உனது முழுப் பெயரான அழகு முத்து பாண்டியன் என அழைத்தது இல்லை.
அழகு என்றும், அழகுமுத்து என்றும் சுருக்கமாக, செல்லமாக அழைத்தோம். கட்சியின் செல்லப் பிள்ளையாகவே பவனி வந்தாய்.
கடும் சொல்லையோ, தடித்த வார்த்தை களையோ நாம் அறிந்த வரையில் ஒருபோதும் நீ பயன்படுத்திப் பார்த்தது இல்லை.
எந்நேரமும் சிரித்த முகத்தோடுதான் அழகுவை பார்த்து இருக்கின்றோம்.
உனது குடும்பம் பெரிய குடும்பம். உனது தந்தை சண்முகத் தேவர் - தாயார் சீதையம்மாள் ஈன்றெடுத்த எட்டுக் குழந்தைகளில் நீயும் ஒருவர்.
உன்னையும் சேர்த்து ஐந்து ஆண் மக்கள் மூன்று சகோதரிகளைக் கொண்ட பெரும் குடும்பம்.
1949ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14ஆம் நாள் ஐந்தாம் குழந்தையாக பிறந்தாய்.
உனது தந்தை சண்முகத் தேவர் கோவில்பட்டியில் இயங்கி வந்த நூற்பாலையில் தொழிலாளியாக பணியாற்றியது மட்டுமின்றி தொழி லாளர்களை அமைப்பு ரீதியாக அணி திரட்டி சங்கம் கண்டவர்.
முற்போக்கான தந்தையைப் பின்பற்றி படிக்கும் பொழுதே மாணவர் பெருமன்றத்தில் இணைந்து பணியாற்றி, அதனைத் தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்திலும் பணியாற்றி பரிணமித்த நீ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து பணி யாற்றினாய்.
கூட்டுறவு அமைப்பில் பணியில் சேர்ந்து பணி புரியும் காலத்தில் மாநில அளவில் கூட்டுறவுப் பணியாளர்களை அணிதிரட்டு வதிலும், மாநில அளவில் சம்மேளனம் அமைப்பதிலும் பெரும்பங்காற்றினாய்.
சட்டக் கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்று வழக்கறிஞராகவும் திறம்பட பணியாற்றி, ஏழை, எளிய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, சட்டரீதியாக நியாயங்களை யும், உரிமைகளையும் பெற்றுத் தந்தாய்.
திருவைகுண்டம் இடைத்தேர்தலில் ஏறத்தாழ ஒரு மாத காலம் தொகுதியில் குடும்பத்தோடு முகாமிட்டு கட்சியின் வேட் பாளர் வெற்றிக்கு அயராது உழைத்ததை மறக்க இயலாது.
தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதில் காட்டிய அக்கறையை அறிவோம்.
கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டில், மாநில நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுவரை அப்பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றினாய். மாநில நிர்வாகக் குழு, மாநிலக் குழுக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று விவாதங்களில் தனது கருத்துக்களைக் கூறி முடிவுகள் மேற்கொள்ள உதவியாக இருந்தாய்.
மாநிலக் குழுக் கூட்டத்தை தூத்துக்குடியில் நடத்திட வேண்டும் என்று கேட்டபொழுது நடத்தி விடுவோம் என பதிலுரைத்து சிறப்பாக மாநில நிர்வாகக் குழு, மாநிலக்குழு கூட்டங்களையும், பொதுக் கூட்டத்தையும், கலை நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்தியது இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றது.
அருகிலுள்ள நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கும் உதவி செய்தாய்.
நடந்து முடிந்த நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் முதல் ஒப்பந்தம் நீ தான் மேற்கொண்டாய். தொலைபேசி வாயிலாக தெரிவித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு மாநகர மாமன்ற உறுப்பினரையும், ஒரு நகர்மன்ற உறுப்பினரையும் வெற்றி பெறச்செய்து கட்சிக்குப் பெருமை சேர்த்தாய்.
கோபிசெட்டிபாளையத்தில் கட்டப்பட்டு வரும் தியாகசீலர் சி.எஸ்.சுப்பிரமணியம் கட்டட நிதிக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப் பட்ட தொகை முழுவதையும் வசூலித்து மாநில மையத்தில் செலுத்த வேண்டும் என்பதில் நீ காட்டிய ஆர்வத்தை எண்ணி மகிழ்கின்றோம்.
