தமிழகத்துடன் சட்ட மன்றத் தேர்தலை சந்திக்கும் மற்றொரு மாநிலம் அசாம். 2016 அசாம் சட்டமன்ற தேர்தல் முடிவைப் பாடமாகக் கொண்டு மகாகூட்டணியுடன் வந்திருக்கிறது காங்கிரஸ். போடோலாந்து கட்சியைத் தள்ளிவிட்டு யு.பி.பி. எல்.லை மட்டும் சேர்த்துக் கொண்டு களம் காணுகிறது பா.ஜ.க. அசாமில் ஆளும் பா.ஜ.க. கூட்டணிதான் வெல்லும் என ஆரம்பகட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முதலில் பா.ஜ.க. கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள், அவர்களுக்கு சாதகமாக என்னவெல்லாம் இருக்கிறதெனப் பார்ப்போம்.
அசாமில் 2016 தேர்தல் முடிவு காங்கிரஸ் கையிலிருந்த அதிகாரத்தைப் பிடுங்கி பா.ஜ.க. விடம் தந்தது. மொத்தமுள்ள 126 இடங்களில் 86 இடங்களைப் பிடித்து பா.ஜ.க. கூட்டணி அரியணையேற, காங்கிரஸோ முந்தைய தேர்தலைவிட 52 இடங்கள் குறைவாகப்பெற்று 26 இடங்களில்தான் வெற்றிபெற்றது.
வெற்றியைத் தக்கவைக்க வேண்டுமென்பதற்காகவும், மாணவர்களை ஈர்க்கவேண்டும் என்பதற்காகவும் சில குறிப்பிட்ட திட்டங்களை பா.ஜ.க. அறிமுகப் படுத்தியது. அரசு விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு 7000 ரூபாய், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி, பள்ளிக்கு வருகை தரும் ஒவ்வொரு நாளும் மாணவிகளுக்கு 100 ரூபாய் என கல்வியை ஊக்கப்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு வரவேற்பிருக் கிறது. அதேபோல மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட கிராம் வரை தங்கம் கொடுப்பதும் தாய்க் குலங்களை ஈர்த்திருக்கிறது.
வரவிருக்கும் தேர்தலையும், அசாம், மேற்குவங்க தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும் மனதில்கொண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் அறிவித்தது. அதன் பலனாக தேயிலைத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் 3000 ரூபாய் வரவுவைக்கப் பட்டுள்ளது. அசாமில் கிட்டத் தட்ட 34 சதவிகித முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் தேசிய குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகைக் கணக்கீட்டை ரசிக்கவில்லை. அதிலும் அசாம் மாநில கணக்கெடுப்பில் லட்சக் கணக்கானவர்கள் விடுபட்டிருந் தது பெரிய கொந்தளிப்பாகி பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கொரோனாவின் வருகை, அந்தப் போ ராட்டங்களின் வெம்மையிலிருந்து மாநில அரசை தற்காலிகமாக தப்பிக்கச் செய்திருக்கிறது.
இந்த ஐந்தாண்டு காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் சில நிறைவேற்றப்பட்டும் சில நிறைவேற்றப்படாமல் இருந்தாலும், மாநில அரசின் மீது மாபெரும் ஊழல் புகார் எதுவும் எழவில்லை.
இந்தத் தன்னம்பிக்கையோடு பா.ஜ.க., அசாம் கணபரிஷத்தோடும், யு.பி.பி.எல்.லோடும் தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகிவருகிறது. சென்றமுறை கூட்டணியிலிருந்த போடோலாந்து மக்கள் முன்னணி இந்த முறை காங்கிரஸ் கூட்டணிக்கு வந்துவிட்டது. வழக்கம்போல தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சிக்கும் காங்கிரஸையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் தேசிய விரோதிகளாகவும் இந்து சமய விரோதிகளாகவும் துருவப்படுத்தும் அணுகுமுறையுடனே தேர்தலைச் சந்திக்கிறது.
மாறாக, காங்கிரஸ் இந்த முறை எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராயில்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தலைச் சந்திக்கும் யுக்தியைக் கையாள்கிறது. காங்கிரஸ் கூட்டணியில், சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ. எம்.எல். போன்ற கம்யூனிஸ்ட் அணி, முஸ்லிம் வாக்குகளை கணிசமாக வைத்திருக்கும் போடோலாந்து மக்கள் முன்னணி, அஞ்சலிக் கணமோர்ச்சா, ஆர்.ஜே.டி என தாராளமாக கட்சிகள் இணைந்துள்ளன.
இந்த கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தைக் கணக்கிட்டால், பா.ஜ.க. கூட்டணியைவிடவும் காங்கிரஸுக்குத்தான் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் கூடுதல் வாக்கு வருகிறது. தவிரவும் மாநிலத்தில் 34 சதவிகிதமிருக்கும் முஸ்லிம் வாக்குகளின் பெரும்பான்மை காங்கிரஸ் கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியாவிலேயே அசாமில்தான் 26.4 சதவிகிதம் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. இதேபோல் அதிக வேலைவாய்ப்பின்மை நிலவும் மேற்குவங்கத்தில் மம்தாவை வேலைவாய்ப்பின் மைக்கு பா.ஜ.க. பொறுப்பாக்கும்போது, அசாம் வேலை வாய்ப்பின்மைக்கு பா.ஜ.க.தானே பொறுப்பேற்றாக வேண்டும்?
விலைவாசி உயர்வு அசாமியர்களை தலை யைப் பிய்த்துக்கொள்ள வைத்திருக்கிறது. பெட் ரோல், கேஸ், அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என அவர்களின் வாங்கும் சக்தியை மீறிய விலைவாசி வில்லன் ரோல் எடுத் தால், பா.ஜ.க.வுக்கு தலைவலிதான். அசாம் ஜதியா பரிஷத், அஞ்சலிக் கணமோர்ச்சா போன்ற புதிய கட்சிகள் வந்திருக்கின்றன. இவற்றின் தாக்கத்தை தேர்தலுக்கு முன் கணிக்கமுடியவில்லை. இவற்றில் அஞ்சலிக் கணமோர்ச்சா காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. அசாம் கணபரிஷத்துக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, பாரம்பரியமான கணபரிஷத் வோட்டுகளைப் பிரித்தால் காங்கிரஸுக்கு நிச்சயமாக ஆதாயம்.
7 லட்சம் தேயிலைத் தொழிலாளர்கள் ஆண்டுக்கணக்கில் ஊதிய உயர்வு கேட்டு போராடிவருகிறார்கள். அவர்களுக்கு ஊதிய உயர்வளிப்பதாக வாக்களித்துதான் பா.ஜ.க. சென்ற முறை ஆட்சிக்கு வந்தது. 351 ரூபாயாக உயர்த்தித்தரக் கேட்ட கூலியை 167 ரூபாயாக மட்டுமே உயர்த்தியதில் தொழிலாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேயிலை கிள்ளுவதைப் போல முதல்வர் பதவியை எளிதாகப் பறித்துவிடமுடியாது என்பதையே அசாம் தேர்தல் களம் காட்டுகிறது.