2014-ல் பெங்களுரூ நீதிமன்றத்தால் ஜெ. குற்றவாளி யென தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளியேவந்தவ ருக்கு வழக்கிலிருந்து விடுதலை கிடைக்கவேண்டுமென அமைச் சர்கள், எம்.எல்.ஏக்கள், மா.செக் கள், கோயில்களில் மண்சோறு சாப்பிட்டார்கள், அலகு குத்தினார்கள், கிரிவலம் வந்தார்கள், தொடர்ச்சியாக யாகம் நடத்தினார்கள், அதற்காக லட்சம், லட்சமாக செலவு செய்தார்கள். அமைச்ச ராகயிருந்த வீரமணி அப்படியெதுவும் செய்யவில்லை. இதுபற்றி அ.தி.மு.க.வினர் ஜெ.வுக்கு புகார் அனுப்பியதும், விசாரணை நடந்தது. என் குடும்பமே தீவிர பெரியாரிஸ்ட், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அதான் செய்யல என தயக்கத்தோடு சொன்னவரை சரி போங்க என அனுப்பிவிட்டார் ஜெ. 2020-ல் அமைச்சராக இருந்த வீரமணி கோயில் நிகழ்ச்சிகளில் அவராகவே போய் கலந்துகொண்டு மரியாதைகளை பெற்றார். மறைமுகமாக சில கோயில்களுக்கு சென்றுவந்தார்.
ஏன் இந்த திடீர் மாற்றம்?
வடஆற்காடு மாவட்டத்தில் பிரபலமானது தங்கவேல் பீடி. இந்த பீடி கம்பெனியின் உரிமையாளர்கள் தங்கவேல், சின்னராசு. இருவரும் அண்ணன்- தம்பிகள். தீவிரமான பெரியார் பற்றாளர் கள். இருவரும் திராவிடர் கழகத்தில் பொறுப்பில் இருந்தனர். இவர்களில் சின்னராசு மகன்தான் வீரமணி. (தி.க. தலைவரின் பெயர்). தங்கவேல் மகன் குயில்தாசன். இவர் மகன்தான், பேரறிவாளன். 1991-96 ஜெ. அரசில் அமைச்சராக இருந்த இந்திர குமாரி மூலம் அ.தி.மு.க.வுக்கு வந்தார் வீரமணி. ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர், ஒன்றிய சேர்மன், மாவட்ட விவசாய அணி செயலாளர் என வளர்ந்தவர், 2007-ல் மா.செ.வானார். தற்போது வரை (திருப்பத்தூர் மாவட்டம்) மா.செ. 2011, 2016-ல் ஜோலார்பேட்டை தொகுதியில் எம்.எல்.ஏ. ஆன வீரமணி 9 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் அறப்போர் இயக்கம், வருமானத்துக்கு அதிகமாக வீரமணி சொத்து சேர்த்துள்ளார் என ஆதாரங்களுடன் புகார் தந்தது. அதன் அடிப்படையில் வீரமணி, அவரது உறவினர்கள், பினாமிகளென தமிழ்நாடு, கர்நாடகாவில் 35 இடங்களில் ரெய்டு நடந்தியது லஞ்ச ஒழிப்புத் துறை. இந்த ரெய்டில் கணக்கில் வராத 36,01,060 ரூபாயும், அமெரிக்க டாலர்கள் 1.80 லட்சம், ரோல்ஸ்ராய்ஸ் உட்பட 9 ஆடம்பர கார்கள், 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைரம், 7.2 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளதாக கூறியுள் ளது. அதே அறிக்கையில் 275 யூனிட் மணல் கைப்பற்றியுள் ளோம், அதன் மதிப்பு 30 லட் சம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக ஆறு களில் மணல் அள்ள தடை யுள்ளது. அதை அ.தி.மு.