விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக கொடிகட்டிப் பறந்தவர் பொன்முடி. கடந்த 2011-ல் பொன்முடிக்கு எதிராக சி.வி.சண்முகத்தை ஜெயலலிதா விழுப்புரம் தொகுதியில் நிறுத்தினார். பொன்முடியைத் தோற் கடித்து வெற்றிபெற்று அமைச்சரானார் சண்முகம். அந்தத் தோல்விக்குப் பிறகு கடந்த 2016 சட்ட மன்றத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடம்பெயர்ந்தார் பொன்முடி. 2016, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திருக்கோவிலூரில் வெற்றிபெற்றவர், வரும் தேர்தலில் மீண்டும் திருக் கோவிலூர் தொகுதியையே தேர்வுசெய்வார் என்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளராக இருந்து தேசிய நெடுஞ்சாலையில் 108 அடி உயரத்தில் அ.தி.மு.க. கொடியை பறக்கவைத்து ஜெயலலிதாவின் மனதில் இடம்பிடித்தவர் லட்சுமணன். இவருக்கும் சி.வி.சண்முகத்திற்கும் ஏற்பட்ட முட்டல்மோதல்கள் காரணமாக தி.மு.க.வுக்கு மாறிய இவருக்கு கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. தலைமை விழுப்புரம் தொகுதியில் வாய்ப்பு கொடுத்தது. அதில் வெற்றிக்கொடி நாட்டிய லட்சுமணனுக்கு கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளராக பதவிகொடுத்து அசைக்கமுடியாத சக்தியாக உருவாக்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் அதிகமென்பதால் வன்னியரான லட்சுமணனுக்கு தி.மு.க. தலைமை முக்கியத்துவம் அளித்துள்ளது.
வரும் தேர்தலில் மீண்டும் இவருக்கே விழுப்புரம் தொகுதி யில் போட்டியிட தலைமை வாய்ப்பு வழங்கும் என்று உறுதி யாகக் கூறுகிறார்கள் உடன்பிறப்பு கள். ஏற்கனவே நகரமன்ற தலைவராக இருந்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனகராஜ். இவர் விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியைப் பெறுவதற்காக பல தேர் தல்களாக முயற்சிசெய்து வருகிறார். இவர் யாதவ சமூகத்தைச் சார்ந் தவர் என்பதால் இவருக்கான வாய்ப்புகள் கைநழுவிப் போகின்றன.
கடந்த முறை லட்சுமணனுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அ.தி.மு.க. சி.வி. சண்முகம், "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற கதையாக மயிலம் தொகுதியில் நிற்பதற்கு கட்சித் தலைமையிடம் மனு கொடுத்துள்ளார். இவரது சொந்த ஊர் மயிலம் தொகுதியிலுள்ள அவ்வையார்குப்பம். இங்கே வெற்றிபெறுவது சுலபமென்று கருதுகிறார். கட்சியில் நகரச் செயலாளராக உள்ள பசுபதி, கண்டமங்கலம் ஒன்றியச் செயலாளர் ராமதாஸ், கோலியனூர் ஒன்றியச் செயலாளர் சுரேஷ், வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவரும் கவுன்சிலருமான ராதிகா செந்தில் போன்றவர்களும் சீட்டுப் போட்டியில் உள்ளனர்.
விக்கிரவாண்டி
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/vellor1-2026-02-16-17-21-29.jpg)
இரண்டுமுறை இடைத்தேர்தலைச் சந்தித்த தொகுதி. தி.மு.க. ராதாமணி, மறைந்த தால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். கடந்த 2021-ல் தி.மு.க. புகழேந்தி வெற்றிபெற்றார். இவரும் பதவிக்காலம் முடி வதற்குள் மறைந்துபோனதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா வெற்றிபெற்றார். சிவா மீண்டும் ஒரு வாய்ப்பை கட்சித் தலைமையிடம் எதிர் பார்க்கிறார்.
விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாள ராக உள்ள பொன்முடி மகன் கௌதமசிகாமணி, ஒருமுறை கள்ளக்குறிச்சி எம்.பி.யாக இருந்துள் ளார். கடந்த இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் நிற்பதற்கு கௌதம சிகாமணி முயன்றபோதும், ஒரு வன்னியரை வேட்பாள ராக நிறுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அன்னியூர் சிவாவிற்கு வாய்ப்பளித்தது தலைமை. கௌதமசிகாமணியைப் போலவே மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் ஜெயச்சந்திரன் நீண்டகாலமாக சீட்டு கேட்டுவருகிறார். கட்சித் தலைமை ஜெகத்ரட்சகன், துரைமுருகன் போன்றவர்களை போய் சந்தித்துப் பேசுங்கள், அவர்கள் கைகாட்டும் நபருக்கே வாய்ப்பு என்கிறது. ஆனால் அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் போன்றவர்கள் அன்னியூர் சிவாவையே மீண்டும் சிபாரிசு செய்யும் நிலை உள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற முத்தமிழ்செல் வன், எசாலம் பன்னீர்செல்வம், தொழிலதிபர் வி.கே. சுப்பிரமணியன் ஆகியோரும் சீட்டு கேட்டுள்ளனர். ஆனால் இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி பா.ம.க.வுக்கு இந்தத் தொகுதி ஒதுக் கப்படும். அப்படி ஒதுக்கப்பட் டால் தற்போது மயிலம் தொகுதி சிட்டிங் எம்.எல். ஏ.வாக உள்ள சிவக்குமார் விக்கிரவாண்டி யில் நிறுத்தப் படலாம். ஏற் கனவே பா.ம.க. சார்பில் போட்டியிட்ட பனையபுரம் அன்புமணி அல்லது அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி இவர்களில் ஒருவர் நிச்சயம் விக்கிர வாண்டியில் போட்டியிடுவார்கள் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் பா.ம.க. தொண்டர்கள்.
மயிலம்
இங்கு கடந்த 2016-ல், தி.மு.க. சார்பில் வெற்றிபெற்றவர் டாக்டர் மாசிலாமணி. 2021 தேர்தலில் மீண்டும் இவருக்கே தி.மு.க. தலைமை வாய்ப்பு கொடுத்தது. ஆனால் பா.ம.க.விடம் தோல்வியடைந் தார். வரும் தேர்தலில் மாசிலாமணி மீண்டும் மயிலத் தில் போட்டியிட ஆர்வமாக உள்ளார். முன்னாள் வடக்கு மாவட்ட அமைப்பாளர் டாக்டர் சேகர், எக்ஸ் எம்.எல்.ஏ. சேதுநாதன் போன்றவர்களுக்கும் தொகுதியின்மீது ஒரு கண்.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சி.வி.சண்முகத்தை தான் இங்கே கண்டிப்பாக நிறுத்தும். அதேநேரத்தில் இந்த தொகுதியிலுள்ள கீழ்பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சி சிவா. கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியக் குழுவில் உறுப்பினராக உள்ளார். அதோடு கடந்த பத்தாண்டுகளாக கிராமம் தோறும் முகாம் நடத்தி அதிக அளவில் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்தவர். கட்சித் தலைவர் தளபதியின் பாராட்டைப் பெற்றவர். சி.வி. சண்முகத்தை எதிர்த்து போட்டிபோட செஞ்சி சிவா தகுதியான நபர் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
தி.மு.க., அ.தி.மு.க. மேல்மட்டத்தில் வேறொரு கணக்கு வைத்துள்ளதாம். சி.வி. சண்முகத்திற்குப் பதி லாக ஜெ. டிவி நிர்வாக இயக்குனரும் சண்முகத்தின் சகோதரருமான ராதாகிருஷ்ணனை இங்கே நிறுத்துவது. ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள சி.வி. சண்முகத்தை சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசின் (பா.ஜ.) ஆதரவில் மத்திய அமைச்சராக்கலாம் என்ற யோசனை உள்ளதாம். அ.தி.மு.க.வில் நிலைமை அப்படி மாறினால் தி.மு.க.வில் மாவட்டச் செயலாளராகவும் செஞ்சி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள மஸ்தானை மயிலம் தொகுதியிலும், மயிலம் தொகுதிக்கு குறிவைத்திருக்கும் செஞ்சி சிவாவை செஞ்சி தொகுதிக்கும் மாற்றி போட்டியிட வைக்கும் கணக் கும் உள்ளது என்கிறார்கள்.
