"சதுரங்க வேட்டை', "தீரன் அதிகாரம் ஒன்று', "நேர்கொண்ட பார்வை' என இயக்குனர் எச்.வினோத் இயக்கிய படங்கள் எதுவுமே சாதாரணமானவை அல்ல. ஆழ்ந்த ஆய்வும், உண்மை களும், தகவல்களும், விறுவிறுப்பும் நிறைந்த இந்தப் படங்களின் வரிசையில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள "வலிமை' திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் குறித்தும் அவரது பயணம் குறித்தும் பேசினோம்....
நடக்கும்போதுதான் உங்களுக்கு அதிக சிந்தனை வரும் என்று கேள்விப்பட்டோம், அது உண்மையா?
நடந்தால்தான் சிந்தனை வரும் என்றெல்லாம் இல்லை. முதலில் எனக்குத் தோன்றும் விஷயங்களை எழுதிவிடுவேன். பின், எனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்வேன். அதன் பிறகு, என்னுடைய இயக்குநர் டீமில் கொடுத்து படிக்கச் சொல்வேன். அவர்களுடைய கருத்துகளை அடிப்படையாக வைத்து கதையின் இறுதிவடிவத்தை உருவாக்குவேன்.
வலிமை படத்திற்கான இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வந்தது?
இரண்டு மூன்று விஷயங்கள் சேர்ந்ததுதான் இந்தக் கதை. பைக் திருடனைப் பற்றி ஒரு கதை எழுதி வைத்திருந்தேன். அந்தக் கதையை பாசிட்டிவாக மாற்றி அதில் வேறு சில விஷயங்கள் சேர்த்து வலிமை கதையை உருவாக்கினோம்.
கதைகளுக்கான முதல் சிந்தனை எங்கிருந்து கிடைக்கும்? நிறைய வாசிப்பீர்களா?
நான் புத்தகங்கள் அதிகம் வாசிப்பதில்லை. ஆனால், நாளிதழ்கள், வார இதழ்கள் நிறைய வாசிப்பேன். அதில் வரும் செய்திகள் என் கதைக்கு பங்களிக்கின்றன. அதன் தாக்கம் என் படங்களில் இருக்கின்றன. "தீரன்' படத்துக்காக நான் தேடும்போது நக்கீரன் செய்திகள், படங்கள்தான் முதலில் கிடைக்குது? அதனால் செய்திகளின் தாக்கம் என் படங்களில் இருக்கும்.
வலிமை டீசர் பார்க்கும்போது ஐரோப்பாவில் உள்ள "சாத்தான் ஸ்லேவ்' என்ற பைக் ரேஸிங் குரூப்பைப் பற்றிய கதைபோல தெரிகிறதே?
இது அதைப் பற்றிய கதை இல்லை. முழுக்க முழுக்க இந்தியாவில் சென்னையில் நடக்கக்கூடிய கதைதான் இந்தப் படம். அப்படி ஒரு பைக் குழு இருப்பதால் "சாத்தான் ஸ்லேவ்' என்ற பெயரை மட்டும் பயன்படுத்தியிருக்கிறோம்.
ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் ரியலாக உள்ளதே? அதைப் படமாக்கிய அனுபவம் எப்படி இருந்தது?
படத்தில் உள்ள 95% ஸ்டண்ட் காட்சிகள் ரியலாக எடுக்கப் பட்ட காட்சிகள்தான். அதைப் படமாக்குவது தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரும்சவாலாக இருந்தது. எனக்கு கியர் பைக் ஓட்டவே தெரியாது. அதனால் அதைப் படமாக்கும்போது என்னென்ன பிரச்சினைகள் வருமென்று பைக் பற்றி எல்லாம் தெரிந்த அஜித் சாரிடமும் ஸ்டண்ட் மாஸ்டரிடமும் டிஸ்கஸ் பண்ணிய பிறகுதான் ஷூட் பண்ணோம். இன்றைக்கு விதவிதமான ஸ்கில்சுடன் பைக் ஓட்டுவது பெரிய ஸ்போர்ட்ஸாக மாறியுள்ளது. அதனால் அதில் திறமையுள்ள ஆட்களை மும்பை, கோயம்புத்தூர் எனப் பல இடங்களில் இருந்து அழைத்து வந்து நடிக்க வைத்தோம். ஃபைட் சீன்ஸ் ரியலாக வந்துள்ளது என்றால் அதற்கு ஸ்டண்ட் டீம்தான் முக்கிய காரணம்.
சமீபத்தில் அஜித் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பைக்கில் ட்ராவல் செய்தார். அதைப் பற்றி உங்களிடம் ஏதாவது பகிர்ந்து கொண்டாரா?
நிறைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இங்கு சுதந்திரமாக அவரால் வெளியே வரமுடியாத சூழல் உள்ளது. பைக் ட்ராவல் போகும்போது அது உடைவதாகக் கூறினார். பெட்ரோல் பங்கில் டென்ட் அமைத் துத் தங்கி அவர்களே அங்கு சமைத்து சாப்பிட் டது, லடாக்கில் ஒரு வீட்டில் சாப்பிட்டு அவர்களி டம் பணம் கொடுத்தபோது நீங்கள் எங்கள் கெஸ்ட் என்று கூறி ஒரு லேடி பணம் வாங்க மறுத்துவிட்டது எனப் பல நெகிழ்ச்சியான விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.
வலிமை படம் தொடங்கியதிலிருந்து ரிலீஸ் வரையிலான இந்த 2 ஆண்டுகள் எப்படி இருந்தன?
ரொம்பவும் அழுத்தமாக இருந்தது. முதலில் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந் தோம். ஆனால், அடுத்த தீபாவளி வரை ஷூட்டிங்கே முடிய வில்லை. பின், பொங்கலுக்குப் படம் வெளியாகப்போகிறது என்று நம்பிக்கையோடு இருக்கை யில் மீண்டும் தள்ளிப்போனது. சின்ன வெளிச்சம் தெரிவதுபோல இருக்கும். ஆனால், உடனே அணைந்துவிடும். சினிமா மட்டு மல்ல எல்லா துறையினருக்குமே இந்த கொரோனா காலம் மிகப் பெரும் போராட்டமாக இருந்தது. தற்போதுதான் சினிமா இண் டஸ்ட்ரி மீண்டுவர ஆரம்பித்துள் ளது. இப்படியான நேரத்தில் தேவையில்லாத நெகட்டிவ் விஷ யங்களைப் பரப்பாமல் அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் பொது மக்களும் வலிமை படத்திற்கு ஆதரவு தரவேண்டும். படம் உங்க ளுக்குப் பிடித்திருந்தால் பிடித் திருக்கு என்று சொல்லுங்கள். தேவையற்ற நெகட்டிவ் ரிவியூஸ் வேண்டாம். அதுதான் கோவிட் நேரத்தில் நாங்கள் எதிர்கொண்ட மன அழுத்தத்திற்கான மருந்து.
அடுத்த படமும் அஜித்துடன் ஆரம்பிச்சுட்டீங்க... "ஏ.கே.61' படத்தில் என்ன மாதிரியான விஷயங்களை எதிர்பார்க்கலாம்?
நான் மிகப்பெரிய சமூக பிரச்சினையாகப் பார்க்கும் ஒரு விஷயத்தை இந்தப் படம் பேசும். முழுக்க நெகட்டிவ் இல்லாமல் கொஞ்சம் நெகட்டிவ் தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் அஜித் சார் நடிக்க இருக்கிறார். வலிமை ரிலீஸ்வரை அது பற்றி நிறைய பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.
-கிருபாகர்