"டாலர் சிட்டி' என அழைக்கப்படும் திருப்பூர், பின்னலாடைகளின் நகரம் எனவும் அழைக்கப்படுகிறது.
தென், வட மாவட்ட மக்கள் மட்டுமல்ல நைஜீரியர்களின் ஆக்கிரமிப்பிலும் இருந்தாலும், தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டேயிருக்கிறது திருப்பூர். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, திருப்பூரை மாநகராட்சியாக அறிவித்த கலைஞர்... தன்மேல் அபரிமிதமான பற்றுகொண்டிருந்த செல்வராஜை மாநகராட்சியின் முதல் மேயராக்கினார். பின்பு திருப்பூரை மாவட்டமாக அறிவித்தார் கலைஞர்.
அதற்குப் பின்னர் வந்த மேயர் தேர்தலில் அ.தி.மு.க.வின் விசாலாட்சி மேயராகி மாநகராட்சியின் இரண்டாவது மேயர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இப்படி முக்கிய மாநகராட்சியான திருப்பூர் வருகிற உள்ளாட்சி தேர்தலின் மூலம் தன்னை ஆளவிருக்கிற மூன்றாவது மேயர் யார்? என்கிற டாலர் கேள்வியோடு மேயரைத் தேடி நிற்கிறது.
ஆண் மேயரே இப்போதைக்கு மாநகராட்சி யின் மேயர் எனச் சொல் லப்படுவதால் அ.தி.மு.க. வில் முன்னாள் மேயரான விசாலாட்சி இப்போதே நெற்றியைச் சுருக்கிக் கொண்டுள்ளார். அதனால் கடந்த சட்டமன்றத் தேர் தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த குண சேகரன், "டாலர் சிட்டியின் அடுத்த மேயர் நான்தான்' என்கிறார். ஆனால், "தான் வளர்த்து விட்ட குணசேகரன் தனக்கு எதிராகவே திருப்பி எய்த அம்பின் காயத்தை பழி உணர்ச்சியோடு தடவிக்கொண்டி ருக்கிறார் மாஜி அமைச்சர் ஆனந்தன்' என்கிறார்கள் ரரக்கள்.
இந்நிலையில் ஒரு காலத்தில் அ.தி.மு.க.வில் கோலோச்சியிருந்த எக்ஸ் எம்.பி. சிவசாமி எந்த அடையாளமும் இல்லாதுபோய்... தினகரனோடு இணைந்தபோது "இரட்டை இலைக்கே வந்து விடுங்கள், வேண்டியதை செய்து கொடுக்கிறோம்' எனச் சொல்லப்பட்டதால் நம்பிக்கையோடு சிவசாமி வந்திருக்க, "டாலர் சிட்டியின் மேயர் பட்டியலில் சிவசாமி முதலிடம் பிடிக்கக்கூடும்' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
"உதயசூரியன் தரப்பில்தான் பெரும் போட்டி' என சொல்லப்படுகிறது. தே.மு.தி.க.வில் இருந்து வந்திருக்கும் தினேஷ் ஒரு பக்கம், "டாலர் மேயர் நான்தான்' எனச் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில்... கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட கோவிந்தசாமி எக்ஸ் எம்.எல்.ஏ.வும் "டாலரின் டாலர் நான்தான்' என்கிறார். வடக்கு மா.பொறுப்பாளரும் அமைச்சர் சாமிநாதனின் ஆதரவாளருமான பத்மநாபனும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்த அனுபவத்தோடு மேயர் கனவில் இருக்கிறார்.
ஆனால் தி.மு.க. தலை மையோ, திருப்பூரின் முதல் மேயரும், தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜையே நம்பியிருக்கிறது. அதனால் "செல்வராஜின் பெரும் நம்பிக்கைக்குரியவரும், தொடர்ந்து மூன்றுமுறை தெற்கு மாநகரச் செயலாளராகவும் இருந்து வரும் டி.கே.டி. நாகராஜனுக்கே டாலரின் மேயர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
மாநகராட்சியாக திருப்பூர் ஆன காலத்திலிருந்தே "மாநக ராட்சியின் 60 வார்டுகளுக்குள்ளும் எங்கே தண்ணீர் தேங்கும்? அதை எப்படி சரி செய்வது? என்கிற கணக்கு மட்டுமில்லாமல், வார்டுகளில் உள்ள மனிதர்களோடு எந்நேரமும் தொடர்பு கொண்டிருப்பதும், பின்னலாடைகளின் பிரச்சினைகளையும் அறிந்தவர் என்பதும் நாகராஜனுடைய டாலர் கணக்கை அதிகரிக்கிறது' என்கிறார்கள் பொதுமக்களே.
தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், வடக்கு மாவட்டத் தலைவருமான கோபி, "டாலரின் மேயர் நான்தான்' என பண பலத்தைக் காட்டுகிறார். மாநகர தலைவர் கிருஷ்ணனும், மாநில நிர்வாகியான செந்திலும் இதே கோஷத்தோடு களத்தில் இறங்கி நிற்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் சுப்பராயனின் நாடாளுமன்ற செயல்பாடுகள் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதால் மாவட்ட செயலாளரான ரவி என்கிற சுப்பிரமணியமும், "டாலரின் மேயர் என்கிற வரிசையில் நிற்கிறார்.
மார்க்சிஸ்ட் கட்சியில் மாவட்டச் செயலாளரான காமராஜும், "டாலரின் மேயர் நான்தான்' என்கிறார் டாலர் இல்லாதபோதும் நம்பிக்கையாய்.
மோடி என்கிற பெயரே பலருக்கும் அதிருப்தியளிக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் கூட்டாளியான பி.ஜே.பி., அ.தி.மு.க.விடம் திருப்பூரை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று முனைப்பு காட்டுகிறது. மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் டாலரின் மேயர் என்கிற குரலோடு வருவது பெரும்பாலான திருப்பூர் பகுதிகளில் இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் பலம்கொண்டு வருவதாக நம்ப வைக்கப் படுவதால்தான்.
நா.த.க. திருப்பூரில் அறிமுகக் கூட்டம் நடத்தியபோது கொட்டும் மழையிலும் திரளாய் நின்ற பெருங்கூட்டத்திலிருந்தவர்கள், இப்போது மழை நின்றும் தூவானமாய்க் கூட இல்லாமல் போய்விட்டார்கள். ஆனாலும், சீமான் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து யாரோ ஒருவரை டாலரின் வேட்பாளராக்க வலைவீசி தேடி வருகிறார்கள்.
டார்ச்லைட்டில் வடகிழக்கு மாவட்டச் செயலாளர் ஜீவா, "தன்னால், கமலின் முகத்தை வைத்து ஒளி பாய்ச்ச முடியும்' என்கிற நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இப்படி... டாலரின் மேயர்கள் திருப்பூர் முழுக்க வலம் வர காத்திருக்கின்றனர். ஆனால் உழைக்கும் மக்களின் வியர்வையைப் போக்கும் மேயரையும், சுகாதார சீர்கேடுகளால் சிக்குண்டிருக் கும் திருப்பூரை மீட்கும் மேயரையுமே எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள் திருப்பூர்வாசிகள்.