stalin100

மிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதும் மக்களுக்கு செய்தி சொல்ல மீடியாக்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், "எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக் காதவர்களுக்கும் சேர்த்தே பணி செய்வேன். வாக்களித்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்க வில்லையே என வருத்தப்படும் படியும் எனது ஆட்சி இருக்கும். தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்'' என்று தனது உணர்வுகளை வெளிப் படுத்தினார். அதுவே ஸ்டாலினின் அரசாளுமையை மக்க ளுக்கு உணர்த்தியது.

ead

மே 7-ந் தேதி முதல்வராக பதவிப் பிரமாணம் ஏற்கும்போது, "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்ற அந்த கம்பீரம் ஸ்டாலினின் ஆட்சி எப்படிப் பட்டதாக அமையும் என்பதற்கு கட்டியம் கூறியது. அவரது தலைமையில் 32 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

Advertisment

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அரசின் நிதி நிலைமை மிக மோசமானது. அரசு கஜானாவை சுத்தமாக சுரண்டியிருந்தனர். கடன் சுமையும் நிதி இழப்பும் ஜீரணிக்க முடியாத அளவிற்கு அதிகரித்திருந்தன. சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை இதனை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தியது.

நிதி நெருக்கடியும் கொரோனா கொள்ளை நோயும் உச்சத்தில் இருந்த போது ஆட்சிப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலினுக்கு மக்களின் விருப்பத்தை நிறை வேற்றுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற விமர்சனங்கள் எதிரொலித்தன. அதேசமயம், இத்தகைய நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் மத்திய அரசிடம் ஸ்டாலின் சரணடைவார் என்றும் ரசித்து ஆருடம் சொன்னார்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் பொய்யாக்கி 100 நாட்களை கடந்து நிற்கிறது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி. முதல்வராக பொறுப்பேற்றதும் தலைமைச் செயலகம் வந்த மு.க.ஸ்டாலின், கொரோனா கொள்ளை நோயால் வாழ்வாதாரம் இழந்த குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக் கும் 4,000 ரூபாய் நிதி உதவி; ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; நகரப் பேருந்து களில் கட்டணமின்றி பெண்கள் பயணித்தல்; தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக் கட்ட ணத்தை அரசே ஏற்கும்; தேர்தல் காலத்தில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த தனி துறை அமைத்தல் ஆகிய 5 அறிவிப்புகளில் கையெழுத் திட்டதில் தொடங்கி, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது வரை அவரது உழைப்பும் ஆட்சித் திறனும் வியக்க வைக்கிறது.

"ஸ்டாலின் தலைமையிலான 100 நாள் ஆட்சியில் மக்களோடு இணைந்த முக்கிய துறைகளில் சாதித்தது என்ன? சமாளித்தது என்ன? சறுக்கியது என்ன?' முக்கிய துறைகள் வாரியாகப் பார்ப்போம்.

Advertisment

healthdep

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிக உச்சத்தில் இருந்த சூழலில்... துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றார் மா.சுப்பிர மணியன். பலருக்கு ஆச்சரியம்; பலருக்கு அதிர்ச்சி! அமைச்சரவைக்குப் புதியவர் என்பதால், மக்களின் உயிரோடு விளையாடும் கொரோனா தாக்குதல் மிகக்கொடூரமாக இருக்கும் நிலையில்... இந்தத் துறைக்கு சீனியர் ஒருவரை அமைச்சராக்காமல் ஜூனியரை நியமித்திருப்பது எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கியது. அந்த விமர்சனங்களோடே முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் மா.சுப்பிரமணியன்.