க ஆட்சியில் கண்டுகொள்ளவே யில்லை. பாலாற்றில், வீரமணி தரப்புக்கு சொந்தமான 40 டாராஸ் லாரிகள் தினமும் 10 யூனிட், 15 யூனிட் என மணல் திருடிச்சென்று கர்நாடகாவில் ஒரு லோடு 70 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விற்பனை செய்கிறது, மாதம் 10 கோடி ரூபாய் சம்பாதித்தார் வீரமணி. அவரது இடத்தில் மலைபோல் மணல் குவித்து வைத்துள்ளதை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லையென்று வீரமணியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர்கபில் தரப்பு சொன்ன புகார், உண்மை என்பதை இந்த ரெய்டு காட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாரத்தை பயன்படுத்தி மணல் அள்ளி விற்பனை செய்தார் என வழக்கு பதிவு செய்தால் வீரமணி வகையாக சிக்குவார் என்கிறார்கள் வழக்கறிஞர்கள். வேறுசில வழக்கறிஞர்களோ, மணல் விவகாரத்தை கனிம வளத்துறை, வருவாய்த்துறை மூலமாக தனிவழக்காக பதிவுசெய்து நடத்தினால் வீரமணிக்கு நிச்சயம் தண்டனையுண்டு. லஞ்ச ஒழிப்புத்துறை, மணலை வழக்கில் சேர்த்தால் ஒட்டுமொத்த வழக்கே வீக்காகிவிடும் என்கிறார்கள்.
அமைச்சரான வீரமணி, ஆந்திராவில் பால் கம்பெனி, நாட்றாம்பள்ளியில் வேளாண்கல்லூரி, திருப்பத்தூர், ஏலகிரி, ஒசூர், பெங்களுரு, அமராவதி, லண்டனில் பிரமாண்ட நட்சத்திர ஹோட்டல்கள், டிரான்ஸ்போர்ட், பெட்ரோல் பங்க், திருமண மண்டபங்கள், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சகோதரி மற்றும் சித்தி மகன் மூலமாக வெளிநாட்டில் முதலீடென 2 ஆயிரம் கோடிக்கு சொத்துள்ளது என்கிறார் கள் லஞ்சஒழிப்புத்துறை யினர். அதற்கான ஆவணங் களை திரட்டியபின்பே ரெய்டு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. ரெய்டின் போது ஜோலார்பேட்டை வீட்டிலிருந்து வீரமணியை காரில் சில இடங்களுக்கு அழைத்து சென்று லாக்கர் களை திறக்கச் சொல்லி சோதனையிட, நொந்து போனார் வீரமணி.
இவ்வளவு சொத்துக்கள் குடும்ப உறவினர்கள், பினாமிகள் பெயரில் சேர்த்தாலும் நெருங்கிய உறவுகள் சிலருக்கு குடும்ப சொத்திலிருந்து சேர வேண்டியதை தரவில்லை,
அதேபோல் அரசியலில் தன் உடன்பிறந்த வர்களாக இருந்தாலும் மேலே உயராமல் பார்த்துக்கொண்டார் என்கிறார்கள் உறவினர்கள் சிலர். விபத்தில் இறந்த சகோதரர்கள் ராவணன், சம்பத் குடும்பத்தினர், பரம்பரை சொத்திலிருந்து தங்களுக்கு சேரவேண்டிய பங்கு தரவில்லையென வீரமணி மற்றொரு சகோதரர் அழகிரி மீது அதிருப்தியில் இருந்தது. லண்டனிலிருந்த ராவணன் மகன் இந்திரஜித்தை சென்னைக்கு வரவைத்து தனது சொத்துக்கள் சிலவற்றை நிர்வகிக்கும் பொறுப்பைத் தந்துள்ளார் வீரமணி. அதிலும் சிக்கல் வர, பீடி கம்பெனியில் தனக்கான பங்கை இந்திரஜித் கேட்டு தகராறாகியுள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் பீடி குடோனுக்கு தீவைக்கப்பட்டது.