ஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு பட்டீஸ்வரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்துவருகின்றனர். 

Advertisment

இனாம்கிளியூரைச் சேர்ந்த குணசேகரனும், கவியரசனும் 12-ஆம் வகுப்பு படித்துவருகிறார்கள். இவர்களுக்கும் அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் சக மாணவர்கள் சிலருக்கும் செப்டம்பர் 18-ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பதினோராம் வகுப்பு மாணவன் ஜோயன் மூக்கு உடைந்துபோக, ரத்தக் காயத்தோடு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக ஜோயனின் பெற்றோர் பட்டீஸ்வரம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை விசாரித்த காவல்துறையினர், இரண்டு தரப்பும் மாணவர்களாக இருந்ததால் அவர்களின் நலன் கருதி இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து கண்டித்து, காயமடைந்த மாணவனின் மருத்துவச் செலவை ஏற்கவைத்தனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரான கவியரசன் தனது வகுப்பு நண்பர்களுடன் மதிய உணவு இடைவேளையில் கழிவறைக்குச் சென்றுள்ளான். அப்போது ஏற்கனவே காயமடைந்த பிளஸ்-1 படிக்கும் மாணவன் தனது வகுப்பு நண்பர்களோடு கழிவறைக்குச் சென்றார். இதில் எதிர்பாராதவிதமாக ஒருவரையொருவர் இடித்துக்கொள்ள, “"ஏற்கனவே மூக்கு உடைஞ்சது பத்தாதா, மண்டை உடையணுமா?''’என பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர், பதினோராம் வகுப்பு மாணவரைப் பார்த்து கேட்க, ஆத்திரமான 11-ஆம் வகுப்பு மாணவர், "அன்னைக்கி உன்னை சும்மாவிட்டது தப்பாபோச்சு''’எனக் கேட்டிருக்கிறார்.  ஆசிரியர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். 

இந்தச் சூழலில் மறுநாள் 4-ஆம் தேதி மாலை, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்தது. இதனை சாதகமாக்கிக்கொண்ட 11-ஆம் வகுப்பு மாணவர்கள், பள்ளி விட்டதும் அவசரமாக வீட்டுக்குச் சென்று சீருடையை மாற்றிக்கொண்டு பட்டீஸ்வரம் கடைவீதியில் காத்திருந்தனர். வகுப்பை முடித்துக்கொண்டு பஸ் ஏறுவதற்காக தனது நண்பர்களோடு வந்த கவியரசனை, பிளஸ்ஒன் மாணவர்கள் பதினைந்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து கடுமையாக தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். 

Advertisment

இதில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த கவியரசனை, சக மாணவர்களும், அக்கம்பக்கத்தினரும் பட்டீஸ்வரம் அரசு சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதால் தஞ்சை தனியார் மருத்துவமனையிலும், பிறகு அரசு மருத்துவக் கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். ஆனால், கவியரசனுக்கு ரத்தக்கசிவு அதிகமாகி மூளைச்சாவு அடைந்து பரிதாபமாக இறந்துபோனார்.

இதுதொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் கொலை வழக்காக பதிவுசெய்து கவியரசனைத் தாக்கிய 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை தஞ்சை சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.

actiona

இதற்கிடையில் கவியரசனின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்காமல் உடற்கூராய்வு செய்ய அனுமதிக்கமாட்டோம், உடலை வாங்கமாட்டோம் என கவியரசனின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவக் கல்லூரியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரையும் கைதுசெய்துவிட்ட தாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதுகுறித்து கவியரசன் தாய் ராஜலட்சுமி, "என் புள்ள எந்த வம்புதும்புக்கும் போகமாட்டான், நல்லா படிப்பான், அவனை அடிக்க எப்படித்தான் மனசுவந்துச்சோ. ஸ்கூல்ல ஸ்பெசல் கிளாஸ் முடிச்சிட்டு வருவான்னு காத்துக்கிட்டிருந்து, ஒருத்தனை 25 பேரு சேர்ந்த அடிச்சிருக்கானுவ. துவண்டு விழுந்தவனை ஏறி மிதிச்சிருக்கானுவ. எம்புள்ளையை இழந்து நாலு நாளா மருத்துவமனையில தவிச்சிநிக்கிறோம். எங்க நிலமை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது. தப்பு செஞ்சவங்களுக்கு உரிய விசாரணை நடத்தி தண்டனை கொடுக்கணும்'' என்று கண்ணீர்விட்டுக் கதறுகிறார்.

கவியரசனின் உறவினர்கள் கூறுகையில், "பட்டீஸ்வரம் பகுதியில் கள்ளமதுவும், கஞ்சா  விற்பனையும் அமோகமாக நடக்கிறது. மாணவர்கள் கஞ்சா போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பட்டப்பகலில் மக்கள் கூடுமிடத்தில் கவியரசனை அடித்துக்கொல்கிற அளவுக்குச் சென்றுள்ளனர். 25 பேர் சேர்ந்து அடித்துள்ளனர். கடைவீதியே பார்த்திருக்காங்க. ஆனால் போலீஸார் பதினைந்து பேரை மட்டும் கைது செய்துள்ளனர்'' என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் வழக்கை கொலைவழக்காக மாற்றி விசாரணை நடத்திவரும் பட்டீஸ்வரம் போலீசாரிடம் கேட்டோம், "சாதிய ரீதியிலான பிரச்சனை இல்லை, மாணவர்களுக்குள் ஈகோ பிரச்சினையில் நடந்துள்ளது. அந்தப் பள்ளி கோ-எஜுகேஷன் என்பதால், யார் கெத்து என்கிற பிரச்சினைதான் முக்கிய காரணம். தற்போது இறந்துபோன மாணவர் மீது ஆரம்பத்திலேயே நடந்த பிரச்சனைக்கு வழக்குப் பதிவுசெய்திருந்தால் அந்த மாணவனின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால் கடுமையாகக் கண்டித்து அனுப்பினோம். மாணவர்களை கண்காணிக்க வேண்டிய பள்ளி நிர்வாகம் கவனமில்லாமல் விட்டுவிட்டது. கஞ்சா போதை என்பது எல்லாம் தவறு, விசாரணை நடக்கிறது'' என்கிறார்கள்.