"தனிநபர் வசூலுக்கு இரண்டு தினங்கள் தலைவரை (ஆர்.என்.கே.) அனுப்பி வைக்க வேண்டும்'' என்று கேட்டபோது, "ஏன் நீங்களே தலைவர் இடத்தில் பேசி தேதி கேட்க வேண்டியதுதானே'' என்று பதிலுரைத்த போது, "அது எப்படி நான் கேட்பது? மாநில தலைமை தான் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். நான் நேரடியாக தலைவரை கேட்பது கட்சி முறையல்ல'' என்று கூறி பாடம் நடத்தி, எங்களுக்கு தலைமைப் பண்பை வெளிப்படுத்தினாய்!
கட்சியின் மாநில நிர்வாகக் குழு, மாநிலக் குழுக் கூட்டங்கள் மார்ச் 17 முதல் 20 வரை நாகப்பட்டினத்தில் நடைபெற்றபோது முழுமையாக பங்கு பெற்றதுடன், வசூலுக்கு தேதி வேண்டும் என நினைவூட்டினாய்!
இதுவே நீ கலந்து கொள்கிற கடைசிக் கூட்டம் என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை.
அரை நூற்றாண்டு காலம் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து அயராது பணியாற்றினாய்.
மதிப்புமிக்க தலைவர் தோழர் இரா. நல்லகண்ணுவின் மூத்த மகளான காசிபாரதியை மணம் முடித்தாய். இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தாய்!
ஆசிரியையாக, தலைமை ஆசிரியையாக பணியாற்றி பணி ஓய்வுபெற்ற நிலையில், உன் நினைவாகவே இன்றும் இருக்கின்றார் பாரதி.
இரண்டு மகள்களை பெற்ற நீ, மூத்த மகள் சண்முகா பாரதியை இழந்ததால் ஏற்பட்ட துயரத்தில் நீ மட்டுமல்ல, செல்லப் பேத்தியை இழந்துவிட்டோம் என்ற மனவருத்தத்தை இன்றும் தோழர் ஆர்.என்.கே. சுமந்து கொண்டு இருப்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும்.
இரண்டாவது செல்லமகள் கண்ணம்மாள் உனக்கு மட்டுமல்ல, கட்சித் தோழர்கள் அனைவருக்கும் செல்ல மகளே! மகள் கண்ணம்மாளை நன்கு படிக்க வைத்து அவரையும் வழக்கறிஞராக்கி அழகு பார்த்து மகிழ்ந்தாய்.
கண்ணம்மாள் மட்டுமல்ல, ஆண்டாளின் பிள்ளைகள் சதீஷ், பிரியாவையும் தனது பிள்ளைகளாகவே பார்த்தாய்.
தனது குடும்பத்தில் உள்ள மனைவி, மகள் என அனைவரையும் கட்சியில் உறுப்பினராக சேர்த்து எங்கள் குடும்பம் கட்சிக் குடும்பம், கம்யூனிஸ்ட் குடும்பம் என்று பெருமைப்பட்டாய்!
கடந்த மாதம் மார்ச் 27 அன்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாய்.
29ம் தேதி பகல் 12 மணிக்கு தோழர்கள் க.சந்தானம், எஸ்.குணசேகரன், பா.காளிதாஸ் இவர் களோடு உன்னை மருத்துவமனையில் சந்தித்த போது, இரு கரங்களையும் குவித்து கும்பிட்டு வழக்கமான புன்சிரிப்போடு வரவேற்றதையும், நலமாக இருக்கிறேன், ஜெயித்து விடுவேன் என்பது போன்று, வலது கையை மடக்கி, கட்டை விரலை நீட்டி வெற்றி யை வெளிப்படுத்தியது மட்டு மல்ல, "கட்சி உறுப்பினர் கணக்கு முடித்து, பணம், பட்டியல் அனுப்பிவிட்டேன், வந்து விட்டதா? எனக் கேட்டு, வர வில்லை என்றால் கே.எஸ். சத்தம் போடுவார்'' என்று மருத்துவ மனையில் இருந்துகொண்டே பொறுப்போடு கட்சிப் பணி யாற்றியதை என்னவென்று கூற!
