கொங்கு மண்டலத்தில் முக்கியமான மாநகராட்சி என்றால் அது தந்தை பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மாநகராட்சிதான்.
உலக அளவில் மஞ்சளையும், ஜவுளி யையும் ஏற்றுமதி செய்யும் இந்த ஈரோட்டின் அடுத்த மேயர் யார்? என்கிற கேள்விக்கு அனைத்துக் கட்சிகளும், "எங்க கட்சியிலிருந்துதான்' என கை தூக்கவே விரும்புகின்றன. மேயர் பதவி ஆண்களுக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க., அ.தி.மு.க. வட்டாரத்தில் இருந்துவந்த நிலையில், பெண் மேயர் என்ற அறிவிப்பு அ.தி.மு.க.வைவிட தி.மு.க.வினருக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத் துள்ளது.
இந்த மாநகராட்சி நகராட்சியாய் இருக்கும்போதும், மாநகராட்சியாய் தரம் உயர்ந்தபோதும் தி.மு.க. தான் நகராட்சித் தலைவராக, மேயராக பதவியில் வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தது. கடந்த 2011-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு தி.மு.க.வின் கைகளிலிருந்த மேயர் செங்கோலைப் பிடுங்கிக்கொண்டு அ.தி.மு.க.வின் மல்லிகா பரமசிவம் மேயராக ஆனார்.
அதற்குப்பின் வந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் ஒரு இடத்தைக் கூட தி.மு.க.வால் பிடிக்கமுடியவில்லை. ஈரோடு மாவட்டத்தையே அ.தி.மு.க. ஒரு மலைப்பாம்பு போல விழுங்கிக்கொண்டது. இப்போதும் ஈரோடு மாநகராட்சியை விழுங்கிவிட வேண்டுமென்று அ.தி.மு.க.வின் எடப்பாடி விசுவாசிகள் கணக்குப் போட்டு வருகிறார்கள்
ஸ்மார்ட் சிட்டி திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் என்கிற பெயரில் குழியை தோண்டிப் போட்டாரே தவிர, அந்த குழிகளின் நிலை என்னவாயிற்று என்பதை மல்லிகா எட்டிக்கூடப் பார்க்கவில்லை. இதனால் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவத்துக்கு சீட் கிடைப்பதே சிரமம் என்கிறார்கள் ர.ர.க்களே. அதே போல அ.தி.மு.க.வின் துணைமேயராய் இருந்த கே.சி. பழனிச்சாமி, தன் மனைவி நிர்மலாதேவியை எப்படியும் மேயராக்கிவிட மல்லுக்கட்டிவருகிறார்.
முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநகர் மாவட்டச் செயலாளருமான கே.வி ராமலிங்கம் தனது மகள், அல்லது மருமகளை மேயராக்க கனவு காண்கிறார். முன்னாள் மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன் இப்போதும் மண்டலத் தலைவராக வரவேண்டும் என காய்நகர்த்து கிறார்கள். கேசவமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, எக்ஸ் எம்.எல்.ஏ. தென்னரசு மகள் கலையரசு, சூரம்பட்டி ஜெகதீஷ், வீரா.செந்தில் இப்படி அ.தி.மு.க.வில் மேயர், துணை மேயர், கவுன்சிலர் கனவு காணும் ர.ர.க்கள் பட்டியல் நீள்கிறது.
தற்போது ஆட்சியிலுள்ள தி.மு.க. ஏற்கனவே விட்ட இடத்தைப் பிடிக்க தீவிரம் காட்டுகிறது. ஈரோடு நகராட்சியாய் இருக்கும்போது இரண்டு முறை சேர்மனாக இருந்த அரங்க ராசனின் குடும்பத் திலிருந்து மேய ராக வர விரும்பு கிறார் அவரது மகளும் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளருமான செல்லப்பொன்னி மனோகரன். அவ ருக்கு மேயர் சீட் கிடைக்கும் என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். அமைச்சர் முத்து சாமியின் நிழலா கப் பின்தொடரும் மாநகரச் செயலாளர் காசிபாளையம் சுப்பிரமணி, அவரது மனைவி நாக ரத்தினத்திற்கு மினிஸ்டர் மூலம் சீட் வாங்கிவிடுவேன் என எல்லோரிடமும் நெஞ்சை நிமிர்த்துகிறார். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை வீரமணியும் ரேஸில் உள்ளார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி, தனது மனைவி மணிமேகலைக்கும், அதே தலைமைச் செயற்குழு உறுப்பினரான மணிராஜ், தனது மனைவி கோகிலவாணிக்கும் சீட் கேட்டு நிற்கிறார்கள். மாவட்ட பொருளாளர் ப.க.பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் ராமச்சந்திரன், வீரப்பன்சத்திரம் பகுதிச் செயலாளர் வி.சி.நடராஜ், கருங்கல்பாளையம் பகுதிச் செயலாளர் குறிஞ்சி தண்டபாணி, பெரியசேமூர் காட்டு சுப்பு, சத்திரம் அருண், கருங் கல்பாளையம் வழக்கறிஞர் ரமேஷ்குமார், பெரியார் நகர் அக்னிசந்ரு, இப்படி முக்கிய உ.பி.க்கள் பலரும் துணை மேயர், மண்டலத் தலைவர் கனவில் உறுதியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு டஜன் உ.பி.க்கள் கவுன்சிலர் சீட் எதிர்பார்க்க மாவட்ட அமைச்சரான சு.முத்துச்சாமி, "ஏப்பா உங்களுக்குள்ளயே பேசிமுடிச்சுக்குங்க. எனக்கு டென்சனை ஏற்படுத்தாதீங்க...'' என உ.பி.க்கள் பஞ்சாயத்திலிருந்து ஒதுங்கிப் போகிறாராம்.
இந்த நிலையில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 12 கவுன்சிலர்கள் சீட்டும், துணைமேயர் சீட்டையும் கேட்கிறது. "துணை மேயர் இருக்கட்டும், முடிந்தவரை மூன்று கவுன்சிலர் வெற்றிபெற முடியுமானு பாருங்க'' என காங்கிரசுக்கு தி.மு.க. தரப்பிலிருந்து பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் சி.பி.ஐ., சி.பி.எம்., கொ.ம.தே.க. என கூட்டணிக் கட்சிகளுக்கு தலா இரு இடங்களை ஒதுக்க தி.மு.க. முடிவுசெய்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ஜ.க., ஈரோடு மேயர் வாய்ப்பை எங்களுக்கே கொடுக்கவேண்டும் என அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கோரிக்கை வைக்க, "இந்த தேர்தல்ல நாங்க 10 கவுன்சிலர் மட்டும் நிற்கிறோம் மீதி 50 கவுன்சிலர் இடங்களில் நீங்களே நின்னு ஜெயிச்சு வாங்க. அப்புறம் நீங்கதானே மேயர்' என அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வினரிடம் கூறியிருக்கின்றனர். பா.ஜ.க. தரப்பு கப்சிப்பாகி விட்டது.
பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டின் மேயர் பதவியை தமிழகத்தின் பிரதான திராவிடக் கட்சிகளில் எது கைப்பற்றப்போகிறது என்பதை பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.