அவரது முதுகில் தட்டிக்கொடுத்து, "உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது; சிறப்பாக செயலாற்றுங்கள். மாநகராட்சி மேயராக இருந்த அனுபவம் உங்களுக்கு வழி காட்டும். கொரோனா நோய் என்பது கட்டுக்குள் கொண்டுவர முடியாத வைரஸ் அல்ல'' என்று உற்சாகப் படுத்தினார். அமைச்சராக மா.சுப்பிரமணியன் பொறுப் பேற்றபோது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 25,465. அடுத்த 14 நாட்களில் 36,184 ஆக வெகுவேகமாக அதிகரித்தது. இதுதான் தமிழகத் தில் உச்சம் ! அதேபோல, ஆக்சிஜன் கையிருப்போ 230 மெட்ரிக் டன். ஆனால் தேவையோ 400 மெட்ரிக் டன்.

dd

மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆகியோரை 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தொடர்புகொண்டபடியே இருந்தனர். "ஆக்சிஜன் இல்லாமல் 200 பேர் தவிக்கிறார்கள், பெட் கிடைக்காமல் 350 பேர் ஹாஸ்பிட்டல் வராண்டாக்களில் கிடக்கிறார்கள். ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்புங்கள், படுக்கைகளை ஏற்பாடு செய்யுங்கள்... இல்லையெனில் கொத்துக் கொத்தாக மரணம் நிகழ்வதை தடுக்க முடியாது' என்று மருத்துவர்கள் சொல்ல, போனை எடுக்கவே அமைச்ச ரும் அதிகாரிகளும் பயந்தனர். எனினும், மனம் தளரவில்லை.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை யைப் போக்க மேற்குவங்கம், பீஹார், ஒடிசா மாநிலங்களில் தொடர்ந்து பேசி, ஆக்சிஜன் சிலிண்டர்களை விமானங்களிலும் கப்பல்களிலும் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார் ஸ்டாலின். இது ஒருபுறமிருக்க... ஆக்சிஜன் தயாரிக்கும் தனியார் களிடமிருந்து இருப்பதையெல் லாம் கொள்முதல் செய்யும் பணிகளை முடுக்கிவிட்டார் மா.சுப்பிரமணியன். மற்றொரு புறம் ஆக்சிஜன் செறிவூட்டி களையும் ஜெனரேட்டர்களையும் பெறுவதற்கு தனி டீம் போடப் பட்டு, அவர்களையும் வேகப் படுத்தினர். இப்படி துரிதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை களால் ஆக்சிஜன் கையிருப்பை 500 மெட்ரிக் டன்னாக உயர்த் தினர். ஆக்சிஜன் இல்லையென ஒருவர் கூட தமிழகத்தில் மரண மடையாமல் பார்த்துக்கொண்டது தி.மு.க. அரசு.

dd

இது குறித்து பேசும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அந்த நாட்களை நினைத்தால் இப்போதும்கூட குலை நடுங்கு கிறது. தொடர்ச்சியாக 5 நாட்கள் தூங்கா இரவுகள்தான். ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட மருத்துவப் படுக்கைகள், கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஆகியவைகளை அதிகரித்தல், ஆங்கில மருத்துவத் துடன் தமிழ் பாரம்பரிய மருத்துவத்தையும் இணைத்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துதல் என இடைவிடாமல் எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா வின் பரவல் கட்டுப்படுத்தப்பட் டது. இதனால் பாசிட்டிவ் கேஸ் களின் எண்ணிக்கை குறைந்த துடன், குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை யும் அதிகரித்தது. இன்றைக்கு கட் டுக்குள் இருக்கிறது கொரோனா.

முதல்வரின் ஊக்கமும் மருத்துவர்களின் ஒத்துழைப் பாலும்தான் சாதிக்க முடிந்தது. மூன்றாவது அலை வரும் என்கிறார்கள். வரக்கூடாது; வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் இணைக்கப் பட்ட 1 லட்சம் படுக்கை வசதிகள், 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள், குழந்தைகளுக்கென தமிழக முழுவதும் சிறப்பு மையங்கள், கறுப்பு பூஞ்சைக்கான 7,500 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் என அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறோம்''‘என்கிறார் பெருமிதமாக.

