லைநகர் சென்னையில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 11 தொகுதிகளை திமுகவும், 4 தொகுதிகளை அ.தி.மு.க.வும், 1 தொகுதியை டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.கவும் வைத்திருக்கின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, சென்னையின் 16 தொகுதிகளிலும் தி.மு.க.வே போட்டியிட வேகம் காட்டுகிறது. இதில் தென்சென்னை-மத்திய சென்னைக்குட்பட்ட தொகுதிகளின் நிலவரம்.

s-chennai

சைதாப்பேட்டை

சிட்டிங் எம்.எல்.ஏ.வான தி.மு.க.வின் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மீண்டும் களமிறங்க விரும்புகிறார். அடுத்துவரும் மேயர் தேர்தலில் அவரை நிறுத்தலாம் என அறிவாலயத்தில் ஆலோசிக்கப்பட்டாலும், சைதை தொகுதியை வெற்றிக் கோட்டையாக மா.சு. வைத்திருப்பதால் மீண்டும் எம்.எல்.ஏ.வாக்கலாம் என்பதே தலைமையின் முடிவு. கட்சியில் வேறு யாரும் பெரியளவில் மல்லுக்கட்டவில்லை.

Advertisment

தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் அ.தி.மு.கவின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி சீட் கேட்க நினைத்திருக்கிறார். ஆனால், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மற்றும் சென்னை அதிமுக மா.செ.க்கள் 4 பேர், சைதை துரைசாமிக்கு எதிராக கம்பு சுழற்றியிருக்கிறார்கள். மாவட்ட துணைச் செயலாளர் கடும்பாடிக்கும், ஓ.பி. எஸ்.சின் ஆதரவாளருமான எம்.எம்.பாபுவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. 1996-ல் சுயேட்சையாகவே கவுன்சிலரான கடும்பாடிக்கு இப்போதும் செல்வாக்கு இருப்பதாக மேலிடத் திடம் உளவுத்துறையினர் ரிப்போர்ட் தந்துள்ளனர். ஓ.பி.எஸ் ஆதரவாளரை ஓரங்கட்டும் வகையில், இத்தொகுதியில் உள்ள வன்னியர் சமூகத்தை மனதில் வைத்து கடும்பாடிக்கு எடப்பாடி டிக் அடிக்கலாம். இத்தொகுதியை பாமகவும் குறி வைத் திருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை எதிர்த்து அ.ம. மு.க.வின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தமிழனை களமிறக்க முடிவு செய்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

வேளச்சேரி

தி.மு.க. வசமுள்ள இத்தொகுதியின் எம்.எல்.ஏ. நடிகர் வாகை சந்திரசேகர். ஐ-பேக் டீம் ரிப்போர்ட் இவருக்கு சாதகமாக இல்லையாம். தலைமை செயற்குழு உறுப்பினரான சைதை மகேஷ்குமார், பகுதி செயலாளர் சு.சேகர், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் வேளச்சேரி ஆனந்தன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட துணைச்செயலாளர் பாலவாக்கம் விஸ்வநாதன், பாலவாக்கம் சோமு ஆகியோர் தொகுதியை குறி வைக்கின்றனர். மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியனின் பரிந்துரை மகேஷ் குமாருக்கு மட்டுமே இருக்கிறது. சென்னையில் மகளிரணிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என விரும்பும் கனிமொழியின் சாய்ஸாக ரத்னா லோகேஷ்வரன் இருக் கிறார். வர்த்தக அணி இணை செயலாளர் நாட்டாமை செந்திலும் ரேஸில் இருக்கிறார்.

Advertisment

ss

அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான அவரது சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அசோக், மா.செ. விருகை ரவியின் ஆதரவாளரான பகுதிச்செயலாளர் எம்.கே.மூர்த்தி இருவருக்குமிடையேதான் மல்லுக்கட்டு. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்த முன்னாள் பொறுப்புமேயர் கராத்தே தியாகராஜனும் தொகுதி மீது கண் வைத்துள்ளார். அ.ம.மு.க.வில் சசிகலா குடும்பத்தின் விசுவாசியான நீலாங்கரை முனுசாமிக்கு இத்தொகுதியை ஒதுக்க டிக் அடித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். அரசியல் சூழல்களில் "அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணைப்பு சாத்திய மானால் டி.டி.வி.தினகரன் களமிறங்குவார்' என்கிறார்கள். "மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் போட்டியிட வேண்டும்' என அவரது கட்சியினர் வலியுறுத்துகின்றனர். அதனால் கமல் லிஸ்ட்டில் மயிலாப்பூருடன் வேளச்சேரியும் உள்ளது.

