முன்னாள் அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., விருதுநகர் தாலுகாவிலுள்ள துலுக்கபட்டியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த இரவு நேரத்தில், அவர் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஒன்று காத்திருந்தது.

kkssrr

ரயில் கடந்து செல்வதற்காக, அந்தப் பகுதியிலுள்ள ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரயில் சென்றதும் கேட் திறக்கப்பட, அண்ணாச்சியின் வாகனம் மெல்ல நகர்ந்தது. அதுதான் தருணம் என்று அங்கே சிலர் காத்திருந்தனர். அண்ணாச்சியும் அவர்களது கோரிக்கை என்னவென்று அமைதியாகக் கேட்டார். அவர்களோ, பேச்சில் ஆவேசத்தைக் காட்டினார்கள். பேசியபடியே அவர்கள் சூழ்ந்துகொள்ள ஒரு நெருக்கடி வளையத்துக்குள் சிக்கினார் அண்ணாச்சி.

எடுத்த எடுப்பிலேயே, "எங்க ஓட்டு உங்களுக்கு வேணுமா?' என்றுதான் அவர்கள் ஆரம்பித்தனர். அடுத்து, "நீங்க ஏன் பேசல?, தேவேந்திரகுல வேளாளர் குறித்து உங்க தலைவர் ஏன் பேசல? ஏன் அறிவிக்கல?' என்று வார்த்தைகளால் உலுக்கியெடுத்தனர். அதற்கு அண்ணாச்சி, ""உங்கள தேவேந்திரகுல வேளாளர்னு அறிவிக்கிறதுல, யாருக்கும் ஆட்சேபனை கிடையாது. சொல்லப்போனா... நாங்களே இதை அறிவிச்சிருக்கோம். மற்றபடி, இந்த சலுகை வேணும், வேணாம்கிறது குறித்து லீடர்ஸ் கிட்ட பேசிக்கங்க. இதையெல்லாம், அந்தந்த தலைவர்கள்தான் பேசணும். நாங்க பேச முடியாது. ஆமா.. தேவேந்திரகுல வேளாளர் பட்டியலை இந்த கவர்மெண்டே அனவுன்ஸ் பண்ணலாம்ல''’ என்று திருப்பி கேட்க... அந்தக் கூட்டம் சமாதானமாகவில்லை. மேலும் உஷ்ணமானது.

Advertisment

அவர்களைச் சமாளிக்கும் விதத்தில் அண்ணாச்சி, “""எல்லா இடத்திலும் நாங்க தேவேந்திரகுல வேளாளர்னுதான் பேசிக் கிட்டிருக்கோம்''’என்று சொல்ல, “""உங்க தலைவர்தான், ஊரு ஊரா கிராமசபைக் கூட்டத்துல பேசிக்கிட்டிருக்கார்ல. அங்கே ஏன் பேசல?''’என்று அவர்கள் எகிற... சூழ்நிலைக்கேற்ப அண்ணாச்சி, “""தளபதி இந்தப் பக்கம் வரவே இல்லப்பா... அப்படி வரும்போது பேசாம இருந்தா சொல்லுங்க'' என்று கூல்பண்ண முயற்சித்தார்.

ஆனாலும், அந்தத் தரப்பு ஆத்திர வார்த்தைகளை உதிர்த்தபடியே இருந்தது. யாரோ, யாரையோ ஒருமையில் பேசி, கூச்சலிட்டனர். பிறகு அண்ணாச்சியிடம் ""உங்க தொண்டர்கள் யார் யாரு இருக்கா? நீங்க என்ன செஞ்சீங்க? என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? இத்தனை நாளா நாங்க பிரச்சனைலதான இருக்கோம்'' என்று தங்களது மனவலியைத் தொடர்ந்து வெளிப்படுத்தினர். அண்ணாச்சி அந்த இடத்தைவிட்டு நகரமுடியாதவாறு, நெருக்கமாக நின்று நேருக்குநேர் வாக்குவாதம் செய்தனர்.

நாம் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை தொடர்புகொண்டோம். ""அதுவந்து தேவேந்திரகுல வேளாளர்னு நம்ம கட்சி சார்பா சொல்லணும்னு சொன்னாங்க. நம்ம தலைவர் சொல்லிட்டாரு. என்னைக்குன்னா.. 11-9-2020-ல் அறிவாலயத்துல வச்சி இமானுவேல் சேகரன் படத்தை திறந்து வைக்கிறாரு. அப்பவே, தேவேந்திரகுல வேளாளர்னு அறிவிக்கிறதுக்கு மத்திய, மாநில அரசாங்கத்தோடு போராடி அந்த உரிமையைப் பெற்றுத் தருவோம்னு சொல்லிட்டாரு. அதைத்தான் அவங்க கேட்டாங்க. சொல்லியாச்சுன்னு சொன்னதுக்கு இன்னொரு தடவை சொல்லச் சொல்லுங்கன்னாங்க. அப்புறம், தேர்தல் அறிக்கையிலும் வரணும்னாங்க. அவங்ககிட்ட நான் மோடி சொல்லிட்டுப் போயிட்டாரு. ஆனா மோடி செய்யல. அவருகிட்ட கேட்கிறத விட்டுட்டு எங்ககிட்ட கேட்கிறீங்க. நாங்க இதுக்கு முழு சப்போர்ட்டா இருக்கோம்னு சொன்னேன். அந்தக் கும்பல்ல பி.ஜே.பி.காரங்களும் இருந்தாங்க. இதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்ல'' என்றபோது, அவரது அனுபவ முதிர்ச்சி வெளிப்பட்டது.

Advertisment

kkssrr

கே.கே.எஸ்.எஸ்.ஆர். நடந்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், உ.பி.க்களுக்கோ ஆதங்கம். “""அண்ணாச்சிக்கு 71 வயசாச்சு. இருட்டு நேரம் வேற. இப்படியா அவரை மறிச்சு ஆளாளுக்கு பேசுறது? தள்ளுமுள்ளுல ஒன்னு கிடக்க ஒன்னாச்சுன்னா யாரு பொறுப்பு? போன எம்.பி. தேர்தல்ல அவங்க கட்சி அதிமுகவோடுதான கூட்டு வச்சது. ஆளும்கட்சி மந்திரி, எம்.எல்.ஏ.வை மறிச்சு கேட்க வேண்டியதுதான? அதை விட்டுட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.கிட்ட வம்பு பண்ணுறாங்க. இதுல நிச்சயமா அரசியல் இருக்கு'' என்றனர்.

தொண்டாமுத்தூரில் நடந்த அ.தி.மு.க. கண்டனக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு "ஸ்டாலினை விடமாட்டோம்' என்று வசை பாடினார். அதன் எஃபெக்டோ என்னவோ, கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும் இந்த மாவட்டத்தில், ஏதோ ஒரு ரூட்டில் குடைச்சல் தர ஆரம்பித்துள்ளனர்.

-ராம்கி