ட்டமன்றத் தேர்தலில் வாக்குச் சேகரிப்பதற்காக பல கட்சி வேட்பாளர்களும், புதுப்புது ட்ரென்ட்டுகளை உரு வாக்குவதைப் பார்க்க முடிந்தது. மக்கள்முன் கண்ணீர்விட்டு சென்டிமென்ட் காட்சி மூலமாக வாக்குகளைச் சேகரிப்பது, குத்துச்சண்டை, சிலம்பம் விளையாடி வாக்குச்சேகரிப்பது, தொண்டர்களோடு குத்தாட்டம் போடுவது, துணி துவைப்பது, டீ போடுவது, தோசை சுட்டுத் தருவது, ஆட்டோ ஓட்டுவது என நூதன முறைகளில் வாக்குச் சேகரிப்பதைக் காண முடிந்தது. சில வி.ஐ.பி. வேட்பாளர்கள், கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் சூழலில், தங்களுக்காக வாக்குச் சேகரிக்கத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளைத் தொகுதிக்குள் வீதிவீதியாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதை யும் பார்க்க முடிந்தது.

ss

விராலிமலை தொகுதியில் களமிறங்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவரது மகள்கள் ரிதன்யா பிரியதர்ஷினி, அனன்யா ஆகிய இருவரும் வாக்குச்சேகரித்தார்கள். இரு வரும் விஜயபாஸ்கரின் பிரச் சார வாகனத்திலேயே உடன் நின்றபடி மைக்கைப் பிடித்துப் பேசுவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்தார்கள். கடந்த 2016-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போதே 8 வயதாக இருந்த பிரியதர்ஷினி, தனது அப்பாவுக்காகப் பிரச்சாரம் செய்த அனுபவம் உண்டு. அப்போதும் விஜயபாஸ்கருக்கு நெருக்கடியான தேர்தலாக இருந்தது. தற்போதும் அவரது வெற்றியென்பது இழுபறியாகவே உள்ளது. எனவே இம்முறையும் மகள்களின் சென்டிமென்ட்டைக் கையில் எடுத்தார்.

இம்முறை இளைய மகள் அனன்யா, டி.ஆர். பாணியில், ""உங்களுக்குக் காது கேக்க லைன்னா காது மெஷினா வரு வாரு! கண்ணு தெரியலைன்னா கண்ணாடியா வருவாரு! கஜா புயல்னா கரன்ட்டா வருவாரு! கொரோனான்னா மருந்தா, மாத்திரையா வருவாரு!'' என்று பேசியதை பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர்.

சக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணியும், ஆர்.பி. உதயகுமாரும்கூட அவரவர் தொகுதியில் கடுமையான போட்டியை எதிர்கொண்டுவரு கிறார்கள். எனவே விஜயபாஸ்கர் பாணியில் தங்களுக்கு ஆதரவாக மகள்களைப் பிரச்சாரத்தில் இறக்கியுள்ளனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் அவரது மகள் சாரங்கியும் பிரச்சாரத்தில் இணைந்து, அந்த தொகுதிக்கு அப்பா செய்த நன்மைகளையும், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை யும் வரிசையாக எடுத்துக்கூறி வாக்குச் சேகரித்தார். அதேபோல அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பி.இ. பட்டதாரி வாரிசான பிரிய தர்சினி, கிராமம் கிராமமாகச் சென்று பெண்களிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து, தொகுதிக்காக அப்பா செய்துள்ள நல்ல காரியங்களை எடுத்துக்கூறி வாக்குச் சேகரித்தார்.

தி.மு.க. தரப்பில், முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து களமிறங்கிய நிலையில், அவ ருடைய மகன் ஐ.பி.செந்தில் குமார், பழனியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, அவரது 13 வயது மகன் ஆதவன், தனது தந்தையின் படத்தைக் கழுத்தில் மாட்டி கொண்டு, வேட்டி சட்டையை அணிந்துகொண்டு, கறுப்பு- சிவப்பு துண்டுடன் வீடுவீடாகச் சென்று, ""போடுங்கம்மா ஓட்டு! உதயசூரியனை பார்த்து! நமது சின்னம் உதயசூரியன்!'' என்று வாக்கு சேகரித்தான். அவனுக்குப் பின்னே கட்சிக்காரர்கள் கோஷ மிட்டபடி பின்தொடர்ந்தனர். அச்சிறுவனுக்குச் சிலர் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்ததையும் -தங்களின் கோரிக்கைகளைத் தெரிவித்ததையும் காண முடிந்தது.

கமல் பரப்புரையில் அவரது இரண்டாவது மகள் அக்ஷரா உடனிருந்ததுடன், அவரும் கமலின் அண்ணன் மகள் நடிகை சுகாசினியும் டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்தனர்.

பொதுவாக அரசியல் வாதிகள் என்றாலே தங்களைச் சுற்றி ஆதரவாளர்கள் புடைசூழ தடபுடலாக வருவதைத்தான் பெரும்பாலும் பார்க்க முடியும். எனவே பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான இடைவெளி ஒன்று இருந்து கொண்டேயிருக்கும். இதனை உடைப்பதற்கான உத்தியாகத் தான் தங்கள் குடும்பத்து வாரிசு களையும் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்குகிறார்கள். அவர்கள் தங்கள் அப்பாவுக்காகப் பேசி வாக்குச்சேகரிக்கும்போது, "அப்பாவுக்காக பிள்ளைங்க எப்படியெல்லாம் பொறுப்பா பிரச்சாரம் பண்ணுதுங்க. இந்த வயசுலயும் இவ்ளோ வெடிப்பா பேசுதே' என்றெல்லாம் சென்டி மென்ட்டான ஒரு பிணைப்பை தாய்மார்கள் மத்தியில் எளிதில் உருவாக்க முடிகிறது. வாக்கு எண்ணிக்கையை உயர்த்து வதற்கும் உதவுகிறது.

இப்படி வாரிசுகளைப் பயன்படுத்தும்போது, அந்த வாரிசுகள், 18 வயதுக்குக் குறை வான குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், அது விமர்சனத் துக்குள்ளாகிறது. குழந்தைகளை தேர்தல் பரப்புரையில் ஈடு படுத்துவதாக தேர்தல் ஆணை யமும் கண்டிக்கிறது. இவை தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. புகார் களைப் பரிசீலித்த ஆணையம், "இத்தகைய செயல்கள், குழந்தை களின் உரிமைகளை மீறுவதால் இவற்றைத் தடைசெய்ய வேண் டும்' என்று தேர்தல் ஆணையத் துக்குப் பரிந்துரை செய்துள்ளது.

அரசியல் பிரமுகர்கள் தங்கள் வீட்டு வாரிசுகளைப் பிரச்சாரத்துக்கு இறக்குவதில் இரட்டை லாபக்கணக்கு இருக்கிறது. குழந்தைகள் சென்டி மென்ட்டில் பலவீனமாக உள்ள வாக்காளர்களை எளிதில் கவரலாம்... இன்னொன்று, தங்க ளுடைய அடுத்த அரசியல் வாரிசையும் அடையாளப் படுத்தலாம். எதுவாக இருந் தாலும், 18 வயதுக்குக் குறைந்த வாரிசுகளைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்து அவர்களின் குழந்தைப் பருவத்துக்கான உரிமைகளைக் காப்பாற்றுவதும் அரசியல்வாதிகளின் கடமையாகும்.

-தெ.சு.கவுதமன்