துரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம். இதற்கு அடுத்தபடியாக சவுராஷ்டிரா, முத்தரையர்,  கோனார், ஆதி திராவிடர்,  கிறித்துவர்கள், இதர சமூக மக்கள் இருக்கின்றனர். இவர்களில் முக்குலத்தோர் 35%, சௌராஷ்டிரா -முத்தரையர் தலா 15% உள்ளனர். இவர்கள்தான் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கின்றனர்.

Advertisment

கடந்த 25 வருடங்களாக அ.தி.மு.க.வே இத்தொகுதியில் தொடர் வெற்றி பெற்றுள்ளது. 2019-ல் திருப்பரங்குன்றத்தில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட டாக்டர் சரவணன் வெற்றிபெற்றார். வரும் சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரான இராஜன் செல்லப்பாவை எதிர்த்து கிருத்திகா பாண்டியன் நிறுத்தப்படலாம். போனமுறை தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னுத்தாய் நிறுத்தப்பட்டு தோல்வியடைந்தார். போனமுறையே கிருத்திகா பாண்டியனுக்குத்தான் சீட்டு என்று சொல்லப்பட்டது. இவர் மதுரையில் ஐ.டி. கம்பெனி நடத்துகிறார். இவரது கணவர் பாண்டியன், திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலாளர் மணிமாறனையும், அமைச்சர் மூர்த்தியையும் அனுசரித்துப் போகக்கூடியவர். தவிரவும் தி.மு.க.வில் ஏர்போர்ட் பாண்டியன், இளைஞரணியைச் சேர்ந்த விமல் ஆகியோரும் வாய்ப்பை எதிர்பார்த்து முயற்சி செய்கின்றனர். 

Advertisment

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான இராஜன் செல்லப்பாவே மீண்டும் இங்கு நிற்கிறார் என்கிறார்கள். 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக நின்று வெற்றிபெற்று தற்போது அ.தி.மு.க.விலிருக்கும் டாக்டர் சரவணனுக்கும் திருப்பரங்குன்றத்தின் மீது ஒரு கண். கடைசியாக எடப்பாடி மதுரை வந்தபோது "மதுரை வடக்கு தொகுதியில் வேலை எப்படி நடக்கிறது?' என்று கேட்டிருக்கிறார். “"திருப்பரங்குன்றம் எனக்கு பரிச்சயமான தொகுதி. என் சொந்தக்காரர்கள் அதிகமுள்ள தொகுதி'…’ என்று பிட்டை போட்டு வைத்திருக்கிறார். அதற்கு எடப்பாடி பதிலேதும் சொல்லாமல் "சரி பார்த்துக் கொள்ளலாம்' என்றாராம். 

திருப்பரங்குன்றம் மக்களைச் சந்தித்து தொகுதி நிலவரம் பற்றிக் கேட்டபோது இந்தத் தொகுதியில் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பணப்பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. விவசாயத்துக்கான தண்ணீரைப் பெறுவதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. மல்லிகைப் பூக்களை ஏற்றுமதி செய்வதற்கான ”வாரியம்” எதுவும் தொகுதியில் இல்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் மல்லிகைப்பூ சென்ட் தொழிற்சாலை அமைப்பது அனைத்துக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக உள்ளது. ஆனாலும் இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து கிடப்பில் இருந்துவருகிறது.

Advertisment

tpkuntram1

திருப்பரங்குன்றத்தில் கைத்தறி நெசவுத் தொழிலும் முக்கியமானதாகும். நிலையூர், கைத்தறி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை இந்தத் தொழில் பெற்றுத்தந்துள்ளது. ஆனாலும் கைத்தறி நெசவுக்கான மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதில்லை. எனவே நெசவாளர்களுக்கு தனியாக ”கூட்டுறவு சொசைட்டி” அமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. திருப்பரங்குன்றம் ஆன்மீக சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. அரசு கல்லூரி கொண்டு வருவதாக இராஜன்செல்லப்பா ஒவ்வொரு முறையும் வாக்குறுதி கொடுத்தும் இன்றுவரை வரவே இல்லை. திருப்பரங்குன்ற மலையின் மேல் ரோப்கார் வசதி கொண்டுவருவதாக வாக்குறுதி கொடுத்தார். இன்றுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திருப்பரங்குன்றத்தின் பின்புறம் உள்ள தென்பரங்குன்றத்தில் சமணர் படுகை, சமணர் குகை, தெப்பக்குளம் ஆகியவை பாழடைந்து கிடக்கின்றன. அதை சீரமைத்து சுற்றுலா தலமாகக் கொண்டுவரலாம். அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இங்கு தொடர்ச்சி யாக அ.தி.மு.க.வே வெற்றிபெற்றிருந்தாலும் சிட்டிங் எம்.எல்.ஏ. இராஜன்செல்லப்பா மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். 

 இந்த தொகுதி அ.தி.மு.க. வாக்கு வங்கி அதிகமுள்ள தொகுதி. தி.மு.க.வை விடுத்து இங்கு அதன் கூட்டணிக் கட்சிகள் நின்றால் வெற்றிபெறுவது சிரமம்தான். 

முக்குலத்தோர், முத்தரையர்கள், சௌ ராஷ்டிர மக்கள் மட்டுமே 50% உள்ளதால் இந்த வாக்குகள் பெரும்பாலும் அ.தி.மு.க. பக்கமே சாயும். தி.மு.க.வே களத்தில் நின்றால் மட்டுமே வெற்றிபெறுவது சாத்தியம். முக்குலத்தோர் வாக்குகளைப் பிரிக்க தினகரன், ஓ.பி.எஸ். இருவரும் ஒன்றாக வேட்பாளரை நிறுத்தினால் அ.தி.மு.க.வுக்கு திண்டாட்டம். தி.மு.க.வுக்குக் கொண்டாட் டம். பா.ஜ.க.வும் இத்தொகுதி மீது ஒரு கண் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. திருப்பரங்குன்றத்தை "கந்தர் மலையா,… சிக்கந்தர் மலையா?' என மதப் பிரச்சினை யாக்கி நடத்திய போராட்டங்களுக்கு பலனிருக்கிறதா என்று உறுதிசெய்ய, பா.ஜ.க. இந்த தொகுதியை கேட்கலாமென்ற முடிவில் காய்நகர்த்துவதாகச் சொல்லப்படுகிறது. பா.ஜ.க.வின் இராம. சீனிவாசனும் இத்தொகுதியில் ஆர்வம் காட்டுகிறாராம். 

த.வெ.க., நாம் தமிழர் தரப்பில் இன்னும் தெளிவான நிலவரம் தெரியவில்லை.