தேர்தல் களம் பரபரப்பானபோதே நக்கீரன் தமிழக மக்களின் நாடித்துடிப்பைத் தொடர்ச்சியான சர்வேக்கள் வாயிலாக வெளியிட்டு வந்தது. புதிய வாக்காளர்கள் மனநிலை, ஆளுங்கட்சியின் அறிவிப்புகள், அமைச்சர்களின் தொகுதி நிலவரம், இரண்டு கழகங்களின் தேர்தல் அறிக்கை என ஒவ்வொன்றையும் தமிழகம் தழுவிய அளவில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் வாயிலாக வழங்கினோம். அதன் முத்தாய்ப்பாக, அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 234 தொகுதிகளிலும் யார் யாருக்கு முன்னிலை என்பதை விளக்கும் ஸ்பெஷல் சர்வேயும் வெளியிடப்பட்டது.

18+

வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில், பெரும்பாலான தொகுதிகளிலும் போட்டிகள் கூர்மையடைந்துள்ளன. களத்தில் பலர் நின்றாலும் பெரும்பாலான தொகுதிகளில் இருமுனைப் போட்டியும் ஒருசிலவற்றில் மும்முனைப் போட்டியும் நிலவுகிறது. ஆளுந்தரப்பின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் களமிறங்கியுள்ள கட்சியின் தாக்கம் இரண்டு அணிகளுக்கும் சவாலாக இருப்பதுடன் தென் மாவட்டங்களில் சேதார சக்தியாக செயல்படுகிறது.

ஆளுங்கட்சி தன் சாதனைகளை சொல்லியும், அதன் ஊழல்கள் எதிர்க்கட்சிக் கூட் டணியும் முன்வைத்து வந்த நிலையைக் கடந்து, சர்ச்சைக் குரிய பேச்சுகளை வைரலாக்கி களத்தை மாற்றும் முயற்சிகளும் தீவிர மெடுத்தன. தனி மனித தாக்குதல்கள் எல்லை கடந்த அளவில் சென்றன.

Advertisment

இரு பெரிய கட்சிகளின் கூட் டணியில் உள்ள தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து பரப்புரைகளை மேற்கொண்டு தாக் கத்தை ஏற்படுத்த முயன்றனர். கொளுத்தும் வெயிலில் வேட்பாளர்கள் தெருத் தெருவாக -வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்ததுடன், ஊடகங்களைக் கவரும் வகையில் புதுமையான -கேளிக்கையான முயற்சிகள் பலவற்றையும் மேற்கொண்டனர்.

வெளிப்படையாக நடந்த இத்தகைய பரப்புரைகளுக்கிடையே, வாக்காளர்களை தம் வசப்படுத்த, ஓட்டுக்கு நோட்டு என்ற ஆயுதமும் கையில் எடுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை மீறியும் -அதிகாரிகள் கண்டுகொள்ளாதபடியும் பணப்பட்டுவாடா வேகம் பெற்றது.

cm

Advertisment

தி.மு.க. தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த பலரது வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறை நடத்திய அதிரடி ரெய்டும் அதிர வைத்தது.

இவை அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து, 2021 தமிழக சட்டமன்றத்தின் கடைசிக் கட்ட நிலவரம் எப்படி இருக்கிறது என்பதையறிய 234 தொகுதிகளிலும் களமிறங்கியது உங்கள் நக்கீரன். தொகுதிக்கு 200 வாக்காளர்கள் என்ற அளவில் தொடர்ச்சியான சந்திப்புகள்-உரையாடல்கள் என அவர்களின் மனநிலையைத் துல்லியமாக அறிந்து அதன்பிறகே யாருக்கு உங்கள் வாக்கு என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

தமிழக மக்களின் மனப்போக்கு எவ்வாறு உள்ளது, தங்கள் தொகுதியில் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள், தமிழகத்தின் அடுத்த ஆட்சி யாருடையதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த மெகா சர்வே அமைந்தது.

ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளர்களின் மனசாட்சியை வெளிப்படுத்தும் வகையிலான இந்த இறுதிக்கட்ட சர்வேயை வாசகர்களுக்கு வழங்குகிறது உங்கள் நக்கீரன்.

-ஆசிரியர்