உன் முடிவு குறித்து உனக்கு தெரிந்துவிட்டது போலும். அதனால் தான் எல் லோரையும் பார்க்க வேண்டும், குழந்தைகள், மருமகன்கள், தலைவர் மற்றும் ஆண்டாள் அனைவரையும் வரச் சொல் என்று கண்ணம்மா விடம் கூறியதைக் கேட்டு அனைவரையும் வரச் செய்தோம்.
அனைவரும் வந்து பார்த்தார்கள். "எல்லோ ரும் ஒற்றுமையாக இருங்கள்'' எனக் குடும்பத் தலைவர் என்கிற பொறுப்புணர்வுடன் கூறினாய்! உனது பொறுப்பை சதீஷிடம் ஒப்படைத்தாய்.
தலைவர் நல்லகண்ணு அவர்களும், மகள் ஆண்டாளும் விமானம் மூலம் விரைந்து வந்தனர்.
"ஆர்.என்.கே.யை கரம் குவித்து கும்பிட்டு, நன்றாக இருக்கிறேன், கவலைப்படவேண்டாம், இரண்டு நாட்களில் வந்து விடுவேன்'' என நம்பிக்கையூட்டினாய்!
ஏப்ரல் 2ஆம் நாள் தோழர் காளிதாசுடன் வந்து பார்த்தபோது "என்ன இங்கேதான் சுற்றிக் கொண்டு இருக்கின்றீர்களா? காளிதாசுக்கு என் னால் மிகவும் சிரமம், பாவம் அவர்'' என்று கூறினாய்.
உன்னை நம்பி இருந்தோம், நலமுடன் வருவாய், மீண்டும் பணிகளை மேற்கொள்வாய் என்று நம்பிக்கையோடு இருந்தோம். எங்களின் நம்பிக்கையை பொய்யாக்கி விட்டு ஏப்ரல் 4ஆம் தேதி மாலை விடைபெற்றுச் சென்று விட்டாய்!
மார்ச் 27ஆம் தேதி உன்னுடன் மருத்துவ மனைக்கு வந்த பாரதியும், கண்ணம்மாவும், சதீசும் உன்னை குணமாக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்வோம் என்ற நம்பிக்கை பொய்யாகி, உன்னைச் சுமந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.
உனது செல்லப் பேத்தி நல்லாள் "தாத்தா எங்கே?'' என்று கேட்கின்றாள். என்ன பதில் சொல்ல அழகு!
உனக்கு மாமனாராக இல்லாமல் தலைவராக விளங்கி வருகின்ற, பல சுமைகளைச் சுமந்து நிற்கின்ற, தலைவர் நல்லகண்ணுவிற்கு யார் ஆறு தல் கூறுவது? என்று தெரிய வில்லையே அழகு! நீ வரு வாயா? ஆறுதல் கூறுவாயா?
உன் வாழ்நாள் முழு வதும் உன்னுடன் இணைந்து உன் மனம் கோணாமல் நிமிடத்திற்கு நிமிடம் மாமா, மாமா என்று புன்னகை முகத்தோடு உன்னை அழைத்து மகிழ்ந்த பாரதியை நிர்க்கதியாய் விட்டுவிட்டுச் சென்று விட்டாயே! பாரதிக்கு யார் ஆறுதல் கூறுவது? நீ வருவாயா அழகு?
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கட்சித் தோழர்கள் என அனைவரும் கலங்கி நிற்கின்றனர்.
அவர்களின் கண்ணீரைத் துடைக்க நீ வருவாயா?
வரமாட்டாய், இயற்கை உன்னை வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டது.
இயற்கையை எவராலும் வெல்ல முடியாது என்பதை அறிவோம்!
ஆனாலும், அழகு உன்னை எங்களின் நெஞ்சங்களில் என்றும் சுமந்து நிற்போம்!
உன் புகழ் ஓங்கட்டும்! உன் லட்சியக் கனவுகள் நிறைவேறும்! இது உன் மீது சத்தியம்!
எங்களுடன் வாழ்வாய், வாழ்ந்துகொண்டே இருப்பாய் அழகு! அழகு உனக்கு எங்களின் வீர வணக்கம்!