ஆறாம் அறிவை அவசரத்துக்கு
அடகு வைத்து விட்டு
உயிர்ப்ப- கொடுக்க உவந்து சென்ற
மனிதம் மறந்த மாக்கள் கூட்டமே
யாரைப் பார்க்கச் சென்றீர்கள்?
உலகத் தலைவரையா?
உள்ளூரிலேயே அறிவுசார் சமூகம்
இன்னும் அவரை அங்கீகரிக்கவில்லையே!
யாரைப் பார்க்கச் சென்றீர்கள்
உங்கள் உறவுக்காரரையா?
குடும்பத்தோடு சென்று குழந்தைகளோடு கும்பிட
குழந்தைகளையும் ப- கொடுக்க
அவர் என்ன உங்கள் குலசாமியா?
உங்கள் குடும்பத்தில் அவரும்
ஒருவர் என்று பிதற்றுகிறீர்களே
பின்னங்கால் பிடறியில் அடிக்க
ஓடிய கூட்டத்திலும் காயாத கல்லறைச் சுவடுகளிலும் அவரது குடும்பத்தார் யாரும்
இல்லையே ஏன்...?
யாரைப் பார்க்கச் சென்றீர்கள்
உலக அழகையா பார்க்கப் போனீர்கள்?
எத்தனை திறமையான அழகுக் கலைஞர்கள்
அதற்காக அன்றாடம் உழைக்கிறார்கள் தெரியுமா?
யாரைப் பார்க்க ஓடுகிறீர்கள்
மாபெரும் நடிகரையா?
இவரை விட சிறப்பானவர்கள்
கலை உலகில் இருந்திருக்கிறார்கள்
இனியும் இருப்பார்கள்
ஒருவேளை தனது கலைப்படைப்புகளில்
கருத்துச் சொன்ன வித்தகரைப்
பார்க்கத்தான் இத்தனை பரவசமா?
கோடிகளில் கொட்டிய தயாரிப்பாளர்கள்
ஆண்டுக்கணக்கில் உழைத்த இயக்குநர்கள்
எண்ணங்களை வண்ணமான வார்த்தைகளில்
கொட்டிய பாடல் ஆசிரியர்கள்
எழுத்தாளர்கள் தொழில்நுட்பத்தார் என
பலதுறை கலைஞர்களின் வியர்வையும்
ரத்தமும் இணைந்து திரைக்கு
கொண்டுவந்த நிழல்தான் இந்தப் போ-
என்பதுகூடப் புரியாத புத்திக்கோளாறுகளே
எப்போது திருந்தப் போகிறீர்கள்?
யாரைப் பார்ப்பதற்கு இப்படி ஓடுகிறீர்கள்
உங்கள் தலைவரையா?
என்ன செய்ததால் அவர்
உங்கள் தலைவர் ஆனார்?
யாரோ போட்ட முதலீட்டில்
எத்தனையோ கலைஞர்களின்
கடினஉழைப்பில் கால்வைத்து ஏறி
முகம் காட்டி மூக்கு முட்ட
பணம் சம்பாதித்ததைத் தவிர
என்ன செய்தார் அவர்?
இதுவரை எதுவும் செய்யவில்லை
என்றாலும் இனிமேலும் செய்யப்போகும்
உன் எதிர்கால தலைவரைப்
பார்க்கச் சென்றாயா?
முட்டாள் கூட்டமே! மூடர்கூடமே!
கலைத்துறையில் கால் நூற்றாண்டு
ஆயிரம் கோடிகளில் சொத்து -நீ
கொடுத்தது என்றாலும்
எந்தப் பேரிடர் காலத்திலாவது
அவரிடம் வாங்கித் தின்றாயா?
சமூகச் சிக்கல்களில்
சாக்கடையில் புரண்டுகொண்டிருந்தாயே
கை கொடுக்க வந்தாரா? கல்வி கொடுத்தாரா?
கலைஞர்களைக் காத்தாரா?
குறைந்தபட்சம் உனக்காக
குரலாவது கொடுத்தாரா?
ஒன்றுமே வேண்டாம்
என் ரசிகர்கள் 100க்கும் 200க்கும்
அல்லாடிக்கொண்டிருக்க
எனக்கு மட்டும் கோடிகளில் சம்பளம் எதற்கு?
லாபத்தில் சில சதவீதங்களைக்
குறைத்துக் கொள்கிறேன்
என் படத்துக்கு திரையரங்குக் கட்டணங்களை
கொஞ்சம் குறைத்துவிடுங்கள் என்றாவது
கேட்டதுண்டா உன்தலைவர் இதுவரை?
யாரைப் பார்க்க ஓடுகிறாய்?