செஞ்சி
இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ.வாகவும் வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளவர் மஸ்தான். அமைச்ச ராகவும் மாவட்டச் செய லாளராகவும் இருந்து தலைமையின் அதிருப்திக்கு ஆளாகி மந்திரி, மாவட்டச் செயலாளர் இரண்டு பதவிகளையும் பறிகொடுத்து, மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் பெற்றவர். இவரே மீண்டும் களமிறங்க லாம் அல்லது இவரது மகன் முக்தார் அலி இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கேட்கிறார். மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மகன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூபதி போன்றவர்களும் செஞ்சி தொகுதிமீது கண்வைத்துள்ளார்கள்.
அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் ராஜி, மறைந்த மகளிரணி மாவட்டச் செயலாளர் தமிழ்மொழி ராஜதத்தன் மகன் அருண் தத்தன், வழக்கறிஞர் பிரிவு வேலவன், ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் சீட்டுக்கு மோதுகிறார்கள்.
வானூர்
கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட வி.சி.க. வன்னியரசு அ.தி.மு.க. சக்கரபாணியிடம் தோல்வியடைந்தார். இந்த முறை தி.மு.க. வேட்பாளரையே இங்கு நிறுத்தவேண்டுமென்று கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். தி.மு.க. இங்கு போட்டியிட்டால் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் முன்னணியில் உள்ளார். அடுத்து மாவட்ட கவுன்சிலர் கௌதம், கிளியனூர் வேலு, மாவட்ட மகளிரணி மைதிலி, கட்சியின் மூத்த முன்னோடி செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து போன்றவர் களும் சீட்டு கேட்க தயாராக உள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. சக்கரபாணி மீண்டும் போட்டியிட ஆவலாக உள்ளார். இரண்டு முறை நின்ற இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவேண்டுமா? எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று பாடகர் முருகன், முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் மகன் ஐ.டி. விங் அணிப் பொறுப்பாளர் கோகுல்ராஜ் ஆகியோர் மல்லுக்கட்டுகிறார்கள். தொகுதியிலுள்ள கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மண்ணின் மைந்தரான வீராணம் ஆற்றல் அரசு போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிறார்கள் வி.சி.க. தொண்டர்கள். வானூர் தொகுதியை அன்புமணி பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பெற்று முரளி சங்கரை வேட்பாளராக்கும் நிலை உள்ளது என்கிறார்கள் பா.ம.க. தொண்டர்கள்.
திண்டிவனம்
இங்கு கடந்த 2016-ல் தி.மு.க. சார்பில் நின்று வென்றவர் சீதாபதி சொக்கலிங்கம். இவர் கடந்த 2021 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் அர்ஜுனனிடம் தோல்வியடைந்தார். எனவே இந்த முறையும் அ.தி.மு.க. சார்பில் அர்ஜுனனுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேநேரத்தில் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. மரக்காணம் ந.செ. கனகராஜ், மா.இ.அ. சுந்தர் போன்றவர்களுக்கும் தேர்தலில் போட்டியிடும் கனவு உள்ளது. தி.மு.க.வில் மரக்காணம் ந.செ. ரவிகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் தெய்வநாயகம்
சீதாபதி மகன் வழக்கறிஞர் செந்தில் ஆகியோரும் சீட்டுக்கு மோதுகிறார்கள் தி.மு.க. கூட்டணியில் இந்த முறை வி.சி. கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால், வன்னியரசுவை திண்டிவனம் தொகுதியில் நிற்கவைத்து வெற்றி பெறவைக்க திருமா விரும்புவதாகக் கூறுகிறார்கள் வி.சி.க. தொண்டர்கள்.
-எஸ்.பி.எஸ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/16/vellor-2026-02-16-17-21-13.jpg)