41 பேரின் உயிரைக் குடித்திருக்கும் தனது பிரச்சார கூட்ட சம்பவத்தில் அதிர்ச்சி யடைந்த விஜய், கூட்டத்தில் நடந்தது என்ன? என்பது குறித்த உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியவரவேண்டும் என்பதால் மத்திய அரசின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ. என்கொயரி கேட்டு நீதிமன்றத்தை அணுகி யிருக்கிறார்.
ஜீரணிக்கமுடியாத ஒரு துயரம் நடந்து முடிந்துள்ள சூழலில், பாதிக்கப்பட்ட குடும் பங்களின் துயரத்தில் பங்கு கொள்ளாமல் கரூரிலிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்குத் திரும்பிய விஜய்யின் செயல், மிகுந்த கண்டனங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
சென்னைக்கு ஏன் திரும்பினார்? என்கிற கேள்வியுடன் த.வெ.க. நிர்வாகிகளிடம் விசாரித்தப்போது, ‘’"நெரிசல் அதிகமாக அதிகமாகப் பதட்டமானார் விஜய். மின்சாரம் ஏற்கனவே துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், ஜெனரேட்டர் மூலமாக கொடுக்கப்பட்ட மின்சாரமும் கட் செய்யப்பட்டது. இதனால் ஒரே இருட்டு மயம். அதுமட்டுமல்லாமல், நெரிசலில் சிக்கியவர்களின் கூச்சல்; தள்ளுமுள்ளு, ரகளை எல்லாம் சேர்ந்து அவரை பதட்டமடைய வைத்தது. பேசுவதை நிறுத்திவிட்டு பிரச்சார பேருந்தினுள்ளே டென்சனாக இறங்கினார் விஜய்.
வாகனத்திலிருந்த புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜெகதீஸ், நிர்மல்குமார் உள்ளிட்டவர்களிடம் "என்ன நடக்குது? ஏன் இந்த களேபரங்கள்?' என கோபத்துடன் விஜய் விசாரிக்க, "ஏதோ நடக்குது...… விபரீதமாக போகும்போல'… என அவர்கள் சொல்லவும், மேலும் டென்சனானார் விஜய். மீண்டும் பேருந்துக்கு மேலே சென்று பேச முயற்சித்தார். ஆனால், அவரது பாதுகாப்பு வீரர்கள் அதனை அனுமதிக்கவில்லை.
"முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும்; நீங்கள் இங்கு இருக்கும்வரை கூட்ட நெரிசல் கட்டுக்குள் வராது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கின்றனர். உங்களுக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது' எனச் சொல்லி, அங்கிருந்து வண்டியை எடுக்கச்சொல்லி டிரைவருக்கு உத்தரவிட்டனர் பாதுகாப்பு வீரர்கள். வாகனம் கிளம்புகிறது. மெல்ல மெல்லத்தான் இயக்க முடிந்தது. ஒரு வழியாக ஸ்பாட்டிலிருந்து வெளியேறிய விஜய்யின் பேருந்து, நேராக திருச்சி ஏர்போர்ட் நோக்கிச் செல்கிறது. போகும்போதே, "கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகியிருக்கிறார்கள்... இது இன்னும் கூடும் போலத் தெரிகிறது' என்கிற தகவலைக் கேட்டு அப்படியே தலையில் கை வைத்து அழத் தொடங்கிவிட்டார் விஜய். அவரது உடலெல்லாம் நடுங்குகிறது.
ஒருகட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவர், "சென்னைக்கு வேண்டாம்; திருச்சியில் தங்குவோம்' எனச் சொல்ல... "அது மேலும் பிரச்சனையைக் கொடுக்கும்; நீங்க திருச்சியில் இருப்பது தெரிந்தால் உங்கள் ரசிகர்கள் ஹோட்டலுக்கு வந்துவிடுவார்கள். சமாளிப்பது கஷ்டம் சார். சென்னைக்குப் போவதுதான் சரி' எனச் சொல்லி ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர் பாதுகாவலர்கள். இதுதான் அவர் சென்னைக்கு திரும்பியதன் காரணம்''” என்று சுட்டிக்காட்டு கின்றனர்.
ஏர்போர்ட்டில் குவிந்திருந்த பத்திரிகை யாளர்களிடம், வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரத்துக்கு தனது வருத்தங்களையும் இரங்கல் களையும் தெரிவித்து விஜய் பேசியிருக்க வேண்டும். செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள் ளாமல் சென்றது அவர் செய்த மிகப்பெரிய பிழை. ஆனால், த.வெ.க.வினரோ, "பேசும் மனநிலையில் அவர் இல்லை. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்றே தெரியாமல் குழம்பிப்போயிருந்தார். செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளை உள் வாங்கிக்கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. சென்னையில் பேசிக்கொள்ளலாம் என நினைத்தே அவர் அங்கு பேசுவதை தவிர்த்தார்'' ’என்கின்றனர்.
