ந்தியா- நேபாளத்துக் கிடையே புதிய எல்லைப் பிரச்சனை எழுந்திருக்கிறது. நேபாளத்தின் நில நிர்வாக, கூட்டுறவு மற்றும் ஏழ்மை அகற்றல் துறைகளுக்கான அமைச்சர் பத்மகுமாரி ஆர்யாள் கடந்த மே 20-ஆம் தேதி வெளியிட்ட நேபாள மேப் காலாபாணி, லிம்பியதுரா, லிபுலேக் பகுதிகளை நேபாளத்தின் எல்லைக்குட்பட்டதாக காட்டி யிருப்பது சர்ச்சைக்குரியதா யிருக்கிறது.

புதிய வரைபடத்தால் நேபா ளத்தின் எல்லை 335 சதுரகிலோமீட்டர் அதிகரித்திருக்கிறது. நேபாளத்தின் இந்நடவடிக்கைக்கு வெளியுறவு விவகாரத்துறை செய்தியாளரான அனுராக் ஸ்ரீவத்சவா, ""நேபாள அரசாங்கத்தின் புதிய மேப் இந்தியப் பகுதிகளை தனது பகுதி களாகக் காட்டி வரைபடம் வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ளாது'' என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

nepal

உலகின் ஒரே இந்து தேசமாக அறியப்பட்ட நேபாளத்துக்கும், இந்தியாவை இந்துத்துவ தேசமாக மாற்ற விரும்பும் பா.ஜ.க. அரசுக்கும் ஆரம்பம் முதலே முட்டல்மோதலாகத்தான் இருக்கிறது. 2015-ல் மாதேசி விவகாரத்தில், இந்திய எல்லையை நேபாள வாகனங்களுக்குத் தடுத்து நேபாளம் சீனா பக்கம் சாய வழிவகுத்ததாக விமர்சனம் எழுந்தது.

Advertisment

இந்தியாவின் பண மதிப்பிழப்பு விவகாரத்தில் இந்தியா, எட்டுக்கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை மாற்றித்தராதது குறித்து நேபாளத்தில் மனவருத்தம் நிலவியது. அதனால் சிறிது காலத்துக்கு இந்தியாவின் புதிய 2000, 500 ரூபாய் தாள்கள் செல்லாது என நேபாளம் அறிவித்தது. இந்நிலையில்தான் இந்த புதிய எல்லைப் பிரச்சனை எழுந்துள்ளது.

இந்த பிரச்சினைக்கான பிள்ளையார் சுழி இந்தியா போட்டதென நேபாளம் கைகாட்டுகிறது. 2019-ல் ஜம்மு, காஷ்மீர், லடாக் போன்ற பிளவுபட்ட பகுதிகளை இந்தியாவுடன் இணைத்து புதியதொரு வரைபடத்தை இந்தியா வெளியிட்டது. அப்போதே அந்த வரைபடத்தில் காலாபானி, லிபுலேக் இந்தியாவின் பகுதிகளாக குறிப்பிடப் பட்டிருப்பதற்கு காத்மாண்டுவிலிருந்து ஆட்சேபம் கிளம்பியது. வெளியுறவுத்துறை செயலர் அளவிலான கூட்டம் நடத்த அப்போதே நேபாளம் அழைப்புவிடுத்தது. இந்தியத் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

விஷயம் அத்துடன் நின்றுவிடவில்லை, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மானசரோவர் செல்லும் புனிதப் பயணிகளின் பயணத் தொலைவைக் குறைப்பதற்கு உத்தர காண்டின் தார்ச்சுலாவிலிருந்து லிபுலேக்குடன் ஒரு இணைப்புச் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தார். அப்போதும் நேபாளத்திடமிருந்து கோபமான எதிர்வினைகள் வெளிப்பட்டன. அதையும் இந்தியா பொருட்படுத்தவில்லை.

