மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று சீர்காழி. தனித்தொகுதியான இத்தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். மீன்பிடித் தொழில், பிரம்பு பொருட்கள் தயாரிப்பு, கோரைப்பாய் தயாரிப்பு தொழில்களும் இருக்கின்றன.
மயிலாடுதுறை மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களையும், மக்கள்தொகையையும் கொண்ட இத்தொகுதியில் பட்டியல் சமூகத்தவர்களின் வாக்குகள் அதிகம். அவர்களுக்கு அடுத்து வன்னியர் சமூகத்தினரும், இஸ்லாமியர்கள், முக்குலத்தோர், மீனவர்கள் கணிசமாகவும் இருக்கின்றனர். ஜெயின் சமூகத்தவர்களின் வாக்குகளும் சீர்காழி தொகுதியில் கணிசமாக இருக்கிறது.
கழிமுகப்பகுதியான கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கேட்டு பல வருடங்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்துவருகின்றனர். அது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. நூறு நாள் வேலையை விட்டால் பெரிய வேலைவாய்ப்பில்லை என்பதால் தொழிற்சாலை ஒன்று அமைத்துக்கொடுத்தால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுமென, சிட்டிங் எம்.எல்.ஏ.வான பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்.
2026 சட்டமன்றத்தேர்தல் களம் எப்படி இருக்கும், தி.மு.க., அ.தி.மு.க.வில் யாருக்கு சீட்டு கிடைக்கும், த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட புதிய கட்சிகளின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது குறித்து தொகுதியை சுற்றிவந்தோம்.
"சீர்காழி தொகுதி தொடர்ந்து தனித்தொகுதியாக இருப்பதால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் டாமினேசன் பெரிதாக இல்லை. எப்போதுமே தி.மு.க.வுக்கு சாதகமான இந்த தொகுதியை 2011-ல் தி.மு.க. தலைமை, கூட்டணியிலிருந்த வி.சி.க.வுக்குக் கொடுத்து, தொகுதிக்கு சம்பந்தமேயில்லாத ஒருவரை கொண்டுவந்து நிறுத்தியதால் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சக்தி வெற்றிபெற்றார். 2016 தேர்தலில் தி.மு.க. அடுத்த மாவட்டத்தைச் சேர்ந்த கிள்ளை ரவீந்திரனை நிறுத்தியது, அவர் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். தொடர்ந்து சீர்காழி அ.தி.மு.க. வசமிருந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான பன்னீர்செல்வத்திற்கே சீட் கொடுத்து அ.தி.மு.க.விடமிருந்து தொகுதியைக் கைப்பற்றியது.
சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ.வான பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பதோடு தொகுதியிலும் நன்கு அறிமுகமானவர். எளிமையானவர். தொகுதியிலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் பரிச்சயமானவர். அவர்களின் சுக துக்கங்களில் தவறாமல் பங்கேற்பவர். தொகுதியில் பெயர்சொல்லும்படி பெரிய திட்டங்கள் வரவில்லை என்றாலும், கெட்ட பெயர் இல்லை. அடாவடி, கட்டப்பஞ்சாயத்து எதற்கும் போகமாட்டார். பன்னீர்செல்வம் மீண்டும் சீட்டுகேட்க தயாராக இருக்கிறார். தி.மு.க. தலைமையும் இவர் பக்கமே க்ரீன் சிக்னல் காட்டுமெனத் தெரிகிறது.
சீர்காழி தி.மு.க. ஒன்றியச் செயலாளரான மலர்விழி திருமாவளவன் தொடர்ந்து வாய்ப்புக் கேட்டு முதல்வர் குடும்பத்திற்கு நெருக்கமானவர் களை வட்டமடித்துவருகிறார். அரசு வழக்கறிஞரும், பொதுக்குழு உறுப்பினருமான சிவதாஸ் இந்தமுறை தனக்கு சீட் வேண்டுமென கே.என்.நேரு, தொகுதி பொறுப்பு அமைச்சரான மெய்யநாதன் என பலரிடம் கோரிக்கை வைத்துவருகிறார். இவர் இந்த தொகுதியைச் சேர்ந்தவரில்லையே என்கிற பேச்சு தி.மு.க. வட்டாரத்தில் கேட்கிறது.
இன்னும் தகவல்தொழில்நுட்ப அணியின் மண்டலப் பொறுப்பாள ரான பி.எம்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.பி.யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரும் சீட்டு ரேசில் இருக்கின்றனர்.
அ.தி.மு.க.வில் யார் சீட்டு வாங்கிவந்தாலும் ஒரு கோடி நான் செலவு செய்கிறேன் என கூறியிருந்தார் ம.தி.மு.க.விலிருந்து வந்த மார்கோனி. கடந்த தேர்தலில் மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகளையும் அ.தி.மு.க. இழந்தது. குறிப்பாக தான் போட்டியிட்ட பூம்புகார் தொகுதி தோற்பதற்கு முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதனும் ஒரு காரணம் என நினைத்த சிட்டிங் அ.தி.மு.க. மா.செ.வான பவுன்ராஜ், தனது அரசியல் எதிரியான வி.ஜி.கே. செந்திலோடு இணக்கம்காட்டி, உனக்கு மயிலாடுதுறை எனக்கு பூம்புகார், சீர்காழி தனித்தொகுதி அதனால அதைக் கூட்டணிக்கு கொடுத் துடலாம் என கூடிப்பேசி முடிவெடுத்து ஒன்றாகவே வலம்வருகின்றனர்.
இந்தச் சூழலில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட அவைத் தலைவருமான பி.வி.பாரதி சீட்டு கேட்டு விருப்ப மனுகொடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியோடு நேரடித் தொடர்பில் இருப்பதால் தனக்கு சீட்டு உறுதி என்கிற முனைப்போடு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஒவ்வொரு திருச்சபைகளுக்கும் நேரடியாகவே சென்று உதவிகளை அள்ளிக்கொடுத்துள்ளார். மணல் பாபு என்கிற ரமேஷ்பாபு கொலைக்கு காரணமானவர்களோடு நெருக்கமாக இருப்பது பாபுவின் ஆதரவாளர்களை கோபப்பட வைத்துள்ளது. பாரதியின் ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு சென்றது அவருக்கு பலவீனம்.
முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட மகளிரணி தலைவியுமான சக்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரமோகன் ஆகியோர் சீட்டு கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளனர். முன்னாள் அவைத்தலைவரின் மகனும் இளைஞரணியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன்கோயில் பாலமுருகனும் சீட் கேட்டிருக்கிறார். இவர்களைத் தவிர இருபதுக்கும் அதிகமானோர் அ.தி.மு.க.வில் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
த.வெ.க.வில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரான குட்டி கோபி, மக்களைச் சந்தித்து நான்தான் உங்க எம்.எல்.ஏ. எனக்கூறி வாக்கு கேட்டுவருகிறார். நாம் தமிழர் கட்சி, வேட்பாளராக அம்பேத்ராஜன் என்பவரை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/sergali-2026-01-06-10-43-26.jpg)