நீண்ட இடைவேளைக்குப் பிறகு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்கரையோரம்  வன்னியர் சங்கத்தின் பத்தாவது மகளிர் மாநாடு நடந்துள்ளது. மிகவும் பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டில் மருத்துவர் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி, மகள் காந்தி உள்ளிட்ட வன்னியர் சங்க, பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கலைநிகழ்ச்சிகள் முடிந்து ராமதாஸ் மேடைக்கு வர, ஆரவாரம் மேடையை அதிரச்செய்தது.

Advertisment

மாநாட்டுத் தீர்மானங்களை ராமதாசின் மகள் வாசித்து துவங்கிவைத்தார். ஒவ்வொரு தீர்மானத்தையும் மகளிர் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவராக வாசித்தனர். சேலம் அருள் பேசுகையில், ”"மருத்துவர் ராமதாஸ் என்ன சொல்கிறாரோ அதுதான் 2026-ல் நடக்கும். ஐயா அமைக்கிற கூட்டணிதான் இந்த நாட்டை ஆளும்''’என்று ஒரு போடுபோட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் தீரன், “"சோழப் பேரரசனாகத் திகழ்ந்த ராஜராஜ சோழன் தஞ்சையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரிய கோயிலைக் கட்டினான். அவனது மகன் ராஜேந்திரசோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் கோயிலைக் கட்டியபோது எல்லோரும் அவனிடம் சோழ அரசர்களிலேயே 32 ஆண்டுகள் ஆட்சி செய்த மாமன்னர் நீங்கள். கடாரம் வென்றிருக் கிறீர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறீர்கள். அதனால் தஞ்சை பெரிய கோயிலைவிட நீங்கள் கட்டுகிற இந்த கோயில் பெரிதாக இருக்க வேண்டுமென அறிவுரை கூறினார்கள். அப்போது ராஜேந்திர சோழன் என்ன சொன்னான் தெரியுமா?  என் அப்பா கட்டிய தஞ்சை பெரிய கோயில் பண்பாட்டுச் சிகரமாக என்றைக்கும் இருக்கும். எனக்குப் பின்னால் வரக்கூடிய அரசர் கள் என்னைவிட மிக அதிகமான வெற்றிகளைக் குவிக்கலாம். அதனால் தஞ்சை பெரிய கோயிலைவிட கங்கைகொண்ட சோழபுரம் சிறிய கோயிலாக இருந்தால்தான் என் தந்தைக்கும் பெருமை, எனக்கும் பெருமை''’என்றுகூறி அன்புமணி ராமதாஸ், ராமதாஸுக்கு  எதிராக கூட்டிய பொதுக்குழுக் கூட்டத்தை சாடும்வகையில் பேசிமுடித்தார்.

பு.த.அருள்மொழியோ, "10.5% ஒதுக்கீட்டை கருணாநிதியின் மகன் செய்யமாட்டார், கண்ணகி நீதிகேட்டு மதுரையில் சிலம்பை உடைத்தாள், எங்க பெண்களிடம் சிலம்பு வாங்கும் அளவுக்கு பணம் இல்லை, அவர்களிடம் இருக்கு வளையல்களை கொண்டுவந்து கோட்டை முன்பு உடைக்கும் போராட்டம் நடக்கும்''” என்று வழக்கமான தி.மு.க. எதிர்ப்பு மனநிலையோடு பேசிமுடித்தார்.

Advertisment

pm1

கடந்த 10 நாட்களாக பூம்புகாரிலேயே தங்கி யிருந்து மாநாட்டை திறம்பட நடத்திய பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், "2026-ல் பா.ம.க. பெரும் வெற்றி பெறவேண்டும். அய்யா காட்டுகிற அமைக்கிற கூட் டணிதான் வெற்றிக் கூட்டணியாக இருக்கணும். அதற்கு நாம் பாடுபட வேண்டும்''’என்றார்.

இறுதியாகப் பேசிய மருத்துவர் ராமதாஸ், “"இந்த மாநாடு பெண்களுக்கு பெருமை சேர்க்கும் மாநாடு. எல்லா வகையிலும் பெண்கள் முன்னேற வேண்டும் அதற்கான வழிகாட்டல்தான் இந்த மாநாடு. ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோயிலை பற்றியும், ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைப் பற்றியும் சொன்னார்கள். சமீபத்தில் நரேந்திர மோடி, தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்பற்கு உதாரணம்தான் பெரிய கோயிலும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் எனப் பேசினார். அந்த அருமையான வார்த்தையை  நீங்களும் மற்றும் சிலரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Advertisment

சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழக முதல்வர் உடனடியாக செய்ய வேண்டும். இதை செய்ய தமிழக முதல்வர் ஏன் தயங்கவேண்டும்? அவருக்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள் இதை அவருக்கு எடுத்துச்சொல்ல ஏன் தயங்குகிறார்கள். 2026-ல் நீங்கள் நினைப்பதுபோல் வெற்றிக்கூட்டணியை நிச்சயம் அமைப் பேன்'' என்று முடித்தார்.

கூட்டத்திற்கு குடும்பத்தோடு வந்தி ருந்த திண்டிவனம் அஞ்சுகம் கூறுகை யில்,"ஒருகாலத்தில் எங்களுக்கான கதாநாயகனாக இருந்த மனுசன், இப்போது சொந்த பிள்ளையால் எங்களை நம்பி வீதிக்கு வந்துநிற்கிறார், எப்பவுமே பெரியவரோட தான் மக்கள் இருக்கிறோம் என்பதைக் காட்டவே குடும்பமாக வந்துள்ளோம்''’என்றார் உணர்ச்சி ததும்ப.

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் பூவாயி, "வயசாகிடுச்சி. பிள்ளைங்க தலையெடுத்து அரசியலுக்குப் போறாங்க. இந்த வயசான காலத்துல இந்த மழையில் கலந்துக்கிறார், அவரைப் பார்க்கணும், அவருக்குப் பின்னாடி எப்பவும் இருக்கோம்னு காட்டணும்னுதான் இந்த மாநாட்டிற்கு வந்தோம்''’என்கிறார் சிரித்தபடியே.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் சகுந்தலை கூறுகையில், "அன்புமணிக்காக இந்த கட்சியில்ல, ராமதாசுக்காகதான், மொத்த மக்களும் பெரியவர் பின்னாடி இருக்கிறோம்,” என்று கூறிச் சிரிக்கிறார். 

10-ஆம் தேதி பூம்புகாரில் நடந்த மாநாட் டை மடைமாற்றும்விதமாக அவசர அவசரமாக மாமல்லபுரத்தில் பொதுக்குழுவைக் கூட்ட தனது ஆதரவாளர்களை வைத்து முடிவெடுத்தார் அன்புமணி ராமதாஸ். ராமதாஸ் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றத்தின் வழிகாட்டல்படி பொதுக்குழுவை மாமல்லபுரத்தில் நடத்திமுடித் தார் அன்புமணி. "பொதுக்குழுவில், “தீர்ப்பு வந்திருச்சு. அவராக இதைச் செய்யவில்லை. அவர்கூட இருப்பவர்கள் அவரை செய்ய வைக்கிறார்கள்''’என பேசினார். 

அப்பாவுக்கும் மகனுக்குமான போட்டா போட்டியில் பா.ம.க. என்றுமே ராமதாஸ் பக்கம்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், பெரும் மக்கள் ஆதரவோடு மகளிர் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார் ராமதாஸ்.