மிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளில், சமூகநீதி அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின்போது, வேலூர் மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலின பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின்பு ரத்தான உள்ளாட்சித் தேர்தலிலும் அதேநிலை நீடித்தது. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கானதா? பொதுப்பிரிவு பெண் களுக்கானதா? பொதுப் பிரிவா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

vellore

தற்போது தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம் என்பதால் வேலூர் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் மாநகர பிரமுகர்கள் சோர்வில் உள்ளனர். காரணம், மேயருக்கு நிற்க கட்சியில் பட்டியலின சாதியைச் சேர்ந்த தகுதியான பிரமுகர்கள் இல்லை என்கிறார்கள் இரு கட்சியினருமே. இதனால் மேயர் பதவியை பொதுவாக்க வேண்டும் என கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே அக்கட்சியினர் முயன்றனர். தற்போது ஆளும்கட்சியாக உள்ள தி.மு.க. பிரமுகர்களும் முயற்சிக் கின்றனர்.

வேலூர் மாநகரத்தில் 4 மண்டலம், 60 வார்டுகள், 4,09,967 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3, 15, 33, 58 ஆகிய 4 வார்டுகள் பட்டியலினப் பொதுப்பிரிவு, 15, 16, 17, 20, 37-வது வார்டுகள் பட்டியலினப் பெண்கள், 4, 7, 9, 13, 14, 18, 19, 28, 29, 30, 31, 32, 38, 40, 41, 42, 43, 44, 45, 46, 48, 50, 56, 57, 60 என 25 வார்டுகள் பொதுப் பிரிவினரில் பெண்களுக்கும், மற்றவை பொதுப்பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளன. மேயர் சீட் வாங்குவது குறித்து, பிறகு பார்க்கலாம் கவுன்சிலர் சீட் கிடைக்கவேண்டுமென தி.மு.க., அ.தி.மு.க. இருதரப்பும் கட்சியில் விருப்பமனு தந்துவிட்டு காத்துக்கொண்டுள்ளார்கள்.

"தி.மு.க.வில், நேரடி மேயர் தேர்தல் என அறிவித்தால் மேயர் வேட்பாளர், வார்டு கவுன்சிலர் வேட்பாளருக்கு தலா "5 எல்' தேர்தல் செலவுக்கு தரவேண்டும், மறைமுக தேர்தல் என்றால் "3 எல்' தரவேண்டும், அந்தளவுக்கு யார் செலவு செய்வார்கள்' என கட்சி நிர்வாகிகள் விவாதித்துள்ளனர். இதைக்கேட்டு நான், நீ என முட்டிமோதுகிறார்கள் சிலர்.

2011 தேர்தலின்போது மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட போது, தி.மு.க.வில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி யாரும் இல்லாததால் அரசு மருத்துவராக இருந்த ராஜேஸ்வரியை அழைத்துப் பேசி அவரது வேலையை ராஜினாமா செய்யவைத்து மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார், தோல்வியைச் சந்தித்தார். தற்போது மாநில மருத்துவரணி துணைச் செயலாள ராகவுள்ள அவர் மீண்டும் எதிர்பார்க்கிறார். 2021-ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வேண்டுமென தலைமையிடம் மனு தந்தபோது, "நீங்க மேயர் கேண்டிடேட், உங்களுக்கு எதுக்கு எம்.எல்.ஏ. சீட்' எனச் சொல்லி நம்பிக்கை தந்து அனுப்பினார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ. போன்றவர்களும் மேயர் பட்டியலினப் பெண்கள் என்றால் ராஜேஸ்வரி என்பதில் உறுதியாக உள்ளனர். மாவட்ட கலை இலக்கியப் பிரிவின் துணையமைப்பாளரும், ஒப்பந்ததாரருமான உமாசந்திரன் தனது மனைவி சாருலதாவுக்கு 35-வது வார்டில் சீட் தரவேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். மனைவியை மேயர் வேட்பாளராக்க காய் நகர்த்திவருகிறார்.

velore

Advertisment

மேயர் பதவியை பெண்கள் பொதுப்பிரிவாக மாற்றினால் தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தனது ஆதரவாளரான காட்பாடி பகுதிச்செயலாளர் வன்னி ராஜாவின் மனைவி புஷ்பலதாவை முன்னிறுத்துகிறார். அதேநேரத்தில், எம்.பி. தேர்தலின்போது கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட எம்.பி. கதிர்ஆனந்தின் நெருங்கிய பினாமியான பூஞ்சோலை சீனுவாசன் மனைவி அல்லது மகளை நிறுத்த லாமா என்கிற ஆலோசனையும் நடக்கிறது. மாநகரச் செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ. மாநகர மகளிரணிச் செயலாளர் சுஜாதா ஆனந்தனை முன்னிறுத்துகிறார். மா.செ. நந்தகுமார் தன்னுடனுள்ள நிர்வாகி ஒருவரின் மனைவியை நிறுத்த யோசிக்கிறார்.

பொதுப் பட்டியலில் வைக்கப்பட்டால் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், "எனக்கு வாங்கித் தாங்க' என அமைச்சர் துரைமுருகனை கேட்டுவருகிறார்.

தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸ், "எங்களுக்கு இரண்டு மண்டலக் குழு தலைவர் பதவி ஒதுக்கவேண்டும், துணை மேயர் பதவி வேண்டும், 20 கவுன்சிலர் சீட்கள் வேண்டும்' என கேட்க பட்டியல் தயாரிக்கிறார்கள் வேலூர் மாவட்ட, மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள். இடதுசாரிகள், வி.சி.க., ம.ம.க., லீக் போன்றவையும் தலா மூன்று கவுன்சிலர் சீட் வேண்டும் எனக் கேட்க தயாராகின்றன.

"அ.தி.மு.க.வில் மேயர் வேட்பாளராக முன் நிறுத்தப்படுபவர், எவ்வ ளவு செலவு செய்வார்கள், செலவு செய்யும் அளவுக்கு யார் உள்ளார்கள்?' என மாநகராட்சி செயலாளர் அப்பு நிர்வாகிகளிடம் விசாரித்துள்ளார்.

"தேர்தலில் ஜெயிக்க றதுக்கான வழியே தெரியல, இதுல செலவு எங்க செய்யறது. 60 வார்டில் 35 வார்டில் ஜெயிச்சாதான் மேயர் பதவியைப் பிடிக்க முடியும், அதுக்கு இப்போ வாய்ப்பேயில்லை, மீறி ஜெயிச்சாலும் ஆளும் கட்சி அலேக்கா ஆளைத் தூக்கிட்டுப் போய்டும்' என பின்வாங்கு கிறார்கள்.

60 வார்டுகளுக்கும் சேர்த்து கவுன்சிலர் சீட் கேட்டு விருப்ப மனு தந்தவர்கள் வெறும் 200 பேர்தான். சில வார்டுகளில் ஒருவர்கூட மனு தரவில்லை. களநிலவரம், தேர்தல் செலவு போன்றவற்றை யோசித்து பின்வாங்குகின்றனர். மேயர் பதவி தலித் பிரிவில் பெண்கள் என்பது தொடர்ந்தால் முன்னாள் மா.செ. கர்ணலின் மகளும், மாநகர கழக மாவட்ட துணைச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் மனைவியுமான அமலநிருபா முன்னிலைப்படுத்தப்படுவார்.

வேலூர் மாவட்டத்தில் தனது பிடி இருக்க வேண்டுமென இவருக்கான செலவை முன்னாள் அமைச்சர் வீரமணி பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி தந்துள்ளதால் தெம்பாக இருக்கிறார். அல்லாபுரம் பகுதிச் செயலாளர் பாண்டியன் தனது மனைவி பார்வதிக்காக கேட் கிறார். அதேபோல் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு சென்ற முன்னாள் மாவட்ட சேர்மன் ஷீலாராஜன், "கட்சி செலவு செய்வதாக இருந்தால் நான் நிற்கிறேன்' என முன்வருவதாகக் கூறப் படுகிறது.

"பெண்கள் பொது என அறிவிக்கப் பட்டால், கட்சி சீனியரும், மூன்றாவது மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் உமா விஜயகுமார் கேட்கலாம்' என முடிவு செய்துள்ளார். கட்சி செலவு செய்வதாக இருந்தால் முன்னால் கவுன்சிலர் ஷகிலா நாராயணன் நான் நிற்கிறேன் என்கிறார். "கட்சியிடம் நிதி வாங்கி இன்னொருவரை எதுக்கு மேயராக்க வேண்டும் என யோசிக்கும் மாநகரச் செயலாளர் அப்பு, தனது மனைவியை நிறுத்தலாம், பொதுவாக இருந்தால் தானே நிற்கலாம்' என ஆலோசித்துவருகிறார். "என் மனைவி பொற்செல்விக்கு சீட்தாங்க, நான் செலவு செய்கிறேன்' என த.மா.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த ஜெய்சங்கர், வர்த்தகர் சங்கத்தை சேர்ந்த முன்னால் கவுன்சிலர் அருணா கேட்கிறார்' என்கிறார்கள்.

2011-2016-ல் அ.தி.மு.க.வை சேர்ந்த கார்த்திகாயினி மேயராக இருந்தார். இரண்டாவது முறையாக சீட் தராத அதிருப்தியில் அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு சென்றவர், பா.ஜ.க.வின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளராகவுள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.-.பா.ஜ.க. கூட்டணியில் எம்.எல்.ஏ. சீட் கேட்டார், கிடைக்கவில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி யிலுள்ள பா.ஜ.க.வுக்கு வேலூர் மேயர் பதவியை ஒதுக்கி வாங்கவேண்டும் என பா.ஜ.க. அண்ணாமலை, கரு.நாகராஜனை சுற்றிச் சுற்றி வருகிறார் கார்த்திகாயினி.

மாநகரத்திலுள்ள 60 வார்டுகளில் காட்பாடி, சத்துவாச்சாரி, வேலூர் மண்டலத்தில் முதலியார்கள் மெஜாரிட்டி அதிகம். அதனால் மேயர் பதவியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி எங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு கட்சியும் சீட் தரவேண்டும் என்கிறார்கள் அந்த சாதியை சேர்ந்த அமைப்பினர். அதற்கு இரண்டு கட்சியிலும் உள்ள சாதிப் பாசம் கொண்ட பிரமுகர்கள் ஆதரவாக உள்ளனர்.