2021 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தமுள்ள 10 தொகுதிகளில் தி.மு.க. 5 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றனர்.

Advertisment

மேலூர், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய ஐந்து தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றது. கடந்த 25 வருடங்களாக தி.மு.க. வெற்றியே பெறமுடியாத தொகுதிகளான மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி ஆகிய இந்த 5 தொகுதிகளில் மூன்றையாவது வெற்றிபெறவேண்டும் என்பது தி.மு.க. தலைமையின் இலக்கு. தி.மு.க.வின் முக்கிய குறி அ.தி.மு.க.வின் மூன்று மாவட்டச் செயலாளர்களான செல்லூர் ராஜு, இராஜன்செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர். அவர்கள் தங்களது தொகுதிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்றவர்கள். எனவே இவர்களது மூன்று தொகுதிகளைக் குறிவைத்து வேலையை முடுக்கிவிட்டிருக்கிறது தி.மு.க. தலைமை. 

Advertisment

வெற்றிக்கு இடையூறாக உட்கட்சிப் பூசலுக்கு இடம்கொடுக்காமல் வேலையைச் செய்வது முதல் பூத், வார்டு வாரியாக ஆட்களை நியமித்து நிர்வாகிகள் அனைவருக்கும் தேவையான ஐந்து மாதத்திற்கான பணமும் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது. 

 மதுரை மேற்கில் அமைச்சர் மூர்த்தியை நியமித்து முழுக்கவனம் செலுத்தி செல்லூர் ராஜுவை வீழ்த்த வியூகம் வகுத்துவருகின்றனர். மதுரை மேற்கில் செல்லூர் ராஜுவுக்கு எதிராக தி.மு.க. சார்பில் அமைச்சரின் செல்லப் பிள்ளையான தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாலாஜி பெயர் அடிபடுகிறது. இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் மக்களுக்கான நலத் திட்ட உதவிகள், அந்தப் பகுதியிலுள்ள கட்சியினருக்கு அடிக்கடி ஆலோசனைக் கூட் டங்கள் நடத்துவது, பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தி சைவ, அசைவ விருந்து வைத்து கட்சியினரை மூர்த்தி சிறப்பாகக் கவனித்துவருகிறார். இதனால் கட்சியினரும் இப்போதே தேர்தல் வேலைகளில் வேகம் காட்டு கின்றனர். 

Advertisment

கட்சியில் மேற்குத் தொகுதி யில் செல்வாக்கோடு வலம்வரும் மா. ஜெயராமனும் சீட் கேட்டு காய்நகர்த்துவதாகச் சொல்லப்பட, அமைச்சர் மூர்த்தியே நேரில் அவரைப் பார்த்து சமரசம்செய்து தன்பக்கம் வைத்துகொண்டதாகச்  சொல்லப்படுகிறது. தி.மு.க. மாமன்ற உறுப்பினர் லத்திகாஸ்ரீ, சபரீசன் வரை சென்று பார்த்து முயற்சிப்ப தாக தகவல். புறநகர் மாவட்டச் செயலாளர் மணிமாறனும் அவருக்காக சிபாரிசு செய்ததாக சொல்லப்படுகிறது. 

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான செல்லூர் ராஜுவைப் பொறுத்தவரை 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றபோதிலும் இந்த முறை அமைச்சர் மூர்த்தி களத்தில் இறங்கியதால் தொகுதி மாறலாமா என்ற சஞ்சலத்தில் எடப்பாடியிடம் விண்ணப்பிக்க, அதற்கு தலைமை ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் செல்லூராரும் களத்திலிறங்கி பூத் கமிட்டி மீட்டிங், கட்சிக் காரர்களுக்கு கவனிப்பு என வலம்வருகிறார். வாராவாரம் கட்சி ஆலோசனைக் கூட்டங்கள் என்ற பெயரில் தொண்டர்களுக்கு கவனிப்பு, மக்களுக்கு  நலத்திட்டங்கள் என்றபெயரில் வேட்டி, சேலை, குடம், கேஸ் ஸ்டவ், அண்டா என்று வாரி வழங்கத் தொடங்கியிருக்கிறார். 

இப்படி தி.மு.க., அ.தி.மு.க. போட்டிபோட்டு வாரிவழங்குவதால் மக்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த 15 வருடமாக இந்தத் தொகுதிக்கு செல்லூர் ராஜு கொடுத்த வாக்குறுதிகளில் எவ்வளவு நிறைவேற்றினார் என்று தொகுதி மக்களிடம் விசாரித்தபோது, "சார்  இந்தத் தொகுதி எம்.ஜி.ஆர். நின்று வெற்றிபெற்ற தொகுதி. தி.மு.க. சார்பில் 1996-ல் பி.டி.ஆர்., 1989-ல் பொன்முத்துராமலிங்கமும் வெற்றிபெற்றார்கள். மற்றபடி கடந்த 25 வருடங்களாக அ.தி.மு.க.வே வெற்றிபெற்றுள்ளது. 

பெரும்பாலும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. குடிநீர்த் தட்டுப்பாடு எப்போதுமே காணப்படும். ஒவ்வொரு முறையும் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தாலும் 15 வருடமாக நிறைவேற்றவில்லை. விளையாட்டு மைதானம், தொகுதியில் கல்லூரி கொண்டு வருவேன் என்றார். எதுவும் வந்தபாடில்லை. ஜெய்ஹிந்துபுரம் அடுத்துள்ள முத்துப்பட்டியில் 15,000 குடும்பங்களுக்கு குடிசை மாற்றுவாரியத்தால் கொடுக்கப்பட்ட இடங்களுக்கு பட்டா இன்றுவரை வழங்கப்படவில்லை. சத்தியமூர்த்தி நகர் பகுதியில் வாழும் 7,000 குடும்பங்களுக்கு சாதிச் சான்றிதழ் வாங்கித் தருகிறேன் என்றார். இன்றளவும் சான்றிதழ் கிடைக்கவில்லை. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண உயர்மட்ட மேம்பாலம் இரண்டு இடத்தில் கட்டப்படும் என்றார். அதில் ஒன்றுமட்டும் நிறைவேற்றியுள்ளார். 

டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். இணைந்து செல்வாக்கு நிறைந்த வேட் பாளரை நிறுத்தினால் செல்லூராருக்கு இடைஞ்சல்தான். தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவரும் அ.ம.மு.க.வின் மாநில செய்தித்தொடர்பாளருமான வெற்றிப்பாண்டியன் களத்தில் நிற்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.  இதற்கு பதிலடி கொடுக்க அ.தி.மு.க.வின் செல்லூர் ராஜு முக்குலத்தோர் சமுதாய சங்க நிர்வாகிகளோடு வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்துவருகிறார். பா.ஜ.க.வினர் கோயில்களில் பெண்களைத் திரட்டி திருவிளக்கு பூஜை, குத்துவிளக்கு கொடுப்பது, அன்னதானம் போடுவது என்று இப்போதே கேன்வாஸ் செய்யத் தொடங்கிவிட்டனர். தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

நா.த.க., த.வெ.க. தரப்பில் யார் வேட்பாளர் என்பது குறித்து தற்போதைய கட்டத்தில் பிடிகிடைக்க வில்லை.