"சார், ஒரு குறும்படம் எடுத்திருக்கோம். பிரிவியூ ஷோவுக்கு வரணும்'’என்று அந்தப் படத்தின் இயக்குநர் இஜாஸும், இணை இயக்குநர் ஆதியும் அழைத்தார்கள்.
இது ஒரு முக்கியமான படம். இறந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியில் இதை எடுத்திருப்பதாக கூறியதால், படத்தைப் பார்க்கப் போனோம். படம் ஓடத் தொடங்கிய சிறிதுநேரத்தில் மதுரை தல்லாகுளம் போலீஸார் திமுதிமுவென்று வந்து, லேப்டாப், ஒளிபரப்பு சாதனங்களை வாரிக்கொண்டு போனார்கள். அதுமட்டுமின்றி படத்தின் இயக்குநர், நடிகர்கள் என எல்லோரையும் கைதுசெய்து நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.
அப்படி அந்தப் படத்தில் என்னதான் இருக்கிறது? முக்கிய அரசியல் தலைவி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அங்கு அவரைக் கொலைசெய்யத் திட்டமிடப்படுகிறது. கொலை செய்யப்படுகிறார். இதை ஜாக்குலின் என்ற மருத்துவர் பார்த்துவிடுகிறார்.
இதில் பிரச்சினையில்லை. அரசியல் தலைவியை கொலை செய்யும்படி ஒருவர் உத்தரவிடுவதுபோல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதுதான் பிரச்சனை. மேலும் குறும்படத்தில் "இவ்வளவு பெரிய மருத்துவமனையில் சி.சி.டி.வி. கூடவா இல்லை? அதை எப்படி நீக்கினார்கள்? முக்கியமான தலைவிக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் கதி என்ன?' போன்ற வசனக் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
போலீஸ் விசாரணைக்கு இடையில் இயக்குநர் இஜாஸையும், ஆதியையும் பார்த்தோம். “""படத்தை போலீஸார் முழுவதுமாக பார்த்துவிட்டார்கள். "யார், இப்படி படம் எடுக்கச் சொன்னது?' என்று துருவித் துருவி கேட்டார்கள். "எனது மனதுக்கு தோன்றிய கதையை படமாக எடுத்தேன். இது ஒரு கற்பனைக் கதைதான்'’என்று சொன்னேன். அதன்பிறகு, “"இந்தப் படத்தை யு டியூப் உட்பட எங்கும் திரையிடக்கூடாது. அப்படி திரையிட்டால் ஜென்மத்திற்கும் உள்ளேயே இருக்க வேண்டியதுதான்'’என்று மிரட்டினார்கள்.
இந்தப் படத்தில், அரசியல் தலைவியை கொலை செய்ய உத்தரவிடுபவர் ஓ.பி.எஸ். போன்ற கெட்டப்பில் இருப்பதுதான் பிரச்சினைக்கு காரணம் ஸார். அவருடைய பிரஷரால்தான் இவ்வளவும் நடப்பதாக நினைக்கிறோம்'' என்கிறார் படத்தில் நடித்துள்ள கண்ணன்.
இந்த விவகாரம் குறித்து தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் பெத்துராஜுவிடம் கேட்டோம்.…""குறும்படம் குறித்து விசாரித்தோம். அதன் ஆவணங்களை அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். பின்னர் அவர்களை விட்டுவிட்டோம். மேற்கொண்டு எதையும் கேட்கவேண்டாம்''’என்று முடித்துக்கொண்டார்.
சின்னச் சின்னதாகத்தான் சந்தேகங்கள் வெடிக்கும். பின்னர், அது பூதாகரமாக உருவெடுத்தே தீரும். மக்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதே கலைப் படைப்பு!
-அண்ணல்