கன்னியாகுமரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரத் திடமிருந்து, வரும் தேர்தலில் தொகுதியை எப்படியாவது பறித்துவிட வேண்டுமென்று கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. முயற்சி செய்துவருவது அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
2021 தேர்தலில் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட தளவாய்சுந்தரம் 1,09,745 வாக்குகள் பெற்று தி.மு.க.வின் ஆஸ்டினைத் தோற்கடித்தார். 2026 தேர்தலிலும் இதே கூட்டணி தொடர... மீண்டும் தளவாய்சுந்தரம்தான் வேட்பாளர் என்று தலைமையின் உத்திரவாத அடிப்படையில் தளவாய்சுந்தரமும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதிக் குட்பட்ட அகத்தீஸ்வரம், தோவாளை ஒன்றிய பா.ஜ.க. பொறுப்பாளர்கள், வரும் தேர்தலில் கன்னியாகுமரியில் பா.ஜ.க.தான் போட்டியிட வேண்டுமென்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் குமரி கிழக்கு மா.தலைவர் கோபகுமார் மூலம் வலியுறுத்தியிருப்பதாகவும் அதற்கு தலைமையும் சம்மதித்திருப்பதாகவும் கூறிவருகின்றனர். இது தளவாய்சுந்தரத்துக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பா.ஜ.க. தரப்பில் நாம் கேட்டபோது, "தொகுதியைப் பொறுத்தவரை ஜாதி ரீதியாக நாடார், வெள்ளாளர், தலித், மீனவர்கள் மற்றும் பிற சமூகத்தினரும் உள்ளனர். இதில் மத ரீதியாக இந்துக்கள்தான் அதிகம். தனிப்பட்ட முறையில் பா.ஜ.க.வுக்கும் செல்வாக்குள்ள தொகுதிதான்.
கன்னியாகுமரியை நேசிக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆண்டுக்கு 22 நாட்கள் கன்னியாகுமரிக்கு வந்து விவேகானந்தா கேந்திராவில் தங்கிச் செல்கிறார். கடந்த 18-ஆம் தேதி கன்னியாகுமரி வந்த மோகன்பகவத், தமிழக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி களுடன் நடத்திய ஆலோசனையில் பா.ஜ.க.வை மட்டும் குறிப்பிட்டு, "வரும் தேர்தலில் தமிழகத்தில் லேசாக அல்ல பலமாக கால் பதிக்கவேண்டும் அதற்கு உங்களின் உழைப்பைக் கொடுக்க வேண்டும்'’என்றார்.
அப்போது குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கன்னியாகுமரி தொகுதியைக் குறிப்பிட்டுப் பேசியதை அவர் கவனமாகக் கேட்டதாகவும், மேலும் "விவேகானந்தா கேந்திராவின் தலைமையிடமாக கன்னியாகுமரி இருப்பதால் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வைச் சேர்ந்தவராக இருந்தால் அது பெருமைதான்' என்று அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் போன்றோர் எடுத்துக் கூறியுள்ளனர். இதுவரை இந்த தொகுதியில் பா.ஜ.க. தனித்துதான் போட்டியிட்டுள்ளது.
தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. எளிதில் வெற்றிபெறும் என்ற நிலையிருப்பதால் தொகுதியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க தொகுதிக் குட்பட்ட அனைத்து ஒன்றியம், பேரூர், ஊராட்சி, கிளை என தீர்மானம் போட்டு தலைமையிடம் கொடுக்க இருக்கிறோம்''’என்றனர்.
