பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்த சண்டை, பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான சண்டையாக மாறிவிட்டது. இதை அரசியலாக்கி, காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு குட்பை சொல்லியிருக்கிறது பா.ஜ.க.
2013-ஆம் ஆண்டு மிகக்குறைந்த அளவாக 170 வன்முறைச் சம்பவங்கள்தான் பதிவாகியிருந்தன. ஆனால், 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பா.ஜ.க.வும் மெகபூபாவின் ம.ஜ.க.வும் கூட்டணி அமைத்த பிறகு நிலைமை மீண்டும் மோசமாகத் தொடங்கியது.
2014, டிசம்பரில் நடந்த காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 15 இடங்களைப் பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சியும், 12 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியும் முதலிடத்தில் வந்த மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து அரசு அமைக்கத் தயாராக இருந்தன. ஆனால், கட்சி நிறுவனர் முப்தி முகமது சயீது பா.ஜ.க.வின் மடியில் அமர்ந்துவிட்டார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது பிரிவைத் தொடர்ந்து எதிர்க்கும் பா.ஜ.க.வுடன் முப்தி முகமதுவின் கூட்டணி எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற சந்தேகம் அப் போதே எழுந்தது. முப்தி முதல்வராகப் பொறுப் பேற்றவுடன், பிரிவினைவாதத் தலைவர்களில் மூத்தவரான மஸரத் ஆலம் விடுதலை செய்யப் பட்டார். இதை பா.ஜ.க. கடுமையாக எதிர்த்தது. 2016, ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முப்தி முகமது சயீது இறந்தார். அதையடுத்து அவருடைய மகள் மெகபூபாவுக்கு முதல்வர் வாய்ப்பை வழங்குவதில் பா.ஜ.க.வுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பிறகு மெஹபூபா 2016 ஏப்ரலில் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
2016, ஜூலை 8-ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் புர்ஹான் வானியை பாதுகாப்புப்படை கொன்றது. இந்தக் கொலைக்குப் பிறகுதான் காஷ்மீரில் மக்கள் போராட்டம் அதிகரித்தது. விசாரணை என்ற பேரில் இஸ்லாமிய இளைஞர்களை பாதுகாப்புப் படை சித்திரவதை செய்தது. பெல்லட் குண்டு களால் ஆண்களும் பெண்களும் சுடப்பட்டு படுகாயமடைந்தனர். இஸ்லாமிய வீடுகளில் திடீ ரென்று சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து பெண்களும் நேரடியாக பாதுகாப்புப் படையின ருடன் மோதத் தொடங்கினர். மாணவிகளே கற் களை வீசி தாக்குதல் நடத்தினர். அத்தகைய தாக்கு தலை சமாளிக்க முடியாத ராணுவ அதிகாரி, அப்பாவி இளைஞர் ஒருவரை ஜீப்பின் முன் கட்டி வைத்து நீண்டதூரம் பயணம் செய்தார். அது இந்திய ராணுவத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.
பெல்லட் குண்டு தாக்குதலில் சிறுவர்கள் பலர் பார்வையிழந்தனர். எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் படுமோசமான தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில்... இந்திய ராணுவம், பாகிஸ்தான் பகுதியில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு அறிவித்தது. இதை பாகிஸ்தான் அரசு மறுத்தது.
மோடி பிரதமரானால் அமைதி திரும்பிவிடும். காஷ்மீரைச் சொர்க்க பூமியாக மாற்றுவோம். பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தவே 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டது என்று பா.ஜ.க. சொன்னவை அனைத்தும் பொய்யாகி, காஷ்மீர் ரத்த பூமியாக மாறிவிட்டது.
2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் தேதி கதுவா என்ற இடத்தில் 8 வயது இஸ்லாமிய சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொன்று வீசிய சம்பவம் இந்தியாவை மட்டுமல்லாமல் உலகையே தலைகுனிய வைத்தது. இந்தச் சம்பவத்தில் பா.ஜ.க. ஆட்களை போலீஸ் கைது செய்தது. ஆனால், குற்றவாளிகளுக்கு ஆதர வாக பா.ஜ.க. நடத்திய பேரணியில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் இரண்டு அமைச்சர்களை மெகபூபா ராஜினாமா செய்ய வைத்தார்.
இந்நிலையில்தான் ஜூன் 14-ஆம் தேதி ஸ்ரீநகரில் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது ஏற்படுத்திய பதற்றம் ஓய்வதற்குள், ஜூன் 16-ஆம் தேதி இந்திய ராணுவவீரர் ஔரங்கசீப்பை தீவிரவாதிகள் கடத்திப் படுகொலை செய்தனர். மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்த நிலையில் செப்டம்பர் மாதம் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலக மெகபூபா திட்டமிட்டிருந்த தகவல் பா.ஜ.க.வுக்கு கிடைத்தது. உடனே, காஷ்மீர் பா.ஜ.க. தலைவர்களை வரவழைத்த டெல்லி தலைவர்கள், கூட்டணியிலிருந்து விலக முடிவெடுத்தனர். இந்த தகவல் கிடைத்தவுடன், மெஜாரிட்டி இழந்த நிலையில்... ஆளுநர் வோராவிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் மெகபூபா.
இன்னும் இரண்டரை ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள நிலையில், மெகபூபாவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸும், தேசிய மாநாட்டுக் கட்சியும் மறுத்துவிட்டன; தேர்தல்தான் தீர்வு என்கின்றன.
இதனைச் சாதனையாக நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, ஆளுநர் ஆட்சி மூலம் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளைப் பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. தீவிரவாதிகள் மீதான வேட்டையைத் தீவிரப்படுத்த "வீரப்பன் வேட்டை' புகழ் விஜயகுமார் ஐ.பி.எஸ்., ஆளுநர் வோராவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதியான தினேஷ்வர் சர்மாவும் காஷ்மீரில் மீண்டும் களமிறங்குகிறார். தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக ஜனநாயக ஆட்சிக்கு புதைகுழி வெட்டியுள்ளது பா.ஜ.க.
-ஆதனூர் சோழன்