தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நெருங்கும் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26வது மாநாடும், அதில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகளும் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைகள் தொடங்கி அகில இந்திய கமிட்டி வரை மாநாடுகள் நடப்பது வழக்கம்.
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முழுக்க கிளை, ஒன்றிய, தாலுகா என இடை கமிட்டிகள் மாநாடு, மாவட்ட மாநாடுகள் நடத்தி முடிக்கப்பட்டு, இறுதியாக மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் 15, 16, 17, 18 ஆகிய நான்கு நாட்கள் சேலத்தில் நடக்கிறது. கட்சியின் மூத்த தலைவர், நூறாண்டுகளைக் கடந்த "தகைசால் தமிழர்' தியாகி ஆர்.நல்லகண்ணு, மாநாட்டுக் கொடியேற்றி தொடங்கி வைக்கவுள்ளார். 16ஆம் தேதி மாலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். அதேபோல் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். 18ஆம் தேதி செம்படை பேரணியும், அதற்கு முன்பாக 17ஆம் தேதி புதிய நிர்வாகக்குழுவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற கட்சியின் 23வது மாநில மாநாட்டில் இரா.முத்தரசன் மாநிலச் செயலாளராக தேர்வுபெற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 24வது, 25வது மாநாடுகளிலும் முத்தரசனே மாநிலச் செயலாளராக தேர்வானார். தற்போது நடைபெறும் மாநில மாநாட்டில் புதிய மாநிலச் செயலாளர் யார் என்பதுதான் கம்யூனிஸ்ட் தோழர்களிடம் பெரும் எதிர் பார்ப்புகளைக் கூட்டியுள்ளது.
இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, ""மூன்று முறை மாநிலச் செயலாளராக பணியாற்றிய முத்தரசன் மீது விமர்சனம் செய்யும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் ஏதுமில்லை. பெரிய கோஷ்டிப் பூசலும் இல்லை. இந்த முறையும் செயலாள ராக பணியாற்ற முத்தரசனுக்கு விருப்பம் இருக்கிறது. அதேபோல் மூத்த தோழரான திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயனுக்கும் மாநிலச் செயலாளர் எதிர்பார்ப்பு உள்ளது.
அடுத்ததாக, கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியனை மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும் என தோழர்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது உண்மை. வீரபாண்டியனுக்கு மாநிலக் குழுவில் ஆதரவு கிடைக்கும். அதேபோல மற்றொரு மாநில துணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமிக்கும் மாநிலச் செயலாளர் பொறுப்பின் மீது அதிக பற்று இருக்கிறது. தொழிற்சங்க நிர்வாகியான மூர்த்தியின் பெயரும் அடிபடுகிறது. மீண்டும் முத்தரசனே வருவதற்கு மாநிலக்குழுவில் இரண்டு மடங்கு தோழர்கள் ஏற்றுக்கொள்வார்களா, ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்கின்றனர்.
ஆக, மீண்டும் முத்தரசனா? அல்லது சுப்பராயனா? அல்லது புதிய தோழராக மு.வீரபாண்டியனா? பெரியசாமியா? என்பது குறித்து மாநாடு தொடங்கும் முன்பே கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களிடம் விவாதங்களாக கனல் பறக்கிறது.
-அன்பறிவு