புதிய அரசின் பதவியேற்பு நிகழ்வினை எளிமையாக நடத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது தமிழக ராஜ்பவன். முதல்வர் உள்ளிட்ட 35 அமைச்சர்கள் வரை பதவியேற்கக் கூடும் என்றும் எதிர்பார்ப்பு நிலவியது.
தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக எக்ஸிட் போல் முடிவுகள் வந்தபோதே தலைமைச்செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயரதிகாரிகள் பலரும் அதிரடியாக மாற்றப்படவிருக்கிறார்கள் என்றும், புதிய தலைமைச் செயலாளர் யார் என்றும் கோட்டையில் பரபரப்பு தொடங்கிவிட்டது.
அரசு நிர்வாகத்தின் தலையாக கருதப்படுபவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். தமிழக அரசில் தற்போது 1985-ஆம் வருட பேட்ஜ் முதல் 2019-ஆம் வருட பேட்ஜ் வரையிலான 312 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கின்றனர். இவர்களில் 1985 முதல் 1990 ஆம் வருட பேட்ஜ் அதிகாரிகளாக இருக்கும் 27 ஐ.ஏ.எஸ்.கள்தான் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்களிலிருந்து ஒருவர்தான் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவர்.
புதிய தலைமைச் செயலாளர் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? என்பது குறித்து கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, "ஆட்சி மாற்றம் நிகழும் பட்சத்தில் புதிய அரசு பதவியேற்றதற்கு பிறகு தங்களுக்கு அனுசரணையாக இருக்கும் உயரதிகாரி ஒருவரைத்தான் தலைமைச் செயலாளராக நியமிக்க விரும்புவார் முதலமைச்சர்.
அந்த வகையில், தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் ராஜீவ் ரஞ்சன் 1985-ஆம் வருட பேட்ஜ் அதிகாரி. இவரது பேட்ஜில் டாக்டர் ஜக்மோகன்சிங் ராஜு மட்டுமே இருக்கிறார். எடப்பாடிக்கு மிக நெருக்கமான நண்பரான ராஜீவ்ரஞ்சன், வருகிற செப்டம்பரில் ஓய்வு பெறுகிறார். ஆட்சி மாற்றம் என்றால் இந்தப் பதவியில் நீடிக்க முடியாது எனபதால், இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக இருக்கும் ஆணையர் பதவியை குறிவைத்து ஏற்கனவே மோடி சர்க்காரிடம் காய்களை நகர்த்தியுள்ளார் ரஞ்சன்.
தேர்தல் ஆணையத்தின் ஆணையர் பதவி என்பது கேபினெட் அந்தஸ்தில் உள்ளது. ஓய்வுக்குப் பிறகும் 65 வயது வரை பதவியில் இருக்கமுடியும் என்பதால் அந்த பதவியை குறிவைத்துள்ளார் ராஜீவ்ரஞ்சன். இவரது விருப்பத்தை ஒருவேளை மத்திய அரசு நிறைவேற்றாதபட்சத்தில், செப்டம்பர் மாதம்வரை ஏதேனும் ஒரு டம்மி போஸ்டிங்கிற்கு தூக்கியடிக்கப்படுவார்.
ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டால் 1985 பேட்ஜில் ஜக்மோகன்சிங் ராஜுவும், அதேபோல 1986 பேட்ஜில் ஹன்ஸ்ராஜ் வர்மாவும் மட்டுமே இருக்கின்றனர். 1987-ஆம் வருட பேட்ஜில் பிரவீன்குமார், ஆனந்த், ஓட்டெம்டாய், அபூர்வ வர்மா, டி.வி.சோமநாதன், ஜெயஸ்ரீரகுநந்தன் ஆகிய 6 பேர் இருக்கிறார்கள். சீனியாரிட்டிபடி இவர்களிலிருந்து 3 பேர் கொண்ட பட்டியலைத் தயாரித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கவேண்டும்.
தலைமைச்செயலாளராக நியமிக்கப்படுபவர்கள் அடுத்த 2 வருடம்வரை பணியில் இருப்பவராக இருப்பது அவசியம். அந்த வகையில், ஜக்மோகன்சிங் ராஜூவுக்கு 2023 வரையிலும், ஹன்ஸ்ராஜ்வர்மாவுக்கு 2024 வரையிலும் சர்வீஸ் இருக்கிறது.
6 அதிகாரிகளைக் கொண்ட 1987 பேட்ஜ் அதிகாரிகளை கணக்கிட்டால், இந்த வருடம் (2021) ஜூன் மாதம் பிரவீன்குமாரும், அக்டோபர் மாதம் அபூர்வ வர்மாவும் ஓய்வுபெறவிருக்கிறார்கள். அதேபோல, அடுத்த வருடம் (2022) ஜனவரியில் ஒட்டெம் டாய்யும், ஜூலையில் ஜெயஸ்ரீரகுநந்தனும், ஆகஸ்ட்டில் ஆனந்தும் ஓய்வுபெற விருக்கின்றனர். 2 வருட பணி இல்லாததால் இவர்கள் 5 பேரும் தலைமைச் செயலாளர் தேர்வு பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லை.
ஆக, 1987 பேட்ஜில் மீதம் இருப்பவர் டி.வி.சோமநாதன் மட்டுமே! 2025-வரை இவருக்கு சர்வீஸ் இருக்கிறது. ஆனால், மத்திய நிதித்துறையில் செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்றதால் மாநில பணிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. அதனால் 1987 பேட்ஜில் இருக்கும் அதிகாரிகள் 6 பேருக்கும் தலைமைச் செயலாளராகும் வாய்ப்பு மிக மிக குறைவு.