ஏர்போர்ட்டிலிருந்தபடியே தனது நிர்வாகிகளிடம் ஏகத்துக்கும் கடிந்து கொண்டார் விஜய். அன்றைய இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை, விஜய்யின் தளகர்த்தர்கள் என வர்ணிக்கப்படும் புஸ்ஸிஆனந்த், ஜான்ஆரோக்கியசாமி, ஆதவ்அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட பலரின் போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. யாரும் யாரையும் தொடர்புகொள்ள முடிய வில்லை. ஞாயிற்றுக்கிழமை கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசித்தார் விஜய். அதில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, "கரூரில் நீங்கள் மாஸ் காட்டக்கூடாது; கரூர் அரசியலை பேசக்கூடாது; இனி தேர்தல் வரும் வரைக்கும் நீங்கள் மக்களை சந்திக்கக்கூடாதுன்னு யாரெல்லாம் ஆசைப்பட்டாங்களோ, அதற் கேற்றபடி இந்த மோசமான பெருந்துயரம் நடந்துருச்சு. ஆனால், குறிக்கப்பட்ட நேரத்திற்கு நீங்கள் ஸ்பாட்டுக்கு ஏன் வரவில்லை? கால தாமதம் ஆனதாலும், நாமக்கலிலிருந்தே உங்களை பின்தொடர்ந்து வந்த கூட்டத்தை நீங்கள் தடுக்கவில்லை என்பதாலும்தான் கூட்டம் தேவைக்கு அதிகமாகக் கூடி நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலிலிருந்து விடுபடமுடியாமல் அதில் சிக்கி மக்கள் பலியாகியிருக்கிறார்கள் என ஆளும் கட்சி ஆதரவாளர்களால் கட்டமைக்கப்படுகிறது. அரசியலில் இதையெல்லாம் நாம் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்'' என தளகர்த்தர்கள் விவரித்திருக்கிறார்கள். அதனை பொறுமையாகக் கேட்டபடி இருந்தார் விஜய்.
மேலும் பேசிய அவர்கள், "விசாரணைக் கமிஷனை அமைத்திருக்கிறார் முதல்வர். இதே ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டுதான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. கமிசனின் ரிப்போர்ட்டில் பரிந்துரைத்தவைகள் மீது எந்த ஆக்ஷனும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை'' என நிர்வாகிகள் விவரித்தபோது, "கரூர் சம்பவத்தில் நடந்த உண்மைகளை விசாரணைக் கமிசன் கொண்டு வந்துவிடுமா?' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் விஜய்.
"ஆளும் கட்சி அமைத்த கமிசன் இது. ரிப்போர்ட் எப்படி இருக்கும் என எல்லாருக்கும் தெரியும்' என நிர்வாகிகள் சொல்ல... அப்போது குறுக்கிட்ட விஜய், "போலீஸ் விசாரணை நடத்தாமல் கமிசன் போடுகிறார்கள் எனில், ஏதோ நடக்கிறது. அதனால், உண்மைகள் நேர்மையாக வெளியாக வேண்டும்; அதற்கு சட்டப்படி யோசிக்கலாம். சி.பி.ஐ. விசாரணைதான் சரியாக இருக்கும்; அந்த விசாரணையைக் கேட்டு நாம் கோர்ட்டுக்குப் போவோம்' என சொல்லி யிருக்கிறார்.
அப்போது சிலர், "கோர்ட்டை அணுகுவது சரியான முடிவுதான். ஆனால், நமது கோரிக்கையை கோர்ட் ஏற்குமா? எனத் தெரியாது. ஆனாலும் கோர்ட்டை அணுகுவதுதான் ஒரே வழி' எனச் சொல்ல, "அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குங்கள்' என விஜய் கேட்டுக்கொண்டதும், சி.பி.ஐ. விசாரணைக் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம்.
இதனையடுத்து, "கரூருக்கு நாம் நுழைந்ததி லிருந்து வெளியேறும் வரை எடுக்கப்பட்ட வீடியோக்கள், மீடியாக்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியான வீடியோக்கள், லோக்கல் த.வெ.க.வினர் எடுத்துள்ள வீடியோக்கள், பதிவான செய்திகள், ஊடக விவாதங்கள் என அனைத்து ஆதாரங்களையும் சேகரியுங்கள். தேவைப்பட்டால் கோர்ட்டில் நாம் தாக்கல் செய்யலாம்' எனச் சொல்லியிருக்கிறார் விஜய்.
ஒருகட்டத்தில், "பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க கரூருக்கு செல்ல வேண்டும்' என விஜய் சொல்ல, ஒட்டுமொத்தமாக எல்லோரும் அதனை ஏற்க மறுத்துள்ளனர். இப்போதைக்கு நீங்கள் போவது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கும். கொந்தளிப்பான மனநிலையில் நம் கட்சியினரும் கரூர் தி.மு.க.வினரும் இருக்கிறார்கள். அங்கு போனால், கூட்டம் மீண்டும் கூடும்; போலீசும் இதனை அனுமதிக்காது. ஒருவேளை போலீஸ் அனுமதித்தால், நம் கூட்டத்தினுள் சமூகவிரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. இந்த விசயத்தில், சூழலை கவனித்து பிறகு முடிவெடுக்கலாம் எனச் சொல்லி, கரூருக்கு தடை போட்டிருக்கிறார்கள்''’என்று விவரிக்கிறது த.வெ.க. வட்டாரம்.
இதற்கிடையே, கரூர் மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த். சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மற்றவர்கள் (அதர்ஸ்) என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டிருப்பதால் விஜய் உள்ளிட்ட மேலும் சிலரை சேர்க்கவும் வாய்ப்பிருக் கிறது. அருணா ஜெகதீசனின் ரிப்போர்ட் தாக்க லானதற்கு பிறகுதான் இந்த வழக்கில் விஜய்யை சேர்ப்பதா? கைது நடவடிக்கை இருக்குமா? என்பதை அரசின் உத்தரவுக்கேற்ப போலீஸ் முடிவெடுக்கும் என உள்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.