இதுபற்றி அ.தி.மு.க.வினரிடம் நாம் பேசியபோது, "இந்த கூட்டணி அல்ல, எந்தக் கூட்டணியாக இருந்தாலும் தளவாய்சுந்தரம்தான் வேட்பாளர். இருந்தாலும் கட்சிக்குள்ளே அவருக்கு எதிராக உள்ளடி வேலையில் முக்கிய நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டு வருவது ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துகிறது. நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மீது தொகுதியில் கடும் அதிருப்தி இருப்பதால் அ.தி.மு.க. எக்ஸ் எம்.எல்.ஏ.யும் முன்னாள் மா.செ.யுமான நாஞ்சில் முருகேசன், தனது மகள் மாநகராட்சி கவுன்சிலரான ஸ்ரீலிஜாவுக்கு நாகர்கோவில் தொகுதியை வாங்கிவிட்டு, கன்னியாகுமரியை பா.ஜ.க.வுக்கு தள்ள தீவிர காய் நகர்த்தலில் உள்ளார்.
அதேபோல் முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைப்புச் செயலாளருமான பச்சைமால், முன்னாள் மா.செ.க்கள் அசோகன் (கி), ஜான்தங்கம் (மே) போன்றோர், தளவாய் சுந்தரத்தால் கட்சியில் அடையாளத்தை இழந்தவர்கள். இவர்களும் தளவாய்சுந்தரத்தின் அதிகாரத்தைப் பறிக்கத்தான் முயற்சிக்கிறார்கள்.
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி யைப் பொறுத்தவரையில் இதுவரை யாருமே தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்றது கிடையாது. அதை நன்றாகவே உணர்ந்திருக்கும் தளவாய்சுந்தரம், அதற்கு மாறாக நாகர்கோவில் தொகுதியை ஒரு சாய்ஸாக வைத்து சட்டமன்றத்தில் கூட இரண்டு முறை நாகர்கோவில் தொகுதி யின் முக்கிய பிரச்சினைகளைப் பேசியிருக்கிறார். நாகர்கோவில் தொகுதிக்குள்ளேயும் அடிக்கடி வந்துசெல்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது தளவாய் சுந்தரத்துக்கும் தொகுதி எது என்ற நெருக்கடி இருக்கிறது என்பதை உணரமுடிகிறது''’என்றனர்.
தளவாய்சுந்தரத்தின் ஆதரவாளர்கள் கூறும்போது, "அண்ணன் எந்த தொகுதி கேட்டாலும் அதைக் கொடுக்க எடப்பாடி தயாராகயிருக்கிறார். ஒருவேளை சென்டிமெண்ட் அடிப்படையில் கன்னியாகுமரியிலிருந்து மாறுவாரே தவிர, மிரட்டியோ நெருக்கடி கொடுத்தோ தளவாயிடமிருந்து கன்னியாகுமரியை பா.ஜ.க. வாங்கிவிட முடியாது. கன்னியாகுமரியில் ஏற்கனவே பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.ஆர்.காந்தி, மீனாதேவ் போட்டியிட்டு மூன்றாவது இடத்துக்குத்தான் போனாங்க. ஆனால் தளவாய்சுந்தரம் தி.மு.க. சுரேஷ்ராஜனையும் ஆஸ்டினையும் தோற்கடிச்சிருக்கார்.
இந்தமுறை தளவாய்சுந்தரம், தொகுதியின் சென்டிமெண்டை உடைச்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெறுவார். வரும் தேர்தலில் தளவாய்சுந்தரத்தை எதிர்த்துப் போட்டியிட தி.மு.க.வினரே தயங்குகின்றனர். அப்படியிருக்கையில் பா.ஜ.க. நின்றால் வெற்றி பெறுமா?'' என்கின்றனர்.
முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த ஊர் கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட அகத்தீஸ்வரம் என்பதால் அவர் கண்டிப்பாக சீட் கேட்பார் என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். மேலும் மீனாதேவ், முன்னாள் மாவட்ட தலைவர் வேல்பாண்டியன், மீனவரணி பெருங்கோட்ட பொறுப்பாளர் சகாயம் போன்றோரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் என்கின்றனர் பா.ஜ.க.வினர்.
கன்னியாகுமரி இலைக்கா? தாமரைக்கா? என்ற கேள்வி இரு தரப்பினரிடமும் உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.