Advertisment

நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் நேபாளத்துக்கான இந்தியத் தூதரை அழைத்து, பிரச்சனைக்குரிய எல்லைகுறித்து உயர்மட்ட சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்யும்படி உத்தர விட்டார், நேபாளத்தின் ஆயுதப் போலீஸ் படையை சர்ச்சைக்குரிய எல்லையில் காவலுக்கு நிறுத்தவும் செய்தது. இதையடுத்து இந்தியா இறங்கிவந்து நடப்பிலிருக்கும் கொரோனா பிரச்சினை தீர்ந்ததும் இந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாமென சொன்னது.

dd

பிரச்சினை சுமுகமாகப் போய்க்கொண்டி ருக்கையிலேயே இந்திய ராணுவத்தின் முகுந்த் நரவனே, சீனாவின் தூண்டுதலால்தான் நேபாளம் இந்த எல்லைப் பிரச்சனையைக் கிளப்புகிறது என அறிக்கைவிட்டார். இதுதான் நேபாளத்தின் கோபத்தைத் தூண்டியது. புதிய மேப் வெளிவிடக் காரணமானது.

நேபாள பாராளுமன்றத்தில் பேசிய நேபாள பிரதமர் கே.பி. ஒலி, “இந்திய அசோகச் சின்னத்தில் சிங்கங்களின்கீழ் உண்மையே வெல்லும் வாசகம் உண்டு. ஆனால் இந்தியா சிங்கமே வெல்லுமென நம்புகிறது. மாறாக, நேபாளம் உண்மையே வெல்லும் என நம்புகிறது’’ என கொஞ்சம் காரசாரமாகவே பேசிவைத்தார்.

இந்திய- சீன போருக்குமுன் லிபுலேக் பாஸ் மானசரோவர் செல்லும் பயணிகளுக்கான பாதையாக இருந்தது. போருக்குப் பின் அந்தப் பாதை பயன்படுத்தப்படவில்லை. 2015-ல் இந்தியா- சீனாவுக்கிடையேயான வியாபார மையமாக இருக்கும் என இருநாடுகளாலும் கூட்டறிக்கை விடப்பட்டது. இதையடுத்துதான் உத்ரகாண்ட்- லிபுலேக் இடையே இணைப்புச் சாலை போடப் பட்டது.

இந்த மேப் விவகாரத்தில் கருத்தெதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துவந்த சீனா, கடைசியாக காலாபானி பிரச்சனை இந்தியா- நேபாளத்துக்கு இடையேயானது. ஒருதலைப்பட்ச மான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இரண்டு நாடுகளும் விஷயத்தை சுமுகமாக பேசித் தீர்க்கும் என நம்புகிறோம் என சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கையிட்டது. அந்த அறிக்கையில் ஒருதலைபட்சமான நடவடிக்கை என்ற பிரயோகம், இந்தியாவின் மீதான விமர்சனம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்தியா- நேபாளத்துக்கான எல்லைப் பிரச்சனை புதியதல்ல. 1816-ல் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனிக்கும் அப்போதைய நேபாள அரசருக்கும் இடையே சுகாலி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் சுகாலி ஒப்பந்தப்படி லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகள் நேபாளத்துக்குச் சொந்தமானவை. இந்தியா சுதந்திரமடைந்ததும் 1960 முதல் புதிய எல்லைப் பிரச்சனைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆனாலும், நேபாளம் இந்தியாவை தனது நட்பு நாடாகவே பார்த்துவந்தது. 2010-க்குப் பிறகு இந்நிலையில் மாற்றம் வந்தது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் இந்நிலையில் தீவிர முரண்கள் எழ ஆரம்பித்தன. அதற்கேற்றாற்போல் நேபாள மன்னரைப் பின்னுக்குத் தள்ளி அங்கே கம்யூனிச ஆதரவு அரசு அமைந்ததும், மாதேசி பிரச்சனையில் இந்தியா- நேபாள உரசலும் இந்த விலக்கத்தை மேலும் மேலும் அதிகரித்தது.

மோடி அரசு இந்தப் பிரச்சனையை எப்படி சாமர்த்தியமாய் தீர்க்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

- க. சுப்பிரமணியன்