மிழகத்திலுள்ள 6 கோடியே 27 லட்சம் வாக்காளர்களில் இளைஞர்களின் எண்ணிக்கை 9 லட்சம் பேர். 18 வயது நிறைந்த இவர்களில் பெரும்பான்மையானோர் முதன்முறை வாக்குச்சாவடியை மிதிப்பவர்கள். வாழ்க்கை பற்றிய வண்ணக் கனவுகளுடன் இருக்கும் இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் புதிதாக வருவார்கள். இந்த இளைஞர் சக்தி யாருக்கு வாக்களிக்கும் என்பதை எளிதாக கணிக்க முடியாது.

Advertisment

survey

இவர்களது சிந்தனையைக் கவரும் தலைவர்களின் முயற்சி கூட பலனளிக்காமல் போகும். பழைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் எப்படி மாறுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது சவாலான சமூக விஞ்ஞான பரிசோதனை. தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் இந்தத் தேர்தலில் கலைஞர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் ஆளுமைகள் இல்லை. கமல் போன்ற புதிய ஆளுமைகள், எடப்பாடி என்கிற புதிய முதலமைச்சர் வேட்பாளர் என இந்தப் புதிய ஆளுமைகள் கூட வாக்காளர்களான இவர்களுக்கு மிகமிக புதிய ஆளுமைகள்.

மொத்தத்தில்… தமிழகத்தைச் சேர்ந்த இந்தப் புதிய இளைஞர்களின் அரசியல் எண்ண ஓட்டத்தை அறிய கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நக்கீரன் மெகா கருத்துக் கணிப்பை நடத்தியது. கனவுகளுடன் வலம்வரும் இளையோர் அவர்கள் பல புதிய கவிதைகளைத் தங்களது பார்வையாகத் தந்தார்கள்.

Advertisment

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்லூரி மாணவரான பிரவீன், "நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை சரி செய்வதற்குப் பதில் தனியார்மயமாக்கினால் எல்லாம் சரியாகிவிடும் என எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் நாளை அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் அதையே தான் செய்யப்போகிறார்கள். அதனால் மாற்றத்தைத் தருகிறோம் என்கிற கட்சிக்கு வாக்களிக்க வுள்ளேன். அதனால் தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்'' என்கிறார்.

திருவண்ணாமலை, செங்கத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்கிற கல்லூரி மாணவி, "நடப்பு அரசியல், அதில் கட்சிகளின் நடவடிக்கை தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம்' என வரிசையாக அடுக்கி, முதல்முறை வாக்களிக்கும் மாணவியிடம் இத்தனை அரசியல் தெளிவா? என ஆச்சரியப்பட வைக்கிறார்.

""நீட் தேர்வால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் கிராம மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான கனவு எட்டாக்கனியாக இருந்ததை 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு மூலம் நிறைவேற்றிய எடப்பாடி அரசுக்கு எனது முதல்வாக்கு. நான் மருத்துவம் படிக்க முடியவில்லை. என்றாலும் என் தம்பி, தங்கைகள் படிக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சி எனக்கு உண்டு. எங்கள் பகுதியில் இருந்து மட்டும் பத்து கிராமப்புற அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவக் கல்லூரிக்கு சென்றுள்ளார்கள். இன்னும் நிறைய பேர் செல்வார்கள்'' என்றார் கொத்தமங்கலம் ரவீணா.

Advertisment

""எடப்பாடி தனது ஒரே கையெழுத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவை சிதைத்துவிட்டார். ஓய்வுபெற வேண்டி யவர்களுக்கு மேலும் இரண்டு வருட கால நீட்டிப்பு தந்துவிட்டார். இதனால் எனக்கு முன்னால் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்கள் மட்டுமல்ல… அடுத்து நானும் பாதிக்கப்படுவேன். அதனால்தான் உதயசூரியனுக்கு என் முதல் வாக்கு'' என களக்குடிதோப்பு ராஜேஷ் தனது முதல் வாக்குக்கான வாக்களிப்பதற்கான காரணத்தை விளக்கினார்.

n

""தி.மு.க. வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்த முடியுமா? தற்போது டிகிரி முடித்துவிட்டு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஜவுளிக்கடை, தனியார் பள்ளி, கூலி வேலை என வேலை செய்கிறார்கள். பட்டப் படிப்பை முடித்ததும் ஒவ்வொரு தாலுகாவிலும் அரசுப் பணிக்கு செல்ல அரசு சார்பில் பயிற்சிக் கூடத்தை அரசு நிறுவ வேண்டும். இலவசங்களை ஓட்டுக்காக அனைவருக்கும் கொடுக்காமல், முடியாதவர்களுக்கு கொடுத்துவிட்டு, வீட்டுக்கு ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரச வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. அரசு இதைச் செய்ததாக தெரியவில்லை. இதற்கு முன்பு இருந்த தி.மு.க. அரசு என்ன செய்தார்கள் என்று தெரியாத வயதில் இருந்தோம்'' என நீண்ட விளக் கத்தைத் தந்தார் காட்டுமன்னார்கோவில் ரேஷ்மா.

""எல்லா துறை சார்ந்த கல்வியையும் இலவசமாக தரமுடியும் என சீமான் சொல்றார். தொடர்ந்து அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஆட்சி செய்றாங்க. இந்தமுறை சீமானுக்கு நான் வாக்களித்து வாய்ப்பளிக்கப் போகிறேன்'' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஜெனிபர்.

""ஏழாம் அறிவு படத்தில் நாய் மூலம் நோயைப் பரப்பி நாட்டை அழிக்க முனைவார்கள். அதுபோல பெட்ரோல் விலை உயர்வு, விவசாயத் தொழில் அழிப்பு என ஒட்டுமொத்த நாட்டையை பா.ஜ.க. அழிக்க முயல்கிறது'' என்கிறார் மணல்மேடு பிரவீண்குமார்.

