உலகம் ஆச்சரியத்துடன் பார்த்த சந்திப்பு அது. 72 வயது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏறத்தாழ பாதி வயதான வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் கைலுக்க வேண்டிய சூழலுக்கு உள்ளானதுதான் ஆச்சரியத்திற்கு காரணம். 68 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபரும் வடகொரிய அதிபரும் சந்தித்து உலக அமைதிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இதற்கு முன்னும் அமெரிக்க அதிபர்கள் இதுபோல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அவற்றில் சில சந்திப்புகள் உலகின் நம்பிக்கையைச் சிதறடித்துள்ளன.
1972-ல் சீனாவின் மக்கள் தலைவர் மாவோவை அமெரிக்க அதிபர் நிக்ஸன் சந்தித்துப் பேசினார். 25 ஆண்டுகளாக சீனாவை ஒதுக்கி வைத்திருந்த- அமெரிக்க அதிபரின் சீனப் பயணம் அன்றைக்கு உலகின் புருவத்தை உயர்த்தியது.
இன்னொரு சந்திப்பு 1987 ஆம் ஆண்டு நடந்தது. வாஷிங்டனில் நடைபெற்ற அந்த சந்திப்பு சோவியத் யூனியனின் அதிபர் கோர்பசேவுக்கும், அமெரிக்க அதிபர் ரீகனுக்கும் இடையில் நடைபெற்றது. அந்தச் சந்திப்போடு சோவியத் யூனியன் படிப்படியாக சிதைந்து கோர்பசேவும் அதிபர் பதவியிலிருந்து துரத்தப்பட்டார்.
68 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒருவரை பேச்சுவார்த்தை டேபிளுக்கு வரும்படி செய்திருக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன். வடகொரியாவை "ரவுடி நாடு' என்றே அமெரிக்கா தொடர்ந்து முத்திரை குத்தியிருந்தது.
தனது தாத்தா கிம் இல் சுங், அப்பா கிம் ஜோங் இல் ஆகியோரைத் தொடர்ந்து வடகொரியாவின் அதிபரானவர் கிம் ஜோங் உன். 34 வயதுதான் ஆகிறது. ஆனால், தனது முன்னோரைக் காட்டிலும் அமெரிக்காவை படாதபாடு படுத்திவிட்டார்.
வடகொரியாவின் ராணுவரீதியிலான வளர்ச்சி எப்போதுமே அமெரிக்காவை உறுத்தி வந்திருக்கிறது. ஏனெனில் தென் கொரியாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இரண்டு கொரியாவும் இணையவேண்டும் என்பதே கொரிய மக்களின் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்ற தென் கொரியாவை தன்னுடன் இணைக்க வேண்டும் என்று வடகொரியா முயற்சிக்கிறது. சீனா, இந்தியாவுக்கு பிறகு மூன்றாவது பெரிய ராணுவத்தை அது வைத்திருக்கிறது.
கிம் ஜோங் உன் அதிபராக பதவியேற்ற பிறகு வடகொரியா வின் அணுஆயுத பலத்தை அதிகரித்தார். அணுஆயுத சோதனை களில் வடகொரியா பெற்ற வெற்றிகளில் ட்ரம்ப் காண்டாகிவிட்டார். தென்கொரியாவும், ஜப்பானும் அலறத் தொடங்கின. வடகொரியா வுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.
வடகொரியா மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை 71 சதவீத அமெரிக்கர்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் வடகொரியாவின் அணுஆயுதங்கள் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்தே, ட்ரம்ப் தனது வியூகங்களை மாற்றினார். வடகொரியாவை தாக்குவது இயலாது என்கிற முடிவுக்கு வந்தார்.
பக்கத்தில் உள்ள தென்கொரியாவுக்கு தன்னால் அச்சுறுத்தல் இல்லை என்பதை நிரூபிக்க அந்த நாட்டின் அதிபர் மூன் ஜே இன் ஐ சந்தித்தார் கிம். இதையடுத்து அமெரிக்க அதிபரையே சந்திக்கவும் தயாராக இருப்பதாக கிம் அறிவித்தார். உடனே கிம் ஜோங்குடன் பேச்சு நடத்த தயார் என்று ட்ரம்ப்பும் கூறினார். இதையடுத்து இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் மே-12ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப் பட்டது. திட்டமிட்டபடி, முதல்நாளே கழிவறை, பேனா, பென்சில், உணவுவகைகளுடன் பலத்த பாதுகாப்புடன் சிங்கப்பூர் வந்தார் கிம்.
சிங்கப்பூர் தீவுகளில் ஒன்றான சென்டோஸா (மகிழ்ச்சி) தீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மே 12-ஆம் தேதி ட்ரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு நடைபெற்றது. இருவரும் கைகுலுக்கி சிரித்துப் பேசி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
"கிம் ஒரு குள்ளமான ராக்கெட் மனிதர், குரைக்கும் நாய்'’என்று முன்னர் ட்ரம்ப் கூறியிருந்தார். "ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர்' என்று கிம் ஜோங் கிண்டலடித்திருந்தார்.
இந்தச் சந்திப்பின் முடிவில் "பழைய கசப்புகளை மறந்து புதிய மாற்றங்களை நோக்கி பயணிப்போம்' என்று கிம் ஜோங் கூறினார். வடகொரியா விரைவில் அணுஆயுதங்களை ஒழிக்கத் தொடங்கும் என்று நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
"தென்கொரியாவில் இனி கூட்டு ராணுவ நடவடிக்கை இருக்காது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு பெரிய செலவு மிச்சமாகும்' என்று ட்ரம்ப் உற்சாகமாக கூறினார். உலகப்புகழ்பெற்ற இந்த சந்திப்பு தனது நாட்டுக்கு புதிய முதலீடுகளை கொண்டுவரும் என்று கிம் ஜோங் நம்பிக்கை வெளியிட்டார். அணு ஆயுத சக்தியின் மூலம் வல்லரசான அமெரிக்காவுடன் வலுவான சமாதானத்திற்கு தயாராகியிருக்கிறார்.
இந்தச் சந்திப்பு தங்கள் நாட்டை வளப்படுத்த உதவுமா என்கிற எதிர்பார்ப்பில் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள் வடகொரியர்கள். அடுத்து என்ன நடக்கும் என உலகம் எதிர்பார்க்கிறது.
-ஆதனூர் சோழன்