கடந்த ஆட்சியின்போது டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்காக ஒரு நாளைக்கு ஒரு நபருக்கான சாப்பாடு 600 ரூபாயும், தங்கும் அறைக்கு ஒரு நாளைக்கு 2,500 ரூபாயும் தந்திருக்கிறது எடப்பாடி அரசு. அதே ஹோட்டல் நிர்வாகத்தில் சாப்பாட்டில் 150 ரூபாயும், தங்கும் அறைக்காக 500 ரூபாயும் குறைத்து பேசி முடித்திருக்கிறார் மா.சுப்பிரமணியன். இதன்மூலம் கடந்த 2 மாசத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் சுகாதாரத்துறைக்கு மிச்சம். கடந்த ஆட்சியின் ஒன்றரை வருடங்களில் இவற்றில் மட்டுமே 1 கோடியே 80 லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.

அதேபோல 350 ரூபாய்க்கு அ.தி.மு.க. ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட கவச உடைகளை அதே நிறுவனத்துடன் பேசி 120 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருக்கிறது தி.மு.க. ஆட்சி. "எண்-95' முக கவசங்களை 80 ரூபாய்க்கு அ.தி.மு.க. அரசு வாங்கிய நிலையில்... அதை தி.மு.க. அரசு 22 ரூபாய்க்கு வாங்குகிறது. இதன் எண்ணிக்கை 9 லட்சம். இவைகளை கணக்கிட்டால் 11 கோடியே 70 லட்சம் ரூபாய் கவச உடைகளிலும், 5 கோடியே 22 லட்சம் ரூபாய் முகக்கவசங்களிலும் மிச்சப்படுத்தியிருக்கிறது தி.மு.க. அரசு. அந்தவகையில் இவற்றில் மட்டுமே கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 250 கோடி ரூபாய் ஊழலை நடத்தியிருக்கிறது அ.தி.மு.க. அரசு. அவை இந்த ஆட்சியில் தடுக்கப்பட்டிருக்கின்றன.

தி.மு.க. அரசின் சுகாதாரத்துறையில் தற்போது மகத்தான திட்டமாக அனைவராலும் பாராட்டும்படி இருப்பது மக்களை தேடி மருத் துவம். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலினிடம் மா.சு. விவரித்தபோது, "உடனடியாக நிறைவேற்றுங் கள்' என அனுமதி தந்ததுடன்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதனை துவக்கிவைத்து தமிழகம் முழுவதும் நடந்துவருகிறது.

திட்டம் துவக்கப்பட்ட முதல் 3 நாட்களில் மட்டும் 25,617 பேர் பயனடைந்துள்ளனர். இத்தகைய நோயால் தாக்கப்பட்டவர்கள் என தமிழகத்தில் தற்போது 20 லட்சம் பேர் கண்டறி யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தால் வருடத்துக்கு 5 லட்சம் பேரை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும். மேலும் இறப்பு சதவீதத்தை 50 சதவீதம் தள்ளிப்போடவும் தவிர்க்கவும் முடியும்.

டாக்டரல்லாத ஒருவர் மருத்துவத்துறைக்கு அமைச்சராகி, முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவது, அந்தத் துறையில் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தியத் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணங்கள் ஏற்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அத்தகைய நெருக்கடியான நிலை நீடிக்காதபடி உடனடியாகத் தடுத்தது மருத்துவத்துறையின் முதல் வெற்றி.

அதே நேரத்தில், டாக்டர்கள் -செவிலியர்கள் உள்ளிட்டோரின் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள், காலி பணியிடங்களை நிரப்புவது போன்றவற்றில் முந்தைய அ.தி.மு.க ஆட்சி ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் நீடிக்கவே செய்கின்றன. அதுபோல, "மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை' என ஸ்டாலின் அரசு அறிவித்தபோதும் அதனைப் பெறுவதில் பொதுமக்களுக்கு நிறைய இடர்ப்பாடுகள் இருந்தன. இந்த சவால்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் எதிர்கொண்டாக வேண்டும்.

(வரும் இதழில் மற்றொரு துறை)