அடுத்து 1988 ஆம் வருட பேட்ஜ் அதிகாரிகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் யதீந்திரநாத் ஸ்வைன், அதுல்யமிஸ்ரா, விக்ரம்கபூர், இறையன்பு என 4 ஐ.ஏ.எஸ். இருக்கிறார்கள். இவர்களில் மத்திய அரசு பணியில் யதீந்திரநாத்தும், தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் அதுல்ய மிஸ்ராவும், சுற்றுலா துறையில் விக்ரம்கபூரும், அண்ணா இன்ஸ்டிடியூட் மேலாண்மை மற்றும் பயிற்சி மையத்தில் இறையன்பும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே 2 வருடத்துக்கும் அதிகமாக சர்வீஸ் இருக்கிறது.
1985 பேட்ஜில் ஜக்மோகன்சிங் ராஜு, 1986 பேட்ஜில் ஹன்ஸ்ராஜ்வர்மா, 1988 பேட்ஜில் யதீந்திரநாத் ஸ்வைன், அதுல்ய மிஸ்ரா, விக்ரம்கபூர், இறையன்பு ஆகிய 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 3 நபர்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதில் ஜக்மோகன் சிங்கிற்கும், யதீந்திரநாத் ஸ்வைனுக்கும் வாய்ப்பு ரொம்பவும் குறைவு. மற்ற 4 கூடுதல் தலைமைச் செயலாளர்களிடையேதான் போட்டி அதிகமிருக்கும். அதேசமயம், இவர்களில் கடந்த 15 ஆண்டுகளில் முக்கிய துறைகளில் பணிபுரிந்த அனுபவம் இறையன்புக்கு இல்லை. தலைமைச் செயலாளர் பதவிக்கான போட்டியில் சீனியாரிட்டிப்படி இருப்பவர்களில் இத்தகைய அனுபவங்களையெல் லாம் ஆராய்ந்து பார்ப்பார்கள். அந்த வகையில் ஹன்ஸ்ராஜ்வர்மா, அதுல்யமிஸ்ரா, விக்ரம் கபூர் ஆகியோரிடையே தான் போட்டி அதிகமிருக்கிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்றால், அதன் தொடர்ச்சியான அதிகாரிகள் மாற்றத்தில் எந்த வகையிலும் தலையிடுவதில்லை என்கிற முடிவை எடுத்துள்ளது மோடி அரசு. இதையெல்லாம் தவிர்த்து விட்டுப் பார்த்தால் 1989 பேட்ஜில் தற்போதைய உள்துறை செயலாளர் பிரபாகர் உள்பட 9 பேரும், 1990 பேட்ஜில் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமியின் செயலாளர்களில் ஒருவரான சாய்குமார் உள்பட 5 பேரும் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்களில் பலர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகள் இருக்கின்றன.
அதனால் ஹன்ஸ் ராஜ் வர்மா, அதுல்ய மிஸ்ரா, விக்ரம் கபூர் ஆகிய மூவரில் வர்மா அல்லது கபூர் இருவரில் ஒருவர் புதிய தலைமைச் செயலாள ராக வருவதற்கு வாய்ப்பு அதிகம்‘’ என்று விரி வாக சுட்டிக்காட்டு கிறார்கள் கோட் டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
2011-ல் ஆட்சிக்கு வந்ததும் டி.என். பி.எஸ்.சி.யில் கலைஞரால் நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு நீக்கினார் ஜெயலலிதா. தமிழகத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, தற்போதும் அத்தகைய அதிரடிகள் இருக்கும். தூய்மையான நிர்வாகம் என்ற பெயரை உடனடியாக எடுப்பதுதான் முதன்மையான நோக்கமாக புதிய அரசுக்கு இருக்கும் என்கிறார்கள்.
அதனால், டி.என்.பி.எஸ்.சி. மற்றும் லோக் அதாலத் ஆகிய அமைப்புகளில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கின்றனர். பதவியிலிருந்து விலகாத பட்சத்தில் பணியிலிருந்து அவர்கள் அதிரடியாக நீக்கப்படு வார்கள்.
அதேபோல, தமிழக அரசின் ஆலோசகராக இருக்கும் முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகமும் தனது பதவியை ராஜினாமா செய்யும் மூடில் இருக்கிறார். ஆட்சி மாற்றத்தில் இந்த பதவியையே எடுத்து விடுவது என்கிற ஒரு ஆலோசனை நடந்திருக்கிறது. ஆனால், ஓய்வு பெற்ற திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த பதவியை நீக்க வேண்டாம் எனவும், இவர்களில் புதிய அரசுக்கு சாதகமானவர்களும் இருக்கிறார்கள் எனவும் சிலர் சொல்கிறார்கள்.
அந்த வகையில், அசோக்வர்தன் ஷெட்டியை நியமிக்க ஒரு யோசனை இருந்தது. ஆனால், தற்போது குடும்பத்துடன் கனடாவில் செட்டிலாகி விட்ட ஷெட்டி, நேரடி அரசு நிர்வாகத்தை கவனிப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், அரசின் ஆலோசகராக யாரை நியமிக்கலாம் என்கிற ஆலோசனைப் பட்டியலில், 2006 ஆட்சிக்காலத்தில் முதல்வரின் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் உள்பட ஓய்வு பெற்ற ஒரு சிலரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாம்..
ஆட்சியில் யார் இருந்தாலும், அதன் அன்றாடச் செயல்பாடுகளை மேற்கொள்பவர்கள் அதிகாரிகளே! அதுவும் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் முக்கியமானவர்கள். ஊழல்களில் ஊறிக்கிடக்கும் தலைமைச் செயலகத்தை முழுமையாக சுத்தப்படுத்தும் பணியே புதிய அரசின் முதன்மைப் பணியாக இருக்கும். இருக்க வேண்டும்.