திருவண்ணாமலை மாநகரத்தை ஓட்டியுள்ளது கீழ்பென்னாத்தூர் தொகுதி. இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பவர் துணை சபாநாயகர் பிச்சாண்டி. இதே தொகுதியில் கடந்த முறையும் எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2021 தேர்தல் வாக்குறுதிகளாக, கீழ்பென்னாத்தூரை தனி தாலுகாவாக்குவேன், தாலுகா மருத்துவமனை அமைப்பேன், சாத்தனூர் அணை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும், மங்களம் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும், நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படும், தாலுகா நீதிமன்றம், கருவூலம், அரசு போக்குவரத்து பணிமனை உருவாக்கப்படும் எனப் பல்வேறு வாக்குறுதிகள் தந்திருந்தார். இதில் கீழ்பென்னாத்தூரில் பேருந்து நிறுத்தம், நாயுடுமங்களத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டித்தந்துள்ளார். பல பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளார். இத்தொகுதியில் மட்டும் 8 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. கிராமங்களில் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுக்குடிநீர் திட்டத்தை பெரும்பாலான பகுதியில் நிறைவேற்றவில்லை. மங்களம் ஊராட்சியை பேரூராட்சியாக்கவில்லை. வேட்டவலத்தை மையமாக வைத்து அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. அமைக்கவேண்டுமென்ற கோரிக்கை மக்களிடம் உள்ளது. 

Advertisment

திருவண்ணாமலை தொகுதியில் தொடர்ந்து நான்குமுறை வெற் றிபெற்று எம்.எல்.ஏ.வாக தொடர்ந் தவர், 2011-ல் புதியதாக உருவாக்கப் பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு மாறினார். முதல்முறை அத்தொகுதியில் பிச்சாண்டி போட்டியிட்டபோது, அத்தொகுதியில் பெரியளவில் அறிமுகமில்லாத அ.தி.மு.க. அரங்கநாதன் வெற்றிபெற்றார். அத்தேர்தலில் ஜாதி முக்கிய பங்குவகித்தது. தோல்வியடைந்தாலும் தன் பாணியை மாற்றிக் கொள்ளாமல் பிச்சாண்டி கீழ்பென்னாத்தூரை வலம்வந்தார். அதனால் 2016, 2021 தேர்தலில் இத்தொகுதியில் பிச்சாண்டி வெற்றிபெற்றார். தற்போது 6வது முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர், தன்னைத் தேடிவந்து யார் அழைப்பிதழ் வைத்தாலும் சொந்தக்கட்சி, எதிர்க்கட்சி எனப் பார்க்காமல் நேரில்போய் கலந்துகொள்வார். இதனால் தொகுதி மக்களிடம் தொடர்பிலேயே இருந்துவருகிறார். 

Advertisment

seat1

தொகுதி நிதியிலிருந்து தரும் பணிகளை கட்சி நிர்வாகி களுக்கு கிடைக்கச் செய்கிறார். கமிஷன் வாங்குவதில்லை. கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தாருக்கு அரசுப் பணிக்கு சிபாரிசு செய்கிறார். ஆனால் அவ ருடனே ஒட்டிக் கொண்டுள்ள ஒ.செ.க்கள் ஆராஞ்சி.ஆறுமுகம், அண்ணாமலை, ராமஜெயம் போன்றவர்கள் எம்.எல்.ஏ. பெயரைச்சொல்லி, கட்சியின் கிளைக்கழக நிர்வாகிகளிடமே எதாவது செலவைச்சொல்லி வாங்கிவிடுகிறார்கள். இதையெல்லாம் பிச்சாண்டி கண்டிப்பதில்லை என்கிறார்கள். இது கீழ்மட் டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிச்சாண்டிக்கு தொகுதியில் பலம், பலவீனம் குறித்து உளவுத்துறை மற்றும் பென் ரிப்போர்ட் களை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பிச்சாண்டியை அழைத்து "உங்க தொகுதி ரொம்ப வீக்கா இருக்கு, பார்த்துக்குங்க'' எனச் சொல்லியதாகக் கூறுகின்றனர் கட்சி நிர்வாகிகள். இதனால் தற்போது பிச்சாண்டியின் போக்கில் மாற்றங்கள் உருவாகியுள்ளது. 