நேற்றுவரை எதுவுமே செய்யாதவர்
நாளைக்குச் செய்துவிடுவாரா என
கொக்கரித்து இன்றைக்குச் சாவதற்கா
இவ்வளவு ஆர்ப்பாட்டம்!
உன் பிச்சையில் பிழைத்த அவர்மீது
வைத்த அன்பிலும் நம்பிக்கையிலும்
கொஞ்சத்தையாவது உன் மீதும்
உன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீதும்
வைத்திருந்தால் இந்தச் சமூகம்
என்றைக்கோ சரியானதாக மாறியிருக்குமே!
இன்றைக்கு நான் இதை
இப்படிச் செய்வதால் நாளைக்கு
எனக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது
என குடும்பத்தோடு கொடி பிடித்துக்
கிளம்பும் முன் கொஞ்சமாவது
மனித புத்தியோடு ஒரு
முப்பது வினாடிகள் சிந்தித்திருந்தால்கூட
உலகம் புரிந்திருக்கும்
எதார்த்தம் எட்டி உதைத்திருந்திருக்கும்!
இப்படியா நாகரிகம் மறந்து
நாலு கால்களைப் போல
நடு ரோட்டில் திரிவாய்
பார்க்கப் பார்க்க பதறுகிறது நெஞ்சம்!
பண்பட்ட ஒரு சமூகம்
எப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாதோ
அப்படியெல்லாம் நடந்துகொண்டுவிட்டு
நடுரோட்டில் மிதிபட்டுச் சாக
கட்டாயப்படுத்தியது யார்?
இந்த அகால மரணங்களுக்கு
அடுத்தவர்களை கை நீட்டத்
துடித்துக்கொண்டிருக்கும் அரைவேக்காடுகளே
மீண்டும் மீண்டும் அந்தக்
காணொளிகள் அனைத்தையும் பாருங்கள்
அதுஒரு அறிவுசார் சமூகத்தின் நடத்தையா...
ஆறறிவு சமூகத்தின் நடத்தையா?
உங்களுக்குத் துணிவு இருந்தால்
துணிந்து சொல்லுங்கள் உண்மையை...
நீங்கள் இன்னும் கொஞ்சம்
நாகரிகத்தோடு நடந்துகொள்ளுங்கள்
நாம்தான் இந்நாட்டின் மன்னர்கள்
உங்கள் தலைவர் உங்களுடைய
தொண்டர்கள்தான் என்று
சொல்ல முடியுமானால்
அடுத்தவரைக் கை நீட்டுங்கள்...
நேற்றுவரை படமும் பணமும்
என்றிருந்த ஒருவர் இன்றைக்கு
நாட்டை ஆளத் துடிக்கிறார்
எல்லாம் தெரிந்தது போல் கத்திக் குவிக்கிறார்...
அவர்பின்னால் நீ ஓடத் துடிக்கிறாய்!
உன் தலைவர் இன்றைக்குப்
பயன்படுத்தும் பணமும் புகழும்
நீ போட்ட பிச்சை என்கிற
உண்மைகூட உரைக்காத நீ
இன்னும் எத்தனை உயிர்களைக்
காவு வாங்கக் காத்திருக்கிறாயோ?
எல்லாம் பொறுத்துக்கொள்ளலாம்
ஆனால் உன் ஆதரவால் மட்டுமே
ஆள்வதற்கு ஆசைப்படுகிற
அவர் பெயரால் பச்சிளம் குழந்தைகளைக்கூட
ப- கொடுக்கவும் அவர்களை கறைபடுத்தவும்
உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
உன்னிடம் பணம் பெற்று உன்னை மகிழ்விக்க
கலையைப் பயன்படுத்தும் ஒரு
சாதாரண நடிகரை கடவுளாகக்
கொண்டாடிச் சாகும் நீயெல்லாம்
இந்த அறிவுசார் சமூகத்தின்
அழிவுச் சின்னம்தான்!
ஓடு, நன்றாக ஓடு
உன்னைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றுகிறது
நாய் பெற்ற தெங்கம்பழம்
ஒருவேளை நாளைக்கு நாட்டையே
உன் தலைவரிடம் தூக்கிக் கொடுத்தாலும்
அப்போதும் இதுதான் நடக்கும்
நாய் பெற்ற தெங்கம்பழம்!
ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்கும் மேலாக
இந்த சமூகத்திற்காக சிந்திக்கிறவள்
பேசுகிறவள், செயல்படுகிறவள் என்கிற
மன வேதனையில் சொல்கிறேன்...
அடிப்படை மனிதசிந்தனையே இல்லாத
இது போன்ற செயல்பாடுகளைப்
பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது...
"இந்த நாடும் நாட்டு மக்களும்...''