மைலாப்பூர்

அ.தி.மு.க.வின் சிட்டிங் தொகுதி இது. கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ. நடராஜ், முன்னாள் எம்.பி. மைத்ரேயன், அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் டாக்டர் ஜெயவர்த்தனன், சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன், பகுதிச்செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலெட்சுமி என ஏகப்பட்ட வி.ஐ.பி.க்கள் இத்தொகுதியை பிடிக்க வரிசையில் குவிந்துள்ளனர். இருப்பினும் மைத்ரேயனுக்கும் ஜெய வர்த்தனனுக்கும் இடையேதான் பலப்பிரயோகம் நடக்கிறது. பிராமணர்கள் வாக்கு கணிசமாக உள்ள இத்தொகுதியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கினால், அதன் துணைத் தலைவர் கரு.நாகராஜன், கலை இலக்கியப் பிரிவு தலைவர் காயத்திரி ரகுராம் இருவரிடையேதான் போட்டி அதிகரிக்கும்.

தி.மு.க. கூட்டணி கடந்தமுறை இத்தொகுதியை காங்கிரஸின் கராத்தே தியாகராஜனுக்கு ஒதுக்கி இழந்தது. அதனால் இந்தமுறை தி.மு.க.வே களமிறங்க முடிவு செய்துள்ளது. மா.செ.வான மயிலை வேலுதான் முதல் சாய்ஸ். அதே நேரத்தில், காங்கிரசும் இத்தொகுதிக்காக மல்லுக்கட்டுகிறது.

ஆயிரம் விளக்கு

தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ. கு.க.செல்வம், பாஜ.க.வுக்குப் போனதால், "தீவிர விசுவாசிக்கே சீட்' என்ற குரல் உ.பி.க்களிட மிருந்து ஒலிக்கிறது. 40 ஆண்டுகாலமாக கட்சிப் பணியாற்றும் பகுதி செயலாளர் மா.ப. அன்புதுரை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அசன்முகமது ஜின்னா, மற்றொரு ப.செ. அகஸ்டின், தென்சென்னையின் இளைஞரணி முன்னாள் அமைப் பாளரும் பொதுக்குழு உறுப்பினருமான வி.எஸ்.ராஜ் ஆகியோர் இத்தொகுதியை குறி வைக்கின்றனர். கலைஞரின் நண்பரான முன்னாள் திட்டக்குழுத்துணைத் தலைவர் நாகநாதன் மகனும், கலைஞருக்கு சிகிச்சை அளித்தவருமான டாக்டர் எழிலன் பெயர் தீவிரமாக அடிபடுகிறது. இதற்கிடையே, மாவட்டச் செயலாளர் சிற்றரசு தீவிரம் காட்டுவதுடன், சித்தரஞ்சன் சாலை இல்லத்தின் சிபாரிசை எதிர்பார்த்திருக்கிறார். அவர் மா.செ.வாக்கப்பட்டபோதே சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டதாக உ.பி.க்களிடம் முணுமுணுப்பு இருந்தது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, கோபாலபுரம் கலைஞர் குடும்பத்தினர் ஆகியோருக்கு வாக்குரிமை உள்ள இத்தொகுதியின் வேட்பாளரை முடிவு செய்வதில் மு.க.ஸ்டாலின் மிக கவனமாக இருக்கிறார் என்கிறது அறிவாலயம்.

அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஓ.பி.எஸ். ஆதரவில் மா.செ. ஆதிராஜாராம், அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.கே.வின் மகன் முகில் உள்பட 12 பேர் சீட் கேட்டு கோதாவில் குதிக்க தயாராகி யிருக்கிறார்கள். எடப்பாடியின் சிபாரிசில் வலம் வரும் வளர்மதிக்கும் ஓபிஎஸ் சிபாரிசில் வலம்வரும் ஆதிராஜாராமுக்கும்தான் பலத்த போட்டி.

s

விருகம்பாக்கம்

வன்னியர் சமூக பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. மா.செ. விருகை ரவி. "முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர் வேலுமணியின் வலதுகரமாக இருப்ப தால் மீண்டும் தமக்கே வாய்ப்பு' என தெம்பாக இருக்கிறார். ஆனால், உளவுத்துறையின் ரிப்போர்ட் இவருக்கு எதிர்மறையாக இருக்கிறது. இவரிட மிருந்து தொகுதியை கைப்பற்ற அண்ணா தொழிற் சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன், ஓ.பி.எஸ். சிபாரிசில் முன்னாள் கவுன்சிலர் ஸ்டார் குணசேக ரன், பகுதி செயலாளர்கள் மலைராஜன், காமராஜ் (வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜாவின் சகோதரர்) ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர்.

தி.மு.க.வில் இருமுறை வாய்ப்பு கிடைத்தும் வெற்றியை இழந்த தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகர், வணிகர் சங்க விக்கிரமராஜாவின் மகனும் இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான பிரபாகர்ராஜா (விக்கிரம ராஜாவின் மகன்), எம்.பி.ஜெகத்ரட்சகனின் சிபாரிசில் வர்த்தகர் அணியின் காசிமுத்து மாணிக்கம், பகுதிச்செயலாளர் கண்ணன், தொழிலதிபரான வட்ட பொருளாளர் கதிரேசன் ஆகியோர் மல்லுக்கட்டுகிறார்கள். இத்தொகுதிக் கான வெற்றி வேட்பாளரை தேர்வு செய்வதில் கட்சித்தலைமை ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

தியாகராய நகர்

அ.தி.மு.க. வசமிருக்கிறது இந்த தொகுதி. மா.செ.வும் அதிரடி பிரமுகருமான சத்யா என்கிற சத்யநாராயணன், இத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.! முதல்வர் எடப்பாடி, அமைச்சர் வேலுமணி ஆகியோ ரின் வலதுகரம் என சொல்லப்படும் இவர், மீண்டும் இத்தொகுதியை குறி வைக்கிறார். இவருக்கு எதிராக அரசியல் செய்த வர்களை பொறுப்புகளிலிருந்து களை எடுத்துவிட்ட தால் இவரோடு மல்லுக்கட்ட வலிமையான ஆட்கள் இல்லை. சென்னையில் 4 தொகுதிகளை அதிமுகவிட மிருந்து வாங்கிவிட வேண்டும் என திட்டமிட்டிருக்கும் பா.ஜ.க. குறிவைக்கும் தொகுதிகளில் தி.நகர் முக்கியமானது. அதனால் சத்யாவின் பார்வையில் அண்ணாநகர் ஆயிரம் விளக்கு தொகுதிகளும் உள்ளன.

தி.மு.க.வில் முன்னாள் மாவட்ட செயலாளர் மறைந்த ஜெ.அன்பழகனின் மகனும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான ராஜா, ஜெ.அன்பழகனின் சகோதரரான பகுதிச் செயலாளர் கருணாநிதி, என்.வி.என் சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி ஆகியோர் தொகுதியை கைப்பற்ற தீவிரமாக இருக்கிறார்கள்.

s

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

முஸ்லிம் மதத்தினர் அடர்த்தியாக உள்ள தொகுதி இது. மீனவர்கள், பிராமணர்கள் கணிசமாக இருக்கின்றனர். தி.மு.க. ஜெ.அன்பழகன் ஜெயித்த இந்த தொகுதி, அவரது மறைவால் காலி இடமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. "இந்த தொகுதியில் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் களமிறங்குகிறார்' என அறிவாலயத்தில் எதிரொலிக் கிறது. அதேசமயம், பகுதிச் செயலாளர்கள் மதன்மோகன் மற்றும் காமராஜ், கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான், மாநில மருத்துவ அணி துணைச்செயலாளரும் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மகனுமான டாக்டர் சுபேர்கான் ஆகியோரும் தொகுதியை குறி வைக்கின்றனர்.

