திட்டக்குடி நகராட்சி நகர மன்றத் தலைவர் வெண்ணிலா மீது கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 24 வார்டுகளை உள்ளடக்கிய திட்டக்குடி நகராட்சியில் தி.மு.க. சார்பில் 12 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வில் 5 கவுன்சிலர்களும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் ஒருவரும், மற்றவர்கள் சுயேச்சைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நகர மன்றத் தலைவியாக 5வது வார்டு கவுன்சிலர் வெண்ணிலா கோதண்டமும்,  துணைத்தலைவராக பரமகுருவும் ஒருமன தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

Advertisment

இந்நிலையில், தற்போது நகராட்சியின் வளர்ச்சிப்பணிகளை முறையாக செய்யவில்லை யென்றும், நகர மன்றக் கூட்டம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுவதாகவும், புதிய மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்க முறைகேடாக பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், ஒப்பந்தப்பணி களில் முறைகேடு நடப்ப தாகவும், இதனால் அத்தியாவசியப் பணி களை உடனுக்குடன் செய்து தராமல் நகராட்சி மெத்தனமாக செயல்படுவதாகவும் கூறி, நகர்மன்றத் தலைவி வெண்ணிலா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக கடந்த மாதம் 22ஆம் தேதி திட்டக்குடி நகராட்சி ஆணையர் பொறுப்பு ராம ரிடம் கடிதம் வழங்கினார்கள்.

Advertisment

இதில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தி 18 கவுன்சிலர்கள் கையொப்பமிட்டு கொடுத்தனர். இதையடுத்து, நம் பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் 22ஆம் தேதி நடைபெற்றது. வாக்கெடுப்பின் போது, நகராட்சி அலுவலகம் முன்பு திட்டக்குடி டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகராட்சி ஆணையர் முரளிதரன் முன்பு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டி யில் உறுப்பினர்கள் மறைமுகமாக வாக்கு செலுத்தினர். வாக்குப்பதி வின் இறுதியில் எண்ணியதில், 23 நகர்மன்ற உறுப்பினர்களும், நகர்மன்றத் தலைவிக்கு எதிராக வாக்களித்ததால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து இரண்டு வாரத் தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றும் அறிவித்தார்.  இந்த நிலையில், அடுத்த நகர் மன்றத் தலைவர் யார் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

thidakudi1

திட்டக்குடி நகர்மன்றத் தலைவர் பதவி, பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. தற்போது வெண்ணிலா கோதண்டம் பதவி காலியாகியுள்ளதால் அடுத்து யார் தலைவராகப் போகிறாரென்று நாம் விசாரித்ததில், தி.மு.க. சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த 8வது வார்டு செமிலாதேவி, 24வது வார்டு அமுதவல்லி, 2வது வார்டு சிலம்பரசி, இளையராஜா, ஏழாவது வார்டு அலெக்சாண்டர் உட்பட ஏழு பட்டியலின கவுன்சிலர்கள், நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடத் தகுதியானவர்கள். 

Advertisment

ஆனால் தி.மு.க. சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் செமிலாதேவி, அமுதவல்லி ஆகியோர் மட்டுமே. இவர்களில் ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள் தி.மு.க. உ.பி.க்கள். இதில், சுயோட்சையாக வெற்றி பெற்றவர்கள் ஏற்கெனவே தி.மு.க.வில் ஐக்கிய மாகிவிட்டனர். அவர்களிலும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், தலைவர் போட்டியில் குதிக்க ஆவலாக உள்ளனர்.

தி.மு.க. கட்சித் தலைமை இதில் என்ன முடிவெடுக்கும் என்பது புதிராக உள்ளது.  இரண்டாவது வார்டு சிலம்பரசியின் கணவர் வெளிநாட்டில் வேலைசெய்கிறார். அவருக்கு நெருக்கமான திட்டக்குடி பிரபல தொழிலதிபர் ஒருவர், சிலம்பரசியை போட்டியில் களமிறக்கி வெற்றிபெற காய் நகர்த்துவதாகக் கூறுகின்றனர். அதேநேரத்தில், சுயோட்சையாக வெற்றி பெற்றவர்களில் கோழியூர் அலெக்சாண்டர், மூன்றுமுறை கவுன்சிலராக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை புரிந்தவர். இவர் சேர்மன் பதவியை பிடிப்பதில் தீவிரமாக உள்ளார். தி.மு.க. சார்பில் வெண்ணிலா, செமிலாதேவி, அமுதவல்லி ஆகியோரில் வெண்ணிலா சேர்மன் பதவியை இழந்துள்ளதால் அவர் போட்டியிடமாட்டார். அமுதவல்லி, செமிலாதேவி ஆகிய இருவரில் அமுதவல்லி வயதில் மூத்தவர் என்பதால் செமிலாதேவி போட்டியில் இறங்க ஆவலாக உள்ளார்.

ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கு மாற்றாக அ.தி.மு.க. சார்பில் சேர்மனை கொண்டுவர அக்கட்சியினர் ஆர்வமில்லாமல் உள்ளனர். காரணம், அ.தி.மு.க. உறுப்பினர்கள், சுயோட்சை களின் ஆதரவிருந்தபோதும், ஒரு தி.மு.க. உறுப்பினரின் ஆதரவும் இருந்தால்தான் வெற்றிபெற முடியும். தி.மு.க.வின் சேர்மன் பதவி பறிக்கப்பட்டதால் மீண்டும் தி.மு.க.வைச் சேர்ந்தவரே பதவியில் அமரவேண்டும் என்று தி.மு.க.வினர் கருதுகின்றனர். 

தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்களிப்பார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது. அப்படி வாக்களித்தால் கட்சிக்கு விரோதமாக ஆகிவிடும் நிலையுள்ளது. மேலும், இன்னும் 15 மாதங்கள் நகராட்சித் தலைவர் பதவிக்காலம் உள்ளது. இந்த நிலையில் தேர்தலே நடத்தாமல் துணைத் தலைவரை கொண்டே மீதி நாட்களை ஓட்டிவிடலாம் என்ற பேச்சும் உள்ளது. ஆனால் ஒரு மாதத்திற்குள் தேர்தலை நடத்தி பட்டியலினத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களில் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுத்து சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள் சமூகநீதி ஆர்வலர்கள். 

அரசியல் மியூசிக்கல் சேர் விளையாட்டில் வெற்றிபெறும் திட்டக்குடி நகர்மன்ற தலைவர் யாரென்ற எதிர்பார்ப்பில் மக்கள்!

-எஸ்.பி.எஸ்.