""அண்ணே… விட்டுடுங்க அண்ணே... கரன்ட் வைக்காதீங்க!! -மாணவியின் கதறல்'' என்ற தலைப்பில் பொள்ளாச்சி பாலியல் கொடுமையை மிஞ்சும் அளவிற்கு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சார வயரை மூக்கில் சொருகி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பதற வைக்கிறது என்று கடந்த 2019 மே மாதம் 4-7ம் தேதியிட்ட நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே இருக்கும் ஜி.குரும்பபட்டியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியான வெங்கடாசலம், லெட்சுமி தம்பதியினருக்கு மகளாக பிறந்த 12 வயதான 7ஆம் வகுப்பு மாணவி கலைவாணிக்கு, எதிர்வீட்டு பிளஸ் டூ மாணவன் கிருபாநந்தன் செய்த கொடூரம்தான் மேலே சொல்லப்பட்டவை. கிருபாகரனை காக்கிகள் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்து வந்த வழக்கின் தீர்ப்பை கடந்த செப்டம்பர் 29ம் தேதி நீதியரசர் புருசோத்தமன் வழங்கியபோது, மாணவியின் கொலை வழக்கில் போதுமான ஆதாரங்களை போலீஸார் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. அதனால் குற்றம்சாட்டப்பட்ட வாலிபரை (கிருபானந்தன்) விடுதலை செய்து உத்தரவிட்டார். நீதியை எதிர்பார்த்திருந்த மாணவியின் பெற்றோருக்கும், நியாயத்திற்காகப் போராடிய ஜனநாயக மாதர் சங்கத்தின ருக்கும் பலத்த அதிர்ச்சி. மாணவியின் தந்தை வெங்கடாசலம் இதனைத் தனது தமிழ்நாடு முடிதிருத்தும் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜன் கவனத்துக்கு கொண்டு சென்றதால், மாணவி கலைவாணிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி கடந்த 9ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள சலூன் கடைகளை அடைத்துவிட்டு அந்தந்த பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் குடும்பத்தாருடன் சென்று ஆர்ப்பாட் டத்தில் குதித்ததோடு மட்டுமல்லாமல் நீதி கேட்டு கோரிக்கை மனுவையும் கொடுத்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் சொந்த மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 2500 சலூன் கடைகளை அடைத்துவிட்டு குடும்பத்தாருடன் வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கரூர் பாராளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் ஜோதிமணி மற்றும் திமுகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபானி தலைமையில் கூட்டணி கட்சியினர் மாவட்ட கலெக்டரை சந்தித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தினர்.
""எஸ்.பி. ரவளி பிரியா மற்றும் டி.ஐ.ஜி. முத்துச்சாமி ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு சலூன் கடைகளை தயவு செய்து அடைக்க வேண்டாம். முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றனர். அரசு மேல்முறையீடு செய்தால் அதற்கு நன்றி தெரிவித்துகூட போஸ்டர் அடித்து ஒட்டிவிடுவோம். தற்போது கடை அடைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியதன் பேரில்தான் தமிழகத்தில் உள்ள நகரம் முதல் பட்டிதொட்டி வரை இருக்கும் 3இலட்சத்து 15ஆயிரம் சலூன் கடைகளை அடைத்துவிட்டு தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்தனர். அதன்மூலம்தான் அரசும் மேல்முறை யீடு செய்ய இருக்கிறது. அதன் அடிப்படையில் எங்க பிள்ளைக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். கீழ்க்கோர்ட்டில் உரிய ஆவணங்களை கொடுக்காத போலீஸார் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் முடிதிருத்தும் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரான ராஜன்.
இது சம்மந்தமாக மாணவி கலைவாணியின் தந்தையான வெங்கடாசலத்திடம் கேட்ட போது, ""என் பிள்ளை கொலை வழக்கு சம்மந்தமாக 35 சாட்சிகள் போட்டி ருந்தனர். இதில் 8 சாட்சிகள் எதிர்தரப்பு சாட்சிகள் அதிலேயும் ஒரே வீட்டில் 4 பேரை போட்டிருந் தனர். அவர்கள் எல்லாம் குற்றவாளியின் சமூகத்தினர் என்பதால் நியாயம் கிடைக்கவில்லை. போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர்கள் ரிப்போர்ட்டில் என் பிள் ளைக்கு நேர்ந்த கொடுமை அனைத்தும் பதிவாகியுள்ளது. விரல் ரேகை நிபுணரும் உறுதி செய்துள்ளார். எல்லாம் இருந்தும் சாட்சிகளையும், போதுமான ஆதாரங்களையும் போலீஸார் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. அந்த அளவிற்கு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களான வசதி படைத்த குடும்பத்தினருக்கு போலீஸார் துணை போய் இருக்கிறார்கள். அந்தப் பையனுக்கு தண்டனை இல்லை என்றால், என் பிள்ளையை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளி யார்? என்பதை இந்த அரசு கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் இல்லையென்றால், நீதிகேட்டு சாகும் வரை குடும்பத்தாருடன் போராடுவோம்'' என்று வருத்தத்துடன் கூறினார்.
இது சம்மந்தமாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமியிடம் கேட்டபோது,…""இந்த வழக்கை நாங்கதான் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதால் இந்த வழக்கை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை'' என்றார். பொள்ளாச்சி பாலியல் கொடுமையைப் போன்ற இன்னொரு கொடுமை இது. ஆனால், அதைப் போலவே இதிலும் அலட்சியம் காட்டி, திட்டமிட்டே குற்றவாளி களைத் தப்பவிடுகிறது அ.தி.மு.க அரசு.
-சக்தி