கொரோனா தடுப்புப்பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும் என்று கடந்த மார்ச்-24 ந்தேதி அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், 4 மாதங்கள் ஆகிவிட்ட சூழலில் இன்னும் சிறப்பூதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாகக் கேட்கிறது.

pp

இதுகுறித்து, நாம் விசாரித்த போது, “கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கு ஊதியமே வரவில்லை இதில், சிறப்பூதியத்தை எங்கே எதிர்பார்ப்பது? என்று குமுறி வெடிக்கிறார்கள். இதுகுறித்து, பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கும் தமிழ்நாடு மருத்துவப்பணியாளர்கள் கூட்டமைப்போ, “கிரேடு-3 லேப்டெக் னிஷியன்கள் 700 பேர் இருக்கிறார்கள். 8,000 ரூபாய் தொகுப்பூதியம் கொடுக்கணும். ஆனா, ஏப்ரல், மே, ஜூன் மூணு மாசமா கொடுக்கப்படல. மூன்று மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1500 ஹெல்த் இன்பெக்டர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் மட்டும்தான் வந்திருக்கு. மே, ஜூன் வரல.

தமிழகத்தில் 3,000 ஆயாக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு, கள்ளக்குறிச்சியில் 6 மாதங்களாக சம்பளம் அதாவது இன்செண்டிவ் வரவில்லை. ஈரோட்டில் 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. ஊட்டியில் ஒருபகுதியில் 3 மாதங்களாக வழங்கப்படவில்லை. கோவையில் ஒரு பகுதியில் 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. அம்பாசமுத்திரத்தில் 8 மாதங்கள் வழங்கப்படவில்லை. தர்மபுரியில் 3 மாதங்களாக வரவில்லை.

டாக்டர்களுக்கு பதிலாக அதிகமாக முதுநிலை மருத்துவர்களும் ஹவுஸ் சர்ஜன் எனப்படும் பயிற்சி மருத்துவர்களும்தான் கொரோனா நோயாளிகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். அப்படியிருக்க, முதுநிலை மருத் துவர்களுக்கு வழங்கவேண்டிய இரண்டு மாத சம்பளம் கால தாமதமாக வந்துகொண்டிருக்கிறது, ஹவுஸ் சர்ஜன்களுக்கும் முறையாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்ற குமுறல்கள் வெளிப்படுகிறது.

அதேபோல், கொரோனா பணியில் ஈடுபட்டு கொரோனா தொற்றுக்குள்ளாகும் மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர் களுக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர். அதுவும், யாருக்கும் வழங்கப்படவில்லை. கொரோனா பணியில் இறந்துபோனால், 50 லட்ச ரூபாய் நிதியுதவி என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஒரு சிலருக்கே வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பணியில் ஈடுபட்டு இறக்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் 50 லட்ச ரூபாய் தமிழக அரசின் நிதியுதவியும் மத்திய அரசின் காப்பீட்டு தொகை 50 லட்சத்தையும் வழங்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையிலோ, தற்காலிக அடிப்படையிலோ எப்படி பணியில் அமர்த்தப்பட்டாலும் கொரோனா சூழலில் அவர்களது ஊதியத்திற்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

கொடுக்கவேண்டிய சம்பளத்தையே முழுமையாக கொடுத்து முடிக்காத தமிழக அரசு சிறப்பூதியத்தை எப்போது கொடுக்கப்போகிறது என்ற குமுறல் வெடித்துக்கொண்டிருக்கிறது. சில, இடங்களில் போராட்டங்களும் வெளிப்படு கின்றன.

-மனோ