ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் ஒன்று ஆற்காடு தொகுதி. தொகுதியில் பெரும்பான்மையாக வன்னியர்கள், பட்டியல் சமூகத்தினர், முதலியார்கள், நாயுடுக்கள் என உள்ளனர். இத்தொகுதியில் விவசாயம்தான் பிரதானம், அதற்கடுத்து நெசவுத் தொழிலும், பீடித் தொழிலும் உள்ளது.
1962-ல் தி.மு.க.வின் முனிரத்தினம் வெற்றிக்கணக்கைத் தொடங்கிவைத்தார். அதன்பின் தி.மு.க.வின் பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமி, 1967, 1971-ல் தேர்தலில் வெற்றிபெற்றார். அ.தி.மு.க. உருவானபின் 1977, 1980, 1984 தேர்தல்களில் வெற்றிபெற்றது. 1989-ல் தி.மு.க.வின் கஜபதியும், 1991-ல் வி.ஐ.டி. விஸ்வநாதனும், 1996-ல் தி.மு.க.வின் சுப்பிரமணியும், 2001-ல் அ.தி.மு.க. நீலகண்டனும், 2006-ல் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இளவழகனும், 2011-ல் சீனுவாசனும் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.க்களாக வலம் வந்தார்கள். 2016 தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஈஸ்வரப்பனுக்கு சீட் தர அவரும் வெற்றிபெற்று எம்.எல்.ஏவானார். 2021-ல் அவரே வெற்றிபெற்று இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆற்காடு டூ ஆரணிக்கு புறவழிச்சாலை அமைக் கப்படும். அரசின் சார்பில் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் அமைக்கப்படும். காவனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கித் தரப்படும். கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் அதிகப்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி தந்தார். இதில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கொண்டு வரவில்லை. இதனால் இரண்டு பேருந்துகள் மாறி சோளிங்கர், வேலூருக்கு மாணவர்களும், வாலாஜாவிலுள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு மாணவிகளும் சென்று படிக்கிறார்கள்.
சில தனியார் கல்லூரி முதலாளிகள் எம்.எல்.ஏ.வுக்கு நண்பர்களாக இருப்பதால் அரசுக் கல்லூரிகள் கொண்டுவர முயற்சிக்கவில்லை. தொகுதியின் கடைசியிலுள்ள முக்கிய ஊரான வாழைப்பந்தல் கிராமத்துக்கு சரியான பேருந்து வசதிகள் இல்லை, அதனை சரிசெய்ய பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொகுதிக்குள் சிட்கோ கொண்டுவந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம், அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. முன்பு அமைச்சருக்கு எதிரான மனநிலையில் இருந்தவர், இப்போது அமைச்சரிடம் சரணாகதியடைந்து அவரையே சுற்றிவருகிறார். ஈஸ்வரப்பன் மூன்றாவது முறையாக சீட் வாங்கி நிற்க முயற்சிக்கிறார். அவருக்கே மீண்டும் சீட் தரணுமா என இப்போதே கட்சி நிர்வாகிகள் சுணக்கத்தில் உள்ளனர்.
2021-ல் தி.மு.க. ஆட்சியமைப்பதற்கு முன்புவரை அ.தி.மு.க.வில் அப்போது அமைச்சராக இருந்த வீரமணிக்கு நெருக்கமாக இருந்தவர் தொழிலதிபர் சாரதி. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அமைச்சர் காந்தி மூலம் தி.மு.க.வில் இணைந்து பணம் செலவு செய்ததால் மாவட்டப் பொருளாளர் பதவியை பெற்றுத்தந்தார் காந்தி. தனக்கென தனி டீம் உருவாக்கி செயல்படத்துவங்கினார் சாரதி. ஒருகட்டத்தில் அமைச்சர் காந்திக்கும், அவரது மகன் வினோத்காந்திக்கும் எதிராகச் செயல் படத் தொடங்கியதால் அமைச்சருக்கும் சாரதிக்கும் முட்டிக்கொண்டது. இதனால் அமைச்சர் தரப்பு சாரதியை ஒதுக்கியதோடு அவரை பொருளாளர் பதவியிலிருந்து நீக்கவேண்டுமென காய் நகர்த்தியது. உடனே சாதிரீதியாக பொதுச்செயலாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகனுடன் நெருக்கமாகி பதவியைத் தக்கவைத்துக்கொண்டார் சாரதி. வரும் தேர்தலில் எப்படியாவது எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிட வேண்டுமென இவரும் முயற்சிக்கிறார்.
ஆற்காடு வீராசாமியின் தம்பி சீனுவாசனின் மகனும், திமிரி மேற்கு ஒ.செ.வாக உள்ள திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக் சீட் வாங்க காய் நகர்த்திவருகிறார். இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியின் மகன் மருத்துவரணி மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் சரவணன் சீட் கேட்பாளர் பட்டியலில் உள்ளார். ஆளும்கட்சியான தி.மு.க.வில் இந்த நால்வரும் தான் கடும் போட்டியில் உள்ளனர்.
அ.தி.மு.க.வில் ராணிப்பேட்டை மேற்கு மா.செ. சுகுமார், தொகுதிமாறி ஆற்காட்டில் போட்டியிட நினைக்கிறார். சுகுமாரின் மனைவி, "ராணிப்பேட்டை தொகுதியில் இஸ்லாமியர் வாக்கு இருக்கு, இங்க நின்னீங்கன்னா போனமுறை மாதிரி இந்தமுறையும் தோத்துடுவீங்க, அதனால் ஆற்காடு தொகுதியில நில்லுங்க' எனச் சொன்னாராம். அதனால் ராணிப்பேட்டை தொகுதிக்குப் பதில் ஆற்காடு தொகுதியில் போட்டியிட விரும்பி இ.பி.எஸ்.ஸிடம், "ஆற்காடு தொகுதி தாங்க. என் தொகுதிக்கான முழுச்செலவையும் நானே பார்த்துக்கிறன்' என கோரிக்கை வைத்து வருகிறார்.
ஆற்காடு, திமிரி, கணியம்படியில் தகுதியான நிர்வாகிகள் பலரும் உள்ளோம், எங்களில் யாருக்காவது ஒருத்தருக்கு தாங்க என இ.பி.எஸ்.ஸிடம் கூறிவருகின்றனர். அதன்படி ஆற்காடு ஒ.செ. குமார், பா.ஜ.க.வுக்கு போய்விட்டு மீண்டும் அ.தி.மு.க. திரும்பியவர், பணமில்லாமல் திவாலாகி கட்சியில் சைலண்ட்மோடிலுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனுவாசன் முயற்சிக்கிறார். கணியம்பாடி ஒ.செ. ராகவன், திமிறி ஒ.செ. சொரையூர் குமார், இ.பி.எஸ். மற்றும் தலைமை கழகத்தையே சுற்றிச் சுற்றி வரும் ஆற்காடு முன்னாள் நகரமன்ற தலைவரும், மாவட்ட மகளிரணிச் செயலாளருமான ராதிகா, ஆற்காடு ந.செ. ஜிம் சங்கர் போன்றோர் சீட் வாங்கிவிட முட்டிமோதுகின்றனர்.
அன்புமணி தரப்பு பா.ம.க.வும் இத்தொகுதியைக் குறிவைக்கிறது. "கூட்டணியில் இவர்களுக்கு கிடைக்கும்பட்சத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மா.செ.வுமான இளவழகன் நிறுத்தப்படுவார்' என்கிறது அக்கட்சி வட்டாரம். "த.வெ.க.வின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாவட்டப் பொரு ளாளர் சுரேஷ் ஆகியோர் நிற்க முயற்சிக் கிறார்கள்' என்கிறார்கள் அக்கட்சியினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/06/arcot-2025-12-06-03-06-46.jpg)