விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் தனது வேட்பாளர்கள் யாரென்பதை முடிவுசெய்வதில் மும்முரம் காட்ட ஆரம்பித்துள்ளன. விராலிமலையிலும் இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த குளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடந்த 2011-ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் பிரிக்கப்பட்டு விராலிமலை, கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. விராலிமலை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டதும் அ.தி.மு.க. சார்பில் அந்தத் தொகுதியில் மாஜி விஜயபாஸ்கரும் தி.மு.க. வேட்பாளராக ரகுபதியும் போட்டியிட்டனர். அ.தி.மு.க. விஜயபாஸ்கர் வெற்றிபெற்றார். 

Advertisment

அதன்பிறகு நடந்த 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. விஜயபாஸ்கரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக பழனியப்பன் போட்டியிட்டுத் தோற்றார். 

ஆனால் கடந்த முறை பழனியப்பன் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட நிலையில் மாஜி அ.தி.மு.க. ஆலங்குடி வெங்கடாசலம் மகள் தனலெட்சுமி, முத்தரையர் வாக்குகளைப் பெற களமிறங்கியதால் அங்கே நெருக்கடியான சூழ்நிலை உருவாக, தேர்தல் பிரச்சாரத்திற்கு தன் மகள்களையும் அழைத்துச்சென்று கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்தார். அதனால் மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஓட்டுக் கேட்க போகமுடியாமல் முடக்கப்பட்டிருந்தார். 

Advertisment

ஆனாலும் விராலிமலை தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து அந்தத் தொகுதி மக்களிடம் விஜயபாஸ்கர் நெருங்கிப் பழகுவதும், தொகுதியில் உள்ளவர்களின் வீடுகளுக்கு நல்லது- கெட்டது என எதையும் விடாமல் சென்றுவருவதும் அவருக்கு பெரிய பலமாக அமைந்துவிட்டது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் வீட்டுக்கு வீடு காலண்டர் கொடுப்பதுடன், பரிசுப் பொருட்களையும் சேர்த்துக் கொடுத்து கவர்ந்துவைத்திருக்கிறார். இந்த ஆண்டு தேர்தலை மையப்படுத்தி பொங்கல் பானையுடன், பொங்கல் பரிசுகளை வழங்கினார். இந்த முறையும் இவரே அ.தி.மு.க. வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 3 முறையும் தி.மு.க. போட்டியிட்டு வெற்றிபெற முடியவில்லை என்பதால் தி.மு.க நிர்வாகிகள் பலர் விஜயபாஸ்கரிடம் தஞ்சமடைந்துள்ளனர். அதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுவிடுகிறார். ஆனால் இந்த முறை விராலிமலையை தி.மு.க. வெல்ல வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டுள்ளது. அஞ்சுகம் பூபதியை தொகுதிப் பொறுப்பாளராக நியமித்து கிராமம் கிராமமாக வேலையை முடுக்கிவிட்டுள்ளது. ஆனாலும் வழக்கம்போல கடைசி நேரத்தில் தி.மு.க. நிர்வாகிகள் விஜயபாஸ்கரிடம் அடைக்கலமாகிவிடக்கூடாது என்கின்றனர் விவரமறிந்த உ.பி.கள். 

இந்த முறை யார் தி.மு.க வேட்பாளராக வருவார்கள்? 

கடந்த 2 முறையும் தோற்ற பழனியப்பனுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒ.செ. பொறுப்பு கொடுத்து வேலையைப் பாருங்க என்று தலைமை அனுப்பியுள்ளது. அவரும் கடந்த சில மாதங்களாக ஊருக்குள் போய்வருகிறார். 

அதேநேரத்தில் அன்னவாசல் ஒ.செ. சந்திரன் சமீபகாலமாக கிராமம் கிராமமாகச் சென்று பெண்கள், கிராமத்தினை கூட்டிவைத்து, "உங்களுக்கு விஜயபாஸ்கர் என்ன செஞ்சார்? எதுவும் செய்யல. 15 வருசமா எம்.எல்.ஏ.வாக உள்ள அவரால் ஒரு அரசு கல்லூரி கூட கொண்டுவர முடியலை. அவர் தனியார் கல்லூரிகள் கட்டியிருக்கிறார்'' என்று மக்களிடம் பேசிவருகிறார். 

அவருக்கு சீட்டு கிடைக்குமோ என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது. ஆனால் மா.செ. செல்லப்பாண்டியனை களமிறக்கினால் விஜயபாஸ்கருக்கு எதிராக போட்டுப் பார்க்கலாம் என்கின்றனர் தொகுதி உ.பி.கள். எது எப்படியோ கடைசிவரை உ.பி.க்கள், தன் சொந்த கட்சிக்காக உழைத்தால் மட்டுமே வெற்றிபெறலாம். வழக்கம்போல சோரம் போனால் மறுபடியும் அ.தி.மு.க.தான்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சத்தியலெட்சுமி களமிறக்கப்பட்டு கட்சி இளைஞர்களுடன் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். தொகுதி முழுவதுமுள்ள பெரும்பான்மையான இளைஞர்களும், தொழிலாளர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் பெண்கள் ஆதரவும் அதிகமுள்ளது என்று களத்தில் நிற்கிறார்.

அதேபோல, தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே இருந்த இளைஞர்கள் பலரும் விருப்ப மனு கொடுத்திருந்தாலும் அ.தி.மு.க மாஜி விஜயபாஸ்கர் ஆதரவில் மாவட்டக் கவுன்சிலராகவும், மாநில ஜெ. பேரவை இணைச்செயலாளராகவும் இருந்து சமீபத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த பன்னீருக்கு சீட்டு கொடுத்தால் விஜயபாஸ்கருக்கு சரியான போட்டியாக இருக்கும் என்கின்றனர் த.வெ.க.வினர். இதனால் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி ஏற்படும், பெண்கள் -இளைஞர்கள் வாக்குகளை கொத்தாக அள்ளுவோம் என்கின்றனர். 

ஆனால் இளைஞர்கள் வாக்குகளை தி.மு.க. வாங்கிவிடக்கூடாது என்பதற்காகவே பன்னீருக்கு த.வெ.க.வில் சீட்டு கிடைக்கவேண்டும் என்று விஜயபாஸ்கர் நினைக்கிறார் என்று அ.தி.மு.க.வினர் பேசிக்கொள்கின்றனர்.