அ.தி.மு.க.வில் இந்த தொகுதியை பா.ஜ.க.வுக்கு தள்ளிவிட தீர்மானித்திருக் கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில், தி.மு.க.வில் உதயநிதி களமிறங்கினால் அவரை எதிர்த்து நடிகை குஷ்பு அல்லது நடிகை காயத்ரி ரகுராம் ஆகிய இருவரில் ஒருவரை களமிறக்க தமிழக பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. "உதயநிதி இல்லை எனில் பா.ஜ.க.வின் மீனவர் அணி மாநில தலைவர் சதிஷ்குமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்' என்கிறார்கள் கமலாலய தரப்பினர். அ.ம.மு.க. சார்பில் மா.செ. எல். ராஜேந்திரனை டிக் அடித்து வைத்திருக் கிறார் டி.டி.வி.தினகரன்.

எழும்பூர் (தனி)

தலித் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் தி.மு.க. கே.எஸ். ரவிச்சந்தி ரன். சித்தரஞ்சன் சாலையின் சிபாரிசில் மீண்டும் சீட் பெறும் நம்பிக்கையில் உள்ளார். அதேசமயம், வழக்கறிஞர் பரந்தாமன், செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, முன் னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம் வழுதியின் மகன் இளம்சுருதி ஆகியோரும் எழும்பூரை பிடிக்க பகீரத முயற்சியில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் இந்த தொகுதிக்காக மல்லுக் கட்ட ர.ர.க்கள் பெரியளவில் தயாராகவில்லை. சசிகலாவின் வருகையால் "அ.தி.மு.க.வில் நடப்பதைப் பொறுத்து சீட் விசயத்தில் கவனம் செலுத்தலாம்' என அமைதி காக்கின்றனர்.

அண்ணா நகர்

பெரும் பணக்காரர்களும் படித்தவர்களும் அதிகமுள்ள இத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தி.மு.க.வின் மோகன். இம்முறை அவரது மகன் கார்த்திக்கு தலைமையின் சிக்னல் சாதகமாக உள்ளது. உடன்பிறப்புகள் பலரும் உதயநிதி பெயரிலும் இவர் பெயரிலும் பணம் கட்ட ரெடியாக உள்ள நிலையில்... பகுதிச் செயலாளர்கள் ராமலிங்கமும் பரமசிவமும் சீட் கேட்கும் லிஸ்டில் இருக்கின்றனர்.

அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மாநில மாணவர் அணிச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான விஜயக்குமார் இருவரிடையேதான் போட்டி அதிகரித்திருக்கிறது. ‘"சசிகலாவுக்கு ஆதரவாக சமீபத்தில் கோகுலஇந்திரா பேசியதை எடப்பாடியும் கொங்கு அமைச்சர்களும் ரசிக்கவில்லை' என்கிறார்கள் அ.தி.மு.க.வில். அ.ம.மு.க. சார்பில் மா.செ. சுகுமார்பாபுவை இத்தொகுதிக்காக தேர்வு வைத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்,

ss

சோழிங்கநல்லூர்

தொழிற்நிறுவனங்கள் பெருத்துக்கிடக்கும் இத்தொகுதியை தி.மு.க. கைப்பற்றி வைத் திருக்கிறது. சாதிரீதியாக கணக்கிட்டால் வன்னியர் சமூகம் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், தொகுதியை மீண்டும் கைப்பற்ற துடிக்கிறார். மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியனின் பரிந்துரையும் இவருக்கே இருக்கிறது. ஆனால், மாநில துணைச்செயலாளர் பாலவாக்கம் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் மேடவாக்கம் ரவி, பகுதி செயலாளர் பெருங்குடி ரவிச்சந்திரன் ஆகியோரும் கோதாவில் இருக்கிறார்கள். இதில் மாற்று சாய்ஸாக வேளச்சேரியையும் குறிவைத்துள்ளார் பாலவாக்கம் விஸ்வநாதன்.

அ.தி.மு.க.வில் "முன்னாள் எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான கே.பி. கந்தனுக்கு சீட்' என்கிறார்கள். எடப்பாடியின் வலதுகரமாக சென்னையில் இயங்கும் கந்தனுக்கு, எடப்பாடி சிக்னல் கொடுத்திருப்பதால், ஏக குஷியில் இருக்கிறார் கந்தன்.