-அஜிதன் சந்திரஜோதி உயிர் தொழில்நுட்பவியல் & மரபணு பொறியியல் ஆராய்ச்சி மாணவர்,

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

நீங்கள் தமிழரா? அல்லது தமிழகத்தில் வசிக்கிறீர்களா? ஒருவேளை ஆம் என்றால்... ஒன்று நீங்கள் பெரியாரை ஆதரிப்பவராக இருக்க வேண்டும்; இல்லையேல் எதிர்ப்பவராக இருக்க வேண்டும்; அல்லது ஏதேனும் ஒரு கட்சியில், இயக்கத்தில் நீங்கள் உங்களை இணைத் துக்கொண்டு அவரை தீவிரமாகக் கொண்டாடவேண்டும்; அல்லது அவரை தீவிரமாகத் தூற்றிப் பிரச்சாரமாவது செய்யவேண்டும்.

Advertisment

ff

தந்தை பெரியார் இறந்து 50 வருடங்களை நெருங்கும் நிலை யிலும் அவரைப் பற்றிய உரையாடல்கள், தேடல்கள், விவாதங்கள் இங்கே ஒருபோதும் குறைந்தபாடில்லை! அது தமிழ்நாடு தாண்டி, தேச, சர்வதேச அளவில் அகலமடைகிறதே தவிரச் சுருங்கவில்லை. ஏனெனில், அதைச் சுருங்கவிடாமல் கவனமாக நம் அருகில் அமர்ந்துகொண்டு பார்த்துக்கொண்டே இருக்கிறார் நாம் இன்று இறந்து புதைந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிற அந்த 95 வயது குடுகுடு கிழவர் தந்தை பெரியார்.

பெரியாரைப் பற்றி, பெரியார் பேசியதை பற்றி பேசுவதுதான் அப்போது மட்டுமல்ல, இப்போதும்கூட வீரியமான, சமகால அரசியல். தமிழ்நாட்டில், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜகோபாலாச்சாரியார் ஆளவேண்டுமென்றாலும் அதற்குப் பெரியாரின் சம்மதம் வேண்டும்.! வடக்கின் பிரதம அமைச்சர்களையே தெற்கிலிருந்து தீர்மானிக்கும் "கிங் மேக்கர்' காமராஜர் தமிழகத்தை ஆளவேண்டும் என்றாலும்கூட அதற்குப் பெரியாரின் ஆதரவும் வேண்டும். அண்ணா தொடங்கி, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என யார் ஆட்சிக்கட்டிலில் அமர விரும்பினாலும் அது பெரியார் திடலின் ஒத்திசைவு பெற்றே நடந்தாக வேண்டும். இல்லையேல், பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் அவரை வம்பிழுத்தாவது அரசியல் செய்யலாம். ஆக மொத்தம், இங்கே காரசார அரசியலென்றால் அது பெரியாரையொட்டியே இருக்கிறது.

Advertisment

தமிழ்நாடு ஒரு விசித்திர பூமி. இங்கே லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன, கோடிக்கணக்கான பக்தர்களும் இருக்கிறார்கள். மதச் சடங்குகள் மிகப் பிரம்மாண்டமாகப் பின்பற்றப்படும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றுதான். ஆனாலும் இங்கே பெரியார்தான் ஆட்சியைத் தீர்மானிப்பவராய் இருக்கிறார்!

நீங்கள் தமிழகத்தில் ஒருநாள் காலையில் உறங்கி எழுந்து பிறகு அன்று இரவு மீண்டும் உறங்கச் செல்லும் வரை, தேநீர்க்கடை உரை யாடலாக, செய்தித்தாள் செய்திகளாக, தொலைக்காட்சி விவாதங் களாக, அரசின் அறிக்கைகளாக, சில கட்சிகள் ஏற்படுத்தும் கலவரங் களாக, முகநூலாக, வாட்ஸப்பாக, டிவிட்டராக, புதிதாய் வந்திருக்கிற கிளப்ஹவுசாக, பெரியார் உங்கள் முன் வந்துகொண்டே இருப்பார்! பொது இடங்களில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு கருப்பு சட்டை அணிந்த மனிதர்களும் உங்களுக்குப் பெரியாரை ஞாபகப்படுத்தலாம்!

தமிழகத்தில் நடக்கும் எந்த வகையான போராட்டங்களாயிருந் தாலும் சரி.. ஜாதி ஒழிப்புக்கு, மாநிலத்தின் சுயாட்சி உரிமைக்கு, சமூகநீதி உரிமைக்கு, கல்வி உரிமைக்கு, பேச்சுரிமைக்கு என எத்தகைய உரிமைக்குமானாலும் சரி, ஜல்லிக்கட்டுப் போராட்டமானாலும் சரி, பொள்ளாச்சி கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, எத்தகைய போராட்டம் நடந்தாலும், அக்கூட்டத்தின் நடுவே அந்த வெண்தாடிக்கிழவர் பேனர்களில் உயர்ந்திருப்பார். பேனரில் கிழிக்கப்பட்டுக் கொண்டோ, எரிக்கப்பட்டுக்கொண்டோகூட இருப்பார். அவர் இல்லாமல் பொதுவெளியில் மக்கள் கூட்டம்... போராட்டம் சாத்தியமே இல்லை!

கல்லாதவர்(Uneducated)முதல் கற்றறிந்த பேரறிஞர்கள் (Intelectual)வரை இங்கே பெரியாரை துணைக்கிழுக்காமல் பேசுவதில்லை. ஏனெனில் அதுவே சரியான, முறையான, நியாய மான பாதை என்பதைத் தமிழகம் உணர்ந்து வைத்திருக்கிறது. இந்தியா உணரத்தொடங்கியிருக்கிறது. தனக்கான "நாடு' தொடங்கி... தனக்கான "சுடுகாடு' வரை பெரியார் நினைவுகூரப் படுகிறார். போராட்டக்காரர்களின் கைகளில் ஆயுதமாய் மின்னு கிறார். ஆம், நீங்கள் இங்கே பெரியாரை விட்டுவிட்டு கடந்து சென்றுவிடவே முடியாது. தமிழர்களான நீங்கள் அம்பேத்கர், மார்க்ஸ் என இங்கே உலகின் எந்த புரட்சிகர கொள்கை யாளரை, கருத்தாளரை உங்கள் அறிவுத் தேடலால் பின்பற்று பவர்களானாலும் சரி... பெரியாரைக் கடந்து வருவீர்கள்.

இங்கே முதல்வர்களாக, கட்சியின் தலைவர்களாக, பிரதமர்களாக இருந்தவர்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடு கிறார்களோ இல்லையோ, பெரியாரின் பிறந்தநாள் தமிழ்நாடு எங்கும் சீரும் சிறப்புமாகப் பட்டாசு வெடித்து, கருப்பு சட்டை கள் அணிந்து பொங்கலிட்டு துள்ளலோடு கொண்டாடப்படு கிறது! அதுவும், இன்றைய 2ஃ கிட்ஸ்களும், தலை நரைத்த கிழவர்களும் ஒன்றாய்ச் சேர்ந்தே நெகிழ்ச்சியோடு கொண் டாடும் ஒரு தலைவரை வேறெங்கும் காண்பது அரிது!.

00

ஆட்சி அதிகாரம் வேண்டாம் என்றவர் அந்த கிழவர். ஒரு வார்டு கவுன்சிலர் அலுவலகத்தில்கூட அதிகாரியாய் அமர நாற்காலி விரும்பாதவர். ஆனால் உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட மாபெரும் ஜனநாயக நாடான இந்தியத் துணைக்கண்டத்தின் பேரரசன் வீற்றிருக்கும் மிகஉயர்ந்த 'நாடாளுமன்றத்தில்... "தந்தை பெரியார் வாழ்க! ஜெய் பெரியார்!' என்ற கோஷங்கள் வானைப் பிளக்கின்றன. அந்த கோஷத்துக்கு எதிர் கோசமாய் "ஜெய் ஸ்ரீராம்' என்று சாட்சாத் அந்த எல்லாம்வல்ல கடவுளையே பெரியாருக்கு எதிராக நிறுத்துகிறார்கள் இந்தியாவை ஆள்பவர்கள். ஆம்! இங்கே பெரியாரைச் சமாளிக்கக் கடவுள்தான் வரவேண்டும். மனிதராய் பிறந்த வேறெந்த தலைவருக்கும் அவ்வுரிமையை அவாள்களே தருவதில்லை.

அப்படி என்னதான் செய்தார் அந்த குடுகுடு கிழவர்?

ஒன்றுமே அல்ல... கேள்வி கேட்டார்... மீண் டும் கேள்வி கேட்டார்... மீண்டும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார், அவ்வளவே!

dd

அவர் கேட்ட கேள்விகளுக்கு இப்போது வரை முழுமையான பதிலைச் சொல்ல முடிய வில்லை. அவ்வளவு சிக்கலான, நுட்பமான, கடினமான ஒரு நீண்ட தேர்வை இந்த சமூகத்திற்குப் பெரியார் விட்டுச்சென்றிருக்கிறார். அதைப் பெரும்பாலும் யாரும் எழுதத் துணிவதில்லை, எழுதுபவர்களும் முழு மதிப்பெண் எடுப்பதில்லை.