Advertisment

தற்போது அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலருக்கு தேவையானதைச் செய்துதருகிறார். இந்த முறை தனது தம்பியும் பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளருமான எஸ்.கே.பி கருணா என்கிற கருணாநிதிக்கு சீட் தரச்சொல்லி கேட்கிறார் என்கிற தகவலை சிலர் பரப்புகின்றனர். அது உண்மையில்லை, தொகுதியில் தனது அண்ணனுக் காக கட்சி வேலைகள் பார்க்கிறார். கீழ் பென்னாத்தூரில் கலைஞர் சிலை அமைப்பது போன்றவற்றால் அந்த பேச்சுவருகிறது. அவர் எம்.பி.யாக வேண்டுமென விரும்புகிறார் என்கிறார்கள் அவரது தரப்பினர். முன்னாள் எம்.பி. வேணுகோபாலின் மருமகன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் கேட்பாளர்கள் பட்டியலில் உள்ளார். 

அ.தி.மு.க.வில் திருவண்ணாமலை கிழக்கு மா.செ.வும், முன்னாள்அமைச்சருமான ராமச் சந்திரன் இத்தொகுதியில் தேர்தல் வேலையில் படுதீவிரமாக இறங்கிவிட்டார். திருவண்ணா மலையில் அவரை நிறுத்துமாறு நிர்வாகிகளே இ.பி.எஸ்.சிடம் முறையிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்களான கே.பி.முனுசாமி, வீரமணி மூலமாக, "கீழ்பென்னாத்தூரில் வன்னியர்கள் அதிகம். அதனால் நான் அங்கே நின்றால் நிச்சயம் வெற்றிபெறுவேன்' எனச் சொல்லி சாதிரீதியாக நெருங்கி சீட்டை உறுதி செய்துகொண்டார். அதனால்தான் தீவிரமாக களமிறங்கி, ஒன்றியங்களில் தனக்கு வேண்டப்பட்டவர்களை நிர்வாகிகளாக நியமித்துள்ளார். கீழ்பென்னாத்தூர் ஒ.செ. பதவி பறிக்கப்பட்ட தொப்பளான் உட்பட சிலர் ராமச்சந்திரனுக்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ, அரங்கநாதன், 2016-ல் நின்று தோல்வியடைந்த வேட்டவலம் ந.செ. செல்வமணி உட்பட சிலர் சீட் வாங்க முயற்சிக்கின்றனர்.  

தி.மு.க. பிச்சாண்டிக்கும், அ.தி.மு.க. மா.செ. ராமச்சந்திரனுக்கும் அதிர்ச்சிதரும் தகவலாக பா.ம.க. அன்புமணி அணி தரப்பிலிருந்து ஒரு தகவல் பரவுகிறது. அதாவது, சௌமியா அன்புமணியை இந்த தொகுதியில் களமிறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வன்னியர்கள் பெரும்பான்மையாகவுள்ள இத்தொகுதியில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தனித்து நின்று 20 ஆயிரம் சொச்சம் வாக்குகள் வாங்கியுள்ளோம். 2021-ல் அ.தி.மு.க. கூட்டணியில் நின்றபோது 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் செல்வகுமார் தோற்றார். அவர் வெளியூர் என்பதால் நம் சமூக மக்களே ஏற்றுக்கொள்ள வில்லை.  இம்முறை அ.தி.மு.க. ஆதரவுடன் அண்ணி களமிறங்கினால் நிச்சயம் வெற்றிபெற முடியுமென்று ஆலோசித்துள்ளதாகக் கூறப் படுகிறது. அது உறுதியாகி அவர் போட்டியிடும் பட்சத்தில் களம் கடுமையான சவாலை எதிர்கொள்ளும். சௌமியா நிற்காதபட்சத்தில் அன்புமணி தரப்பு மா.செ. பக்தவச்சலம் சீட்  வாங்கி நிற்க முயற்சிக்கிறார். எப்படியும் கடும் போட்டி உறுதி!

-கிங்

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்