ராமநாதபுரம் மாவட்டம் பனையூரைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளை ