கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றஎண் 649/ 2020, 650/2020 அடிப்படையில் 176(1)ஆ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு, சட்டத்திற்கு புறம்பாக கைது செய்தல், கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளதாக தங்களது முதல் தகவல் அறிக்கை (தஈ.0502020ந0009)யினைப் பதிவு செய்துள்ளனர் சி.பி.ஐ.யினர். எதிரிகள் யாரென்று எஃப்.ஐ.ஆரில் பெயர் குறிப்பிடாமல் விசாரணை தொடங் கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணையில் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கடந்த 7ம் தேதியன்று மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா, இன்ஸ்பெக்டர் அனுராக் பூரன்குமார், சப்-இன்ஸ்பெக்டர்களான சுஷில்குமார் வர்மா, சச்சின், ஏட்டு அஜய்குமார் மற்றும் காவலர்கள் சைலேந்திரகுமார், பவன்குமார் திரிபாதி ஆகியோர் அடங்கிய குழுவினரை நியமித்தார் சிபிஐ எஸ்.பி. தன்மயா பெகரா.
ஜூலை 10ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்திற்கு மாலை வேளையில் வந்த சிபிஐ குழுவிடம், இந்த வழக்கு தொடர்பாக இது நாள் வரை தாங்கள் செய்த பணிகளை, விசாரணை செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை, கைப்பற்றிய ஆவணங்களை பட்டியலிட்டு முறையாக வழங்கியது சிபிசிஐடி. கோப்புகளிலுள்ள அத்தனை பக்கங்களையும் ஒவ்வொன்றாக படித்துப் பார்த்த ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தான் கையோடு கொண்டு வந்திருந்த நோட்புக்கில் குறித்துக் கொண்டார்.
சனிக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இல்லத்திற்கு வந்து விசாரணையை சிபிஐ அதிகாரிகள், ஜெயராஜின் மனைவி செல்வராணி, உறவினர்கள் உள்ளிட்ட 14 நபர்களிடம் விசாரித்து குறிப்புக்களை எடுத்துக் கொண்டனர். இதே வேளையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தையும், இவர்கள் கூறுவதையும் ஒப்பிட்டு அடிக்கோடிட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதில் ஜெயராஜின் அனைத்து மகள்களும் நேரடியாக விசாரணையில் கலந்து கொண்ட நிலையில், மூத்த மகள் பெர்சி மட்டும், தனக்கு அம்மை நோய் கண்டிருப்பதால் திரை மறைவிலிருந்து சிபிஐ அதி காரிகளின் கேள்விக்கு பதில் கூறலானார். இடையினில் மாலை வேளையில் சரியாக 3.55க்கு சிபிஐயில் நான்கு அதிகாரிகள் கொண்ட ஒரு டீம் மட்டும் தனியாக பிரிந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஆத்திக்குமாரிடம் விசாரணையை ஆரம்பித்து, கடை நிலை ஊழியர் வரை விசாரித்து விசாரணையை முடித்த போது மாலை 6 மணி. இறந்தவர்களின் குடும்பத்தில் மட்டும் ஏறக்குறைய ஏழு மணி நேரம் விசாரணை நேரத்தை எடுத்துக் கொண்ட நிலையில், மதிய வேளையில் அங்கேயே சாப்பாட்டை வரவழைத்து, விசாரணை நடைபெறும் இடத்திலேயே சாப்பிட்டு முடித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இது இப்படியிருக்க, ""அனைவரும் தாங்கள் கேட்டவற்றை மட்டுமே பதிலாக தருகின்றார்கள். அது நடந்த கொலையை தெரிவிக்கின்றது. கண்ணால் பார்த்த சாட்சியங்களை இன்னும் விசாரிக்கவில்லை. அதுவும் நிறைவுறும் பட்சத்தில் கொலைக்கான காரணம் கண்டறிந்து எதிரி யார்? என்பதனை தெளிவாக அறிவிப்போம்'' என்கின்றனர் விசாரணை டீமிலுள்ள அதிகாரிகள்.
இதே வேளையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனக்கிட்ட உத்தரவினை நிறைவேற்றும் பொருட்டு சனிக்கிழமையன்று கோவில்பட்டி கிளைச்சிறையில் மூன்றாம் முறையாக விசாரணையை துவக்கிய கோவில்பட்டி ஜே எம் 1 மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அங்குள்ள சிறை வார்டன், காவலர்களை விசாரித்தும், அங்கிருந்த ஆவணங்களை கையோடு கொண்டு வந்த கம்ப்யூட்டர் மற்றும் ஜெராக்ஸ் பிரிண்டர் மூலம் காப்பி செய்துவிட்டு புறப்பட்டார். இதில் அங்குள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்ய வேண்டுமென கேள்வி எழுப்பிய நிலையில், ""சிசிடிவியே வேலை செய்யாது'' என பதிலளித்தது சிறை நிர்வாகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- நாகேந்திரன்
படங்கள் : ப.இராம்குமார்
__________________
சாத்தான் குள 'கப்ப'பொம்மன்கள்!
கார்டைச் சொருகினால் கரன்சிகள் வந்துவிழுகிற ஏ.டி.எம். மெஷினாகவே காவல்நிலையத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் சாத்தான் குளம் போலீசார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மாறுதலாகி இங்கே வந்ததும் ஆற்று கருமேணியாறு மணல் அவர் பார்வையில் பட்டுவிட்டது.
குறிப்பிட்ட மணல் மாஃபியாக் களுடன் கூட்டணி போட்டவர், லோடு ஒன்றுக்கு ரெண்டாயிரம், மூவாயிரம் என்ற பகடியில் திருட்டு மணல் கொள்ளையை அனுமதிக்க, அன்றாடம் பல லோடுகள் அவரது ஆசியால் பறந்திருக்கின்றன. கொரோனா காலத்திலும் மாதம் ஒன்றரை லட்சம் ஸ்டேஷனுக்கு மணல் கப்பம் வந்துள்ளது.
இன்ஸ் ஸ்ரீதர் தலைமையிலான எஸ்.ஐ.க்கள் லாக்டவுன் வாய்ப்பைத் பயன்படுத்தி சாத்தான்குளம் சரகத்தில் அங்கென்றும் இங்கென்றுமாக கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதை தங்கள் மாமூல் வருமானத்திற்காக ஊக்கம் கொடுத்தனர். அதனால், பழைய சாராய வடிப்புப் புள்ளிகள், லாக்டவுன் நேரத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் அல்லாடுபவர் களெல்லாம் இன்ஸ் ஸ்ரீதர் தயவில் ஊறல் போடும் தொழிலுக்கு வந்துவிட்டார்கள். ஊறலுக்கு இரண்டாயிரம் கப்பம் என்ற அடிப்படையில் சாத்தான்குளத்தையே கள்ளச்சாராய பேக்டரி ஆக்கிவிட்டார்கள்.
ஸ்டேஷனுக்கு வரும் மொத்தக் கப்பத் தொகையில் மாவட்ட மதுவிலக்கு அதிகாரிகளையும் கவனித்துவிடுவதால் கொரோனா லாக்டவுன் நேரத்தில் அவர்களின் தொந்தரவில்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.
கடந்த ஏப்ரல் 27 அன்று சாத்தான்குளம் வந்த மதுவிலக்குப் பிரிவின் நெல்லை ரேஞ்ச் புலனாய்வுப் பிரிவின் எஸ்.எஸ்.ஐ. முத்து மற்றும் ஏட்டு வேல்சவுத்திரி தலைமையிலான டீம், குடும்பத்தோடு தொழிலில் இருந்த வடிப்புப் புள்ளிகளை மடக்கி ஐந்நூறு லிட்டர் ஊறல் 200 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றி அப்படியே கேங்காக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர்.
முறையாக வழக்குப் பதிவு செய்யவேண்டிய இன்ஸ் ஸ்ரீதரும் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனும் 50 லிட்டர் ஊறல் 5 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது என, ஆண்கள் 2 பேர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்து மற்றவர்களைத் தப்பவிட்டுள்ளனர்.
மணல்மூலம் வரும் கப்பத்தொகை மற்றும் வடிப்புகளில் கிடைக்கும் மாமூல் என மொத்தத் தொகையும் பிரிக்கப்பட்டு, இன்ஸ், எஸ்.ஐ.க்கள், போலீசார் என்று ஸ்டேஷனின் மொத்தப் போலீசாரின் தகுதி அடிப்படையில் பங்கு சேதாரமில்லாமல் போய்விடுமாம்.
தவிர மணல், மற்றும் வடிப்புகள் உள்ளிட்ட இதர மாமூல்களில் வரும் கப்பத்தின் சற்று கூடுதல் பங்கு, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடப்பவைகளை உடனுக்குடன் மாவட்ட எஸ்.பி.யின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் தனிப்பிரிவின் ஏட்டு சந்தனக் குமாருக்கும் போய்விடுவதால், அவர் இந்தத் தகவல்களை எஸ்.பி. அலுவலகத்திற்குத் தெரியாமல் மறைத்து விடுவார். தந்தை-மகன் கொலையிலும் அவரது நடவடிக்கை இப்படித்தான் இருந்துள்ளது. எஸ்.பி. அலுவலகம், அவரை அருகிலுள்ள மெய்ஞ்ஞானபுரம் ஸ்டேஷனுக்கு சாதாரண ஏட்டாக டிரான்ஸ்பர் செய்ததால் அவர் தப்பித்துள்ளார்.
-பரமசிவன்
படம் : ப.இராம்குமார்
______________
மொழிச்சிக்கலில் சி.பி.ஐ.!
சி.பி.ஐ.யின் ஏ.டி.எஸ்.பி., விஜயகுமார் சுக்லா ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த பிராமணர். அவரோடு வந்தவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்த இந்தி பேசுபவர்கள். தமிழகத்தில் விசாரணை என்பதால் மொழிச் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தங்களின் விசாரணைக்கு உதவுவதற்காக, சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து இரண்டு பேரை உடனழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜின் மனைவி, மகள்களிடம் இரண்டு மணி நேரமாக விசாரணை நடத்தியிருக்கிறது சி.பி.ஐ. அப்போது சாத்தான்குளம் இட்டமொழியைச் சேர்ந்த ஜெயராஜின் தங்கை ஜெயாவின் கணவரான ஜோசப்பும் அங்கே இருந்திருக்கிறார். மும்பையில் பணிநிமித்தமிருப்பதால். அவர் இந்தியில் சரளமாகச் சி.பி.ஐ.யினரிடம் பேசி, நடந்ததை விபரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறாராம்.
-பரமசிவன்