பூனைகளுக்கு அப்பத்தை நரி பங்கிட்ட கதையாக, புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணி என்.ஆர். காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடம் ஒதுக்கியிருக்கிறது.

2021 தேர்தலுக்கு பா.ஜ.க. அணியில் ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... பா.ஜ.க.வோ, "நமச்சிவாயம்தான் முதலமைச்சர் வேட்பாளர்' என்று சூசகமாக அறிவித்ததால் ரங்கசாமி அப்செட்டானார். ஆனால் பா.ஜ.கவோ, "காங்கிரஸ் இல்லா புதுச்சேரி'யை உருவாக்கவேண்டும் என்பதால் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்க வேண்டுமென பேச்சுவார்த்தை நடத்தியது. "20 தொகுதிகள்' என்பதில் ரங்கசாமி விடாப்பிடியாக இருந்தார். இதனால் கூட்டணி ஏற்படுவதில் இழுபறி நீடித்தது. 5 கட்ட பேச்சு வார்த்தைகளிலும் ரங்கசாமி தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் 09.03.2021 அன்று நட்சத்திர ஹோட்டலில் கூட்டணித் தலைவர்களால் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு 14 தொகுதிகள் என கூட்டணி அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ""எங்கள் தலைவரைத் தான் “முதலமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்து தேர்தலை சந்திக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் நமச்சிவாயத்தை முன்னிறுத்தி பேசியது ரங்கசாமிக்கு அதிர்ச்சியளித்தது. அதனால் தனியாகவே களம் காணலாம் என கருதினார். என்.ஆர். காங்கிரஸை விட மனமில்லாத பா.ஜ.க., "சரிபாதி தொகுதியில் நில்லுங்கள், தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் யார் என்று முடிவுசெய்து கொள்ளலாம்'’ என்றனர். ‘மாமன் முதல்வர், மருமகன் துணைமுதல்வர்’, ‘ஆளுக்கு இரண்டரை ஆண்டு’ என்றெல்லாம் பேசிப்பார்த்தார்கள். ஆனால் ரங்கசாமி இவற்றுக்கு உடன்படவில்லை.

pondy

Advertisment

அதேசமயம் காங்கிரஸ் அரசு மீதான அதிருப்தியால் ரங்கசாமிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாகக் கருதிய பலர், என்.ஆர் காங்கிரஸை நோக்கி வர ஆரம்பித்தனர். குறிப்பாக காங்கிரசில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மூத்த அரசியல்வாதி லட்சுமி நாராயணன், வன்னியர் பாதுகாப்பு பேரியக்கம் செந்தில், காங்கிரஸ் செயல்தலைவர் ஏ.கே.டி.ஆறுமுகம், பொதுச்செயலாளர் கே.எஸ். பி.ரமேஷ் போன்றவர்கள். இவையெல்லாம் என்.ஆருக்கு உற்சாகத்தைத் தந்தது. அத்துடன் "பா.ஜ.க அணியில் இருந்தால் சிறுபான்மை மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்' என்று பெரும்பாலோனோர் சொல்ல "தனித்துப்போட்டி'யிடவே விரும்பினார்.

இதனால் பா.ஜ.க. தலைவர்களின் போன் அழைப்பைக்கூட எடுக்காமல் தவிர்த்தார். இந்த நிலையில் ரங்கசாமியிடம் வீடியோகால் மூலம் தொடர்புகொண்ட அமித்ஷா, ""கூட்டணிக்கு நீங்கதான் ஹெட். உடனே ஓ.கே. சொல்லுங்கள்''’’ என கூற... ரங்கசாமியோ, ""என்னை நம்பி கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் தரவேண்டும். அதனால் 20 தொகுதிகளுக்கு குறையா மல் வேண்டும்'' ’எனக்கூற... அமித்ஷாவோ, ""உங்களை நாங்கள் நண்பராகக் கருதுவதால்தான் இவ்வளவு தூரம் பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்குமேல் பேசுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்''’’என அழுத்தம் தந்துள்ளார். ஆட்சியைப் பிடித்தாலும் மத்தியில் ஆளும்கட்சியின் ஆதரவு இல்லையென்றால் மக்களுக்கு ஏதும் செய்ய முடியாதே…’என்று யோசித்த ரங்கசாமி வேறு வழியின்றி கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார்.

20, 18, 17 என ரங்கசாமி கேட்ட நிலையில் பா.ஜ.க.வோ 16 தொகுதியைக் கொடுத்து, ‘தேர்தலுக்குப் பிறகு மற்றதைப் பேசிக்கொள்ளலாம்’என்று நிர்ப்பந்தப்படுத்தியுள்ளது. கூட்டணி அறிவிப்பு வெளியானபோது, பா.ஜ.க. தலைவர்களைத் தவிர மற்றவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தென்படவில்லை.

Advertisment

இதனிடையே ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களுக்கும், காங்கிரசிலிருந்து வந்தவர்களுக்கும் ‘சீட்’ கொடுக்க முடியுமா, விரும்பும் தொகுதிகளை பா.ஜ.க. கொடுக்குமா… எனும் ஐயம் எழுந்துள்ளது ரங்கசாமிக்கு.

அன்று மாலையே என்.ஆர். காங்கிரஸ் அலுவலகத்தில் கூடியவர்கள் தங்கள் கட்சி சார்பில் ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்தனர். இதனால் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் அப்செட்.

இதனிடையே அ.தி.மு.க.வுக்கு குறைவான தொகுதிகள்தான் கிடைக்கும் என்பதால் அக்கட்சியினரும் ‘சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியா மல்’ உள்ளனர். கூட்டணியிலுள்ள பா.ம.க.வோ தங்களுக்கு 5 தொகுதிகள் வேண்டுமென கேட்ட நிலையில்... ‘தொகுதிகள் இல்லை’ என்றதால் கடுப்பாகி புதுச்சேரியில் 15, காரைக்காலில் 3 என 18 தொகுதிகளில் தனித்துப் போட்டி யிடப் போவதாக அறிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்தியது பா.ஜ.க.

இந்த அணியின் நிலை இப்படியிருக்க... காங்கிரஸ் தரப்பிலோ, “தி.மு.க. சரிபாதி தொகுதி வேண்டுமென அடம் பிடிக்கிறது. காங்கிரஸோ "16 தொகுதி எங்களுக்கு, 14 உங்களுக்கு, அதில் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துக்கொள்ளுங்கள்' என்கின்றனர்.

தி.மு.க. கணக்கில் கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகளுக்கு தலா 1-ஆவது கொடுத்தாக வேண்டும். அதேசமயம் முதலமைச் சர் வேட்பாளராக நாராயண சாமியை முன்னிறுத்துவதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்குள் குழப்பம் இருக்கிறது. "தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனும் நிலைதான் இங்கும்' என்கின்றனர்.