ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனு பவித்து வரும் 7 பேர் விடு தலையில் நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது. ஆனாலும் மீண்டும் மீண்டும் தமிழக ஆளுநரை நோக்கியே பந்து நகர்த்தப்படுவதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு கண்ணாமூச்சி ஆடுகிறதோ என சந் தேகத்தை எழுப்புகின்றனர் 7 பேர் விடுதலைக் காக போராடும் தமிழ் உணர்வாளர்கள்.
ராஜீவ் படுகொலை வழக்கில் 29 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட்பயாஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடு தலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை கடந்த 10 ஆண்டுகாலமாக அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் முன்வைத்து வருகின் றன. அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்பதை கடந்த 2018, செப். 9-ந்தேதி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
இதனையடுத்து, தமிழக அமைச்சரவை யைக் கூட்டி விவாதித்த முதலமைச்சர் எடப் பாடி பழனிச்சாமி, ஏழு பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந் துரைத்தார். ஆனால், அதன் மீது இதுவரையி லும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை கவர்னர். இவர்களை விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கு சட்டரீதியாக உடன்பாடில்லை என்ப தால் கவர்னரும் தமிழக அரசின் பரிந்துரை மீது கவனம் செலுத்தவில்லை.
ஏழு பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானத்தின் பரிந்துரையை ஆளுநர் நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் நளினி. அந்த வழக்கு கடந்த ஜனவரி 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, "ஆயுள் சிறைத் தண்டனை பெற்றிருக் கும் அவர்களை விடுதலை செய்யக்கூடாது. இந்த விசயத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது'‘ என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியைத் தந்தது மத்திய அரசின் பதில். மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, 7 பேர் விடுதலைக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை களைத் தொடர்ந்து, ""இந்த விவகாரத்தில் தங்கள் அமைச்சகத்தின் ஆலோ சனையை கவர்னர் பெறத் தேவை இல்லை'' என சமீ பத்தில் தெரிவித்திருந்தது மத்திய உள்துறை அமைச் சகம். ஆனாலும், அவர்களின் விடுதலை குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை கவர்னர். இதனால், அவர்களது விடுதலைக்காக போராடும் அனைவரும் ஒருவித சோர்வு நிலைக்கு தள்ளப் பட்டனர்.
இப்படிப்பட்ட சூழலில், நளினி தொடர்ந்த வழக்கு கடந்த 7-ந் தேதி (7.2.2020) உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தங்களின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட மத்திய அரசு, ""7 பேர் விடுதலையில் கவர்னர் சுதந்திரமாக முடிவு செய்யலாம்'' என பதில் மனுவை தாக்கல் செய்தது. இதனால், ""7 பேரிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் விடுதலை ஆவார்கள்''‘ என்கிற நம்பிக்கை முளைத்திருக்கிறது.
இது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதத் தம்மாளிடம் பேசியபோது, ""மத்திய அரசின் பதில் எங்களுக்கு பாலை வார்த்தமாதிரி இருக்கு. இது வரை சட்டரீதியிலாக நீடித்து வந்த சில முட்டுக்கட் டைகள் மத்திய அரசின் பதிலால் நீங்கியிருக்கிறது. ஏற்கனவே ஜெயலலிதாவை நான் சந்தித்தபோது, "உன் பையனை உங்களிடம் ஒப்படைப்பது என் பொறுப்பு' என நம்பிக்கை கொடுத்தார். அந்த அம்மா ஆட்சியை நடத்தும் இப்போதைய தமிழக அரசும் நீதிமன்றத்தில் இதே கருத்தை வலியுறுத்தினால் கவர்னர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். என் மகன் உட்பட 7 பேரும் விடுதலை யாவார்கள்'' என்கிறார் நம்பிக்கையுடன்.
"7 பேர் விடுதலைக்கு நாங்கள் தடையாக இல்லை' என மத்திய அரசு தனது மனுவின் மூலம் வெளிப்படுத்தி னாலும் விடுதலை விளையாட்டில் மீண்டும் பந்து கவர்னரை நோக்கியே தள்ளப்பட்டிருப்பதால் டெல்லியின் ஆலோசனையின்றி எந்த முடிவையும் கவர்னர் எடுக்க மாட்டார் என்றே வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.
இவர்களின் விடுதலைக்காக போராடியவ ரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் மணியிடம் இது குறித்து பேசியபோது, ‘""தமிழக அமைச்சரவை யின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்தான் கவர்னர். அமைச்சரவையின் பரிந்துரைகளை நிராகரிக்க கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நளினிக்கான மரண தண்டனையை முந்தைய கலைஞர் அரசு ஆயுள் தண்டனையாக குறைத்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அப்போதைய ஆளுநர் பாத்திமாபீவிக்கு பரிந் துரைத்ததை அவர் நிராகரித்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சரவை பரிந்துரைகளை நிராகரிக்கும் அதிகாரம் கவர்ன ருக்கு கிடையாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த வகையில் அமைச்சரவை பரிந் துரைக்கு எதிராக கவர்னரால் முடிவெடுக்க முடியாது. ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னரை நிர்பந்திக்க சட்டத்தில் இடமில்லாததை ஆளுநர் பயன்படுத்திக் கொள்கிறார். இந்தச் சூழலில், மத்திய அரசின் உண்மையான முடிவை அறிந்து கொள்ளாமல் முடிவெடுக்க மாட்டார் கவர்னர். மத்திய அரசும் தேர்தல் ஆதாயத்தை மனதில் வைத்துத்தான் முடிவை எடுக்க வலியுறுத்தும்''’ என்கிறார் அழுத்தமாக.
-இரா.இளையசெல்வன்