சென்னை -தமிழகத்தின் தலைநகரமாக விளங்குவதால் பெரும் பான்மையான தொழில் நிறுவனங்கள் மையம் கொண்டுள்ள இடமாக உள்ளது. சட்டரீதியான தொழிலைப் போலவே, சட்டத்துக்கு விரோதமான தொழில்களும் இங்கு உண்டு. அதை மேற்கொள்வதற்கும், அதில் கோலோச்சுவதற்கும் என கீர்த்திமிக்க ரவுடிகளும் உண்டு. அந்த வகையில் சென்னையை நான்காகப் பிரித்து அவரவர் பகுதியைக் கட்டுகோப்பாக வைத்துக்கொள்வதிலும், தம் பகுதியில் மற்றவர்களை அனுமதிக் காமல் பார்த்துக்கொள்வதிலும் ஒருவருக்கொருவர் மோதலும் கொலையும் நிகழ்வது நிழல் உலகில் சகஜம்.

சென்னையில் கிழக்கு, மேற்கு, தெற்கு பகுதியில் கிடைக்கும் ஒட்டு மொத்த வருமானத்தைக் காட்டிலும், வடசென்னை பகுதியில் கிட்டும் வருவாய் அதிகம். அதற்கு முழு காரணமாக விளங்குவது எண்ணூர் துறைமுகம், அனல் மின்நிலையம் போன்ற தொழில் நிறுவனங்கள், அதையொட்டிய வருவாய் வாய்ப்பு கள். தற்போது வடசென்னை ரவுடிகளின் முக்கிய தலையாக விளங்குவது எண்ணூர் தனசேகரன், காக்காத்தோப்பு பாலாஜி, சம்பவ செந்தில், பாம் சரவணன் போன்றோர். இதில் எண்ணூர் தனசேக ரின் வளர்ச்சி பாம் சரவணன், சம்பவ செந்திலுக்கு ஆகாது. அதேபோல காக்காத்தோப்பு பாலாஜிக்கும் சம்பவ செந்திலுக் கும் ஆகாது. எதிரிக்கு எதிரி நட்புக்கொண்டு மற்றவர்களை எப்போது காலி செய்யலாம் என எப்போதும் திட்டங்கள் வகுக்கப்பட்டபடியே இருக்கும்.

ff

Advertisment

வடசென்னையில் எண்ணூர் துறைமுகத்தை தன் கையில் வைத்து வலம்வரும் தனசேகரனைத் தாண்டி ஒருவரும் அங்கே வசூல் செய்ய முடியாது. அப்படி உள்ளே வந்தால் அவர் உயிருக்கு உத்தரவாதம் கிடை யாது. எப்படியாவது எண்ணூர் தனசேகரனை டம்மியாக்கவேண்டும் என ஜேம்ஸ், சம்பவ செந்திலை எண்ணூர் பகுதிக்கு உள்ளே கொண்டுவந்து, இனி தனசேகர் இல்லை, எல்லாம் சம்பவ செந் தில்தான் என தன சேகருக்கு மிரட்டல் கொடுக்கவே, ஆத்திரமடைந்த எண்ணூர் தனசேகரன், ஜேம்ஸை வெட்டி விரட்டினார். அடிவாங்கிய ஜேம்ஸ் அடுத்தகட்டமாக சம்பவ செந்திலிடம் நடந்ததைச் சொல்லி 25 லட்சம் பணம் கொடுத்து தனசேகரனை போட்டுத்தள்ள முடிவுசெய்தார். இதையறிந்த எண்ணூர் தனசேகரன் ஜேம்ஸை கொலை செய்தார். இதேபோல 2015-ஆம் ஆண்டு தனசேகரன், நாகேந்திரன், சீசிங் ராஜா, ஆற்காடு சுரேஷ் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து தென்னு என்கிற தென்னரசை வெட்டி வீசினர். இதை மனதில் வைத்து, தென்னரசின் தம்பி, பாம் சரவணன் மற்றும் முத்துசரவணன், டி.டி.ராஜேஸ் உள்ளடக்கிய டீம், தனசேகரனை போட்டுத்தள்ள முடிவு செய்தனர்.

எண்ணூர் தனசேகரன் இருக்கும்வரை காட்டுப்பள்ளியில் கோலோச்ச முடியாது எனும் காரணத்தால், பல்வேறு திட்டங்களை வகுத்து வாய்ப்புகளை அலசியபடி காத்திருந்தார் பாம் சரவணன். சென்ற வருடம் திருச்சியில் தீபாவளிப் பண்டிகையின்போது தனசேகரனை போலீசார் கைதுசெய்தனர்.

அதுமுதற்கொண்டு பாம் சரவணன், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளியை தன் வசம் கொண்டுவர வேண்டும் என திட்டம் தீட்டி வந்துள்ளார். ஆனால் தனசேகரன் உள்ளே இருந்துகொண்டே டீலிங் மற்றும் தன் ராஜ்ஜியங்களை சரிவர நிர்வகித்துவந்துள்ளார். தனசேகரனுக்கு பணிகளைச் செய்யும் வலது கை மாதிரியான நபர்களைப் போட முடிவு செய்த பாம் சரவணன், தனசேகரின் மீது கோபத்தில் இருக்கும் தனசேகரின் சொந்தக்காரனான சுந்தரை வைத்து கொரண்டகரை ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரை லாரி ஏற்றிக் கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து தனசேகரனுக்கு எதிரியான சம்பவ செந்திலும், பாம் சரவணனும் கூட்டு சேர்ந்து கடலூர் சிறையிலிருக்கும் எண்ணூர் தனசேகரனை போட்டுத்தள்ள திட்டமிட்டுள்ளார்களாம்.

எண்ணூர் தனசேகரன் மீது ஒட்டுமொத்தமாக 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதற்காக கடலூர் சிறையிலிருந்து பொன்னேரி, திருவொற்றியூர், சென்னை உயர்நீதிமன்றம் என வரும் வழியில் எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்பது அவர்களது திட்டம். முன்புபோன்று குற்ற வாளிகளை போலீஸ் பலத்த பாதுகாப்புடன் கூட்டிவருவதில்லையாம். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தியோ இல்லையென்றால் சிறையிலோ வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இந்த ஸ்கெட்சுக்கு போலீஸ் தரப்பிலும் சிலரின் ஆசி உண்டாம். அதனால் முழுவீச்சாக மதுரபாலா டீம் களம் கண்டுள்ளது. இந்த தகவலை அறிந்த தனசேகரன், பாம் சரவணனைப் போட்டுத்தள்ள வெளியேயுள்ள தன் ஆதரவாளர்களைத் திரட்டியுள்ளாராம்.

இருவரில் யார் திட்டம் வெற்றி பெற்றாலும் அது சிக்கல்தான். இந்த டான்களின் மோதலை, போலீஸ் ஓரமாக ஒதுங்கி வேடிக்கை பார்க்காமல், சரியானபடி திட்டமிட்டு கொலை முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிந்து, ரவுடிகள் ராஜ்ஜியத்தை ஒடுக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு!