதலில் சாலை ஆய்வாளராகவும், தற்போது இளநிலை பொறியாளராகவும் பதவி உயர்வு பெற்றவர் ஆவார்.
‘லஞ்சம் தவிர்த்து! நெஞ்சம் நிமிர்த்து!’ என உறுதியுடன் அரசுத் துறையில் பணிபுரியும் மாரிமுத்து, தன்னுடைய ரோல் மாடல் சகாயம் ஐ.ஏ. எஸ்.தான்.’ என்று கூறி வருபவர். இப்படிப்பட்ட மாரிமுத்துவுக்கு, உரிய விடுப்பு அனுமதி பெறாமல் ஈட்டிய விடுப்பில் சென்றதாகவும், தன்னுடைய பதவியின் முக்கியத்துவம் பற்றி கவலைப்படாமல் பணியில் நேர்மையும் பற்றும் இன்றி உள்ளதாகவும் குறிப்பாணை அனுப்பி தன்னிலை விளக்கம் கேட்டார், நெடுஞ்சாலை க(ம)ப பிரிவின் தென்காசி கோட்டப் பொறியாளர் சுந்தர்சிங்.
‘தன்னிலை விளக்கம்தானே! தாராளமாக அளிக்கிறேன்!’ என்கிற ரீதியில், விரிவாக ஒரு கடிதம் அனுப்பினார் மாரிமுத்து. ""நான் ஈட்டிய விடுப்பு தொடர்ந்து 99 நாட்கள் எடுத்ததற்குக் காரணமே தென்காசி கோட்டப் பொறியாளர்தான். வேறு வழியில்லாமல் (நெ) க (ம) ப தென்காசி கோட்டப் பொறியாளரும் நானும் பேசிய பேச்சை அப்படியே ‘ரிபீட்’ செய்கிறேன்''’ என்று கோட்டப் பொறியாள ருக்கு எழுதி, அதன் நகல்களை முதன்மை இயக்கு நர் (நெ) வரைக்கும் அனுப்பிவிட்டார். கிணற்றில் போட்ட கல்லாக மாரிமுத்து அளித்துள்ள தன்னிலை விளக்கத்தை மேலதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்ட நிலையில், அந்த உரையாடல் தற்போது அம்பலமாகி, நெடுஞ்சாலைத்துறையின் ஊழலை சந்தி சிரிக்க வைத்திருக்கிறது.
கோட்டப் பொறியாளர் மற்றும் மாரிமுத்து இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலில் குறிப்பிட்ட சில பகுதிகள் இதோ...
கோட்டப் பொறியாளர்: உங்களை மாதிரி ஆட்களை எல்லாம் இந்த D.G., ரெகுலர் பிரிவில் போட்டு எங்களுக்கு ஏன் தலைவலியை உருவாக்கு கிறார் என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரி யாதா? மேலே இருந்து கீழேவரை உள்ள அத்தனை கமிஷன் முறையும். 30 சதவீதம் வரை ஸ்பெஷல் பி.ஏ.க்கு கொடுத்த பிறகுதான் (நெ) க (ம) ப பிரிவில் ஒப்பந்தக்காரர்கள் பணியே எடுக்க முடியும். எனவே, SE அல்லது CEயே நினைத்தாலும் 100 சதவீதம் தரத்தோடு பணியினை வாங்க முடியாது. எனவே, உங்களால் முடிந்தவரை பணியை வாங்கிக்கொள்ளுங்கள்.
மாரிமுத்து: பிரிவு அலு வலரான JE ஒப்பந்தப்படி ஒப் பந்தக்காரர்களிடம் பணியை வாங்க முடியாது. எனவே செய்த பணியைவிட கூடுதலாக பணி செய்ததாக M.Book-ல் நான் பதிவு செய்ய மாட்டேன். அத னால், ஒப்பந்தக்காரர் பணிகள் இல்லாத அலுவலகப் பணியும், சாலைப் பணியாளர்களை வைத்து பராமரிக்கும் பணிகளை யும் தந்தால், செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
கோட்டப் பொறியாளர்: அப்படியெல்லாம் செய்ய முடி யாது. அப்படியே செய்ய அனு மதித்தாலும்.. அதிலும், SE அல்லது DE அலுவலகங்களுக்கு பொது பணம் (காமன்) தர வேண்டியிருக்கும். அதனை நீங்க சாலை பழுது பார்க்கும் கணக் கில் பெறப்பட்ட பணத்திலிருந்தும், அவசர பழுது நீக்கும் தலைப்பி லிருந்தும் மற்றும் சாலை சீரமைப்பு கணக்கு தலைப்பு போன்ற அத்தனை வகை பணி களிலும் நீங்க நான் சொல்லுகிற மாதிரிதான், ங.இர்ர்ந்-ல் பதிவு செய்து தரவேண்டியது இருக்கும்.
மாரிமுத்து: நான் நேர் மையாக எனது ஊதியத்திற்காக மட்டுமே வேலை செய்ய முடியாதா சார்?
கோட்டப் பொறியாளர்: 1 வருடம் ஆகாமல் இந்த DG உங்களை மாற்றவும் மாட்டார். நீங்கள் பணியில் இருந்தால் வேறு பிரிவு பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கவும் முடியாது. எனவே, நீங்கள் குடும்பச்சூழல் என தெரிவித்து 45 நாட்கள் ஈட் டிய விடுப்பு கொடுத்து விட்டுச் செல்லுங்கள். அப்போதுதான், நான் உங்கள் இடத்துக்கு வேறு பொறியாளரைக் கேட்டு வாங்க முடியும். . அப்புறம் உங்களுக்கு உரிய இடத்தை உஏ-யிடம் பேசி நீங்க வாங்கிட்டுப் போங்க.
மாரிமுத்து: நான் அப் படியே செய்கிறேன்.
இருவரின் உரையாடலும் இப்படியே நீள்கிறது. மாரிமுத்து அளித்துள்ள தன்னிலை விளக்கக் கடிதத்தில், ‘குறிப்பாணையில் என் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டு போலியாக உருவாக்கப் பட்டுள்ளது. மேலும், நான் பணியில் நேர்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டும் என் மீது உள்நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது.. அதனாலேயே, சில விபரங்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது''’ என்று சுட்டிக் காட்டத் தவறவில்லை.
அரசுப் பணியில் இருந்து கொண்டு சில துறைகளில் நேர் மையாகப் பணிபுரிவதென்பது மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கிறது.
-ராம்கி