""அரசியல் இல்லை யென்றால் எதுவும் இல்லை. வாழ்க்கையே இல்லை. திராவிடத்தால்தான் என்ன, எதுவென கேள்வி கேட்க முடிகிறது. உரிமையை அடைய முடிகின்றது. திராவிடம் இல்லையேல் நாங்கள் இல்லை'' என பெரியாரின் புகழ்பாடுகிறார் ராமநாதபுரம் முனீஸ்வரன்.

ஒரு மாணவர், ""உங்க சர்வே பேப்பரில் "மக்கள் நீதி மய்யம்' இருக்கு, "நாம் தமிழர்' இருக்கு, தினகரன் கட்சியை ஏன் மற்றவர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டீர்கள்'' எனக் கேட்டார். "அ.தி.மு.க+ அ.ம.மு.க. இணைவதற்கு வாய்ப்பிருக்கிறதே' என்றபோது, ""எங்க வீட்டில் எல்லோரும் அ.தி.மு.க.விற்குத்தான் ஓட்டுப் போடுவோம். சசிகலாவை ஒதுக்கியது கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. எங்கள் சமுதாய ஓட்டு இந்தமுறை அ.தி.மு.கவிற்கு விழாது'' என தெளிவாகவே பேசினார்.

""கமல் சாருக்குத்தான் என் ஓட்டு. தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி கொள்ளையடிக்கிறாங்க'' என்கிறார் சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த விஜயராக்கேஷ்.

""சார், நான் நாய் மாதிரி. நன்றியுள்ளவன் சார். அரியர்ஸ் க்ளீயர் ஆகிடுச்சு. ஆல் பாஸ்னு அறிவிச்ச பழனிச்சாமி அய்யாவுக்கு நான் ஓட்டுப் போடலைன்னா நன்றிகெட்டவன் ஆகிடுவேன்'' என்கிறார் விருதுநகர் மனோஜ்.

survey

""நான் என்னுடைய வயதில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியைத்தான் பார்த்து வருகிறேன். இதற்கு மாற்று தி.மு.க. என்பதால் அந்த ஆட்சியையும் பார்க்க வேண்டும் என்பதற்காக தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடப்போகிறேன்'' என்கிறார் நாகர்கோயில் சினேகா.

""எடப்பாடியார் ஒரு தலைவரா? ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்டாலின் சிறந்த நிர்வாகி யாக வருவார். நான் ஸ்டாலினுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்'' என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த ஹாரிஸ்.

இவர்களோடு வன்னியர்களுக்கு கொடுக் கப்பட்ட இட ஒதுக்கீடு அந்த சமுதாய இளைஞர்களை பா.ம.க. பக்கம் ஈர்த்திருக்கிறது.

சகாயம் ஐ.ஏ.எஸ். போன்றவர்களை ஆதரித்துப் பேசும் இளைஞர்களையும் களத்தில் பார்க்க முடிந்தது.

ரஜினி வரவில்லை என்கிற ஏக்கம் நிறைந்த இளைஞர்களும் கண்ணில் தென்பட்டார்கள்.

யார் வந்தாலும் கொள்ளையடிப்பார்கள் என்று விரக்தியுடன் உச்சரித்த இளைஞர்கள் மத்தியில் வேலையின்மையின் கொடுமை கசப்பான உண்மையாக எதிரொலிக்கும் என்பதை இளைஞர்களிடம் அதிகமாகப் பார்க்க முடிந்தது.

நூற்றுக்கணக்கான இளைஞர்களின் மன நிலையை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ததில் "நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவோம்' என 11 சதவிகிதம் பேர் நம்மிடம் சொன்னார்கள். தீவிரமான தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் காலகட்டத்தில் இந்த நோட்டா ஆதரவாளர்களின் வாக்கு, கடைசி நேரத்தில் எந்தக் கட்சி ஓட்டாகவும் மாறலாம். எனினும், நோட்டாவுக்கு விழும் வாக்குகள் நிகழ்கால அரசியலின் மீது இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை எதிரொலிப்பதாகவே நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று விரும்பும் இளைஞர்கள் சீமானையும் கமலையும் ஆதரிக்கிறார்கள் என்றாலும் திராவிடக் கட்சிகளே இன்னமும் செல் வாக்குடன் இருப்பதை புதிய வாக்காளர்களிடமும் காண முடிகிறது. அதில், அ.தி.மு.க.வைவிட 12 சதவிகிதம் கூடுதலான இளைஞர்கள் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள். அதே நேரத்தில், எடப்பாடியின் விவசாய கடன் ரத்து, இட ஒதுக்கீடு உத்தரவு போன்றவை குறித்த தாக்கத்தையும் இளைஞர்களிடம் காண முடிந்தது.

ஜனநாயகத்தில் மக்களுக்கு உள்ள வலிமையான ஆயுதமான வாக்குரிமையை, முதல்முறை பயன்படுத்தப்போகும் இளைய தலைமுறையின் தீர்ப்பு எப்படி இருக்குமென, தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தூக்கமிழந்து தவிக்கின்றன.

-நக்கீரன் சர்வே குழு

ராம்கி, ஜீவாதங்கவேல், பரமசிவன், சக்திவேல், எஸ்.பி.சேகர், மனோ, ராஜா, பகத்சிங், செல்வகுமார், மணிகண்டன், அரவிந்த், அருண்பாண்டியன், நாகேந்திரன், அண்ணல், சுந்தரபாண்டியன், இளையராஜா, மகேஷ்

தொகுப்பு: தாமோதரன் பிரகாஷ்

படங்கள் : ராம்குமார், விவேகானந்தன், விவேக்