தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், இரு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் தங்களுக்குதான் எம்.எல்.ஏ. சீட் என்று தொகுதியை ரணகளப்படுத்தி வருகின்றனர். 

Advertisment

1967 முதல் 2021 வரை நடந்த 13 சட்டமன்றத் தேர்தல்களில், நாமக்கல் தொகுதியில் வெற்றிபெற்ற வேட்பாளர் சார்ந்த கட்சி அல்லது அவரின் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது இத்தொகுதியின் ஸ்பெஷாலிட்டி. 

Advertisment

கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், உடையார், பட்டியல் சமூகத்தினர் கணிசமாகவும் உள்ள நாமக்கல் தொகுதியில், தி.மு.க.வை விட அ.தி.மு.க.வுக்கு சற்று கூடுதல் செல்வாக்குள்ளது. எனினும், தி.மு.க. தரப்பில் சீட் கேட்டு பலரும் முட்டிமோதிக்கொண்டி ருக்கிறார்கள். 

"தி.மு.க. தரப்பில் சிட்டிங் ராஜ்யசபா எம்.பி.யும், நாமக்கல் கிழக்கு மா.செ.வுமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நாமக்கல் தொகுதியைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். மாஜி மத்திய அமைச்சர் காந்தி செல்வன் சமீபத்தில் முதல்வரை நேரில் சந்தித்துவிட்டு வந்ததிலிருந்து அவர் பெயரும் பலமாக அடிபடுகிறது. மா.செ. வாய்ப்புக்காகவும் மேலிடத்தில் கேட்டிருக் கிறார்.   

Advertisment

இவர்கள் தவிர, "சிட்டிங்' எம்.எல்.ஏ., ராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி துணைமேயர் பூபதி,  தி.மு.க. சட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நக்கீரன், மகளிரணி ராணி ஆகியோரும் சீட் எதிர்பார்ப்பி லிருக்கிறார்கள்'' எனக்கூறும் தி.மு.க.வின் மூத்த உடன்பிறப்புகள், மேற்கு மா.செ. மீது கடும் அதிருப்தி நிலவுவதாகவும் சொல்கின்றனர். 

''கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நாட்டு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். நாமக்கல் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கொ.வெ. கவுண்டர் சமூகத்தினர், நாட்டு கவுண்டர் சமூகத்தினரை ஆதரிக்க மாட்டார்கள். நாமக்கல் பஸ் நிலையத்தை இடமாற்றியது, பழைய அரசு மருத்துவ மனையை தாலுகா மருத்துவமனையாக உயர்த்தாதது, நாமக்கல்லுக்கு வரவேண்டிய டைடல் பார்க்கை ராசிபுரத்திற்குக் கொண்டு சென்றது உள்ளிட்ட விவகாரங்களில் ராஜேஷ்குமார் மீது அதிருப்தி நிலவுகிறது. 

ராசிபுரம் பஸ் நிலையத்தை அணைப் பாளையத்திற்கு கொண்டு சென்றதன் பின்னணியில் மா.செ. முதல் அமைச்சர்கள் வரை ஆதாயமிருப்பதாகக் கூறி தி.மு.க. கூட்டணிக் கட்சியினரே போராடிவருகின்றனர் என்கிறார்கள் கழகத்தின் மூத்த நிர்வாகிகள். இன்னும் சிலர், ''ராஜேஷ்குமாருக்கு சீட் கிடைக்காதபட்சத்தில், தனது ஆதரவாளரான மாநகராட்சி துணை மேயர் பூபதிக்கு பரிந்துரை செய்வார். கொ.வெ. கவுண்டர் சாதி பலம், பண பலமுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ., ராமலிங்கத்தையே தி.மு.க. மீண்டும் களமிறக்கினாலும் ஆச்சரியமில்லை'' என்கிறார்கள். 

இவை ஒருபுறமிருக்க, ராஜேஷ்குமாருக்கு ஏறக்குறைய மேலிடம் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் கூறுகின்றனர். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ராஜேஷ்குமார் அமைச்சராகிவிடும் கனவில் இருப்பதாகவும் சொல்கின்றனர்.  

அ.தி.மு.க தரப்பில் விசாரித்தோம்... 

''நாமக்கல் தொகுதியில் 2011, 2016 தேர்தல்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற மாநகர செயலாளர் கே.பி.பி.பாஸ்கர், சென்ற 2021 தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் மீண்டும் சீட் கேட்டு அழுத்தம் கொடுத்துவருகிறார். மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தன்னை செயலாளராக நியமிக்கும்படி போர்க்குரல் எழுப்பிய திலிருந்து பாஸ்கருக்கும், மா.செ.வான மாஜி தங்கமணிக்கும் முட்டிக்கொண்டது. நாமக்கல்லில் பெரும்பான்மையான ஒ.செ.க்கள் பாஸ்கருக்கு ஆதரவாக உள்ளதால், தங்கமணி நடத்தும் கூட்டங்களுக்கு செல்லவிடாமல் தடுத்துவிடுவார். எடப்பாடியிடமும் நெருக்கத்தை வளர்த்துக்கொண்ட நிலையில், தங்கமணிக்கு 'செக்' வைப்பதற்காக பாஸ்கருக்கு எடப்பாடி பச்சைக்கொடி காட்டியதாகச் சொல்கிறார்கள். கடந்த 2016-2021 காலகட்டத்தில் அவர் எம்.எல்.ஏ.வாக சாலை வசதிகளை செய்து கொடுத்துள்ளது பாஸ்கருக்கு ப்ளஸ்.

அதேநேரம், தங்கமணிக்கும், எடப்பாடிக்கும் விசுவாசியாக இருக்கும் அ.தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் "ஸ்ரீதேவி' மோகனும் சீட் எதிர்பார்க்கிறார். 2011-ல் போட்டியிட்டபோது கே.பி. பி.பாஸ்கருக்கு தேர்தல் டெபாசிட் செலுத்தியதே "ஸ்ரீதேவி' மோகன்தான். வளர்ந்தபின் மூத்த நிர்வாகிகளை மதிக்காததில் பாஸ்கரும் 'அமைதிப்படை' அமாவாசை போலதான்!

"ஸ்ரீதேவி' மோகன் கோழிப்பண்ணை நடத்துகிறார். கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவிகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கி தொகுதிக்குள் கவனம் பெற்றுள்ளார். எனவே, சம பலமுள்ள பாஸ்கர் அல்லது "ஸ்ரீதேவி' மோகன் ஆகிய இருவரில் ஒருவருக்குதான் சீட். இவர்களுடன், இலக்கிய அணி நிர்வாகி காந்திமுருகேசன் உள்பட 24 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்'' என்கிறார்கள். 

இது ஒருபுறமிருக்க, "கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், மனைவி உமா மீதும் வழக்கு விசாரணையில் இருக்கிறது. கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவரும் பாஸ்கர் மட்டும்தான்'' என்று பாஸ்கரின் எதிர்த்தரப்பு பத்தவைக்கிறது. 

தி.மு.க., அ.தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் மேலும் கனல் கொப்பளிக்குமென்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.