அவரது தேர்வு யாராலும் காப்பியடிக்க முடியாதபடி நாளுக்குநாள் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. அது, ஒரு பிராமணர் அவரைவிடச் சாதியில் கீழானவன் என்று கருதும் ஒரு முதலாளியை மிரட்டும்போதும், அம்முதலாளி, அவரைவிடக் கீழானவன் என்று கருதும் தொழிலாளியை மிரட்டும் போதும், அத்தொழிலாளி, தன்னை விடக் கீழானவன் என்று கருதும் பணியாளை மிரட்டும்போதும், அப்பணியாள், தான் ஆண் என்ப தால் தனது மனைவியைத் தனக்குக் கீழானவள் என்று கருதும்போதும், அம்மனைவி மூத்தவர் என்பதால், தன் குழந்தைகளை, இளைஞர் களைக் கீழானவர்கள் என்று கருதும்போதும், என வாழ்வின் ஒவ்வொரு அடுக்கிலும் எழுப்பப் படும் அதிகார மிரட்டல்களுக்கு எதிராகப் பெரியார் தனது தடி கொண்டு "சுளீர்' என்று ஒரு அடி அடித்து, அவர்களுடைய கைகளில் அவரது வினாத்தாளைச் சொருகி வைத்துவிடுகிறார்.

அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விடுதலைக்காக மட்டுமல்ல தர்க்கரீதியிலான அறி வியல் மனப்பான்மையும், மனிதநேயமும், காட்டுமிராண்டித்தனம் ஒழிவதற்கும் எனச் சேர்த்து ஒருவருடைய விடுதலை அச்சமூகத்தை விடுதலையடையச் செய்ததா என்ற வினாத்தாளை யும் பார்ப்பனர், முதலாளி தொடங்கி பெண்கள், இளைஞர்கள் என தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு வர் கைகளிலும் சொருகி வைத்துவிடுகிறார் பெரியார்.

ஆம்! அவரின் வினாத்தாள் உங்களை உறுத்திக்கொண்டே இருக்கும். நீங்கள் ஜாலியாக தொலைக்காட்சி பார்க்கும்போது உங்கள் தங்கை வேர்வை சிந்த வீடு பெருக்கிக் கொண்டிருப்பாள். அந்த வீடு கூட்டும் விளக்குமாற்றின் சத்தம் உங்கள் காதுகளைக் குத்திக் கிழிக்கலாம். ஏனெனில், அது சத்தம் மட்டும் அல்ல, பெரியாரின் கேள்விகள்.

"கடமுட' சத்தத்துடன் அம்மா பாத்திரம் துலக்கிக்கொண்டிருப் பார். அப்போது அப்பாத் திரத்தின் சத்தமாக, பெரியாரின் கேள்வித்தாள் உங்கள் காதுகளை இடிக்க லாம். நாகரிக உடையணிந்து கறைபடாமல் காரில் செல் லும் உங்கள் பார்வையில் சட்டென்று குறுக்கே செல் லும் துப்புரவுத் தொழி லாளியின் கரத்திலிருக்கும் கடப்பாரை நெம்பும்போது எழும் சத்தம், உங்களை பெரியாரின் கேள்வியாக மாறி, காரைத் துரத்தியபடி செல்லுமிடமெல்லாம் வரும்.

இப்படி, வீட்டிற்குள் ளும், வீட்டிற்கு வெளியிலும் இன்னும் சொல்லப்போனால் உங்கள் மனைவியோடு இருக்கும்போதும் கூட அவளுக்கான உரிமைகளை நான் சரிவர அளிக்கிறேனா, அவளுக்கு அதிக துன்பம் தருகிறேனா, எனது அடிமை யாக அவளைக் கருதுகிறேனா, அவளுக்கு சம உரிமை கொடுக்கிறேனா என்றெல்லாம் அவளது உரிமை குறித்து உங்களை சிந்திக்கத் தூண்டும்! இப்படியாக, பெரியார் உங்களோடு எந்நேரமும் பேசிக்கொண்டே இருப்பார். அவர் கேள்விகள் உங்கள் காதுகளை வட்டமிட்டுக்கொண்டே இருக்கும்! நீங்கள் அதற்குச் சரியான முழு பதிலையும் எழுதும்வரை அந்த கிழவர் உங்களை விட்டு நகரவேமாட்டார். நீங்கள் எழுதிவிட்டால் அவரும் மறைந்துவிடுவார். பிறகு பெரியார், பெரியார் என்று பேசவோ சிந்திக்கவோ தேவையிருக்காது. முடிந்தால் முயன்று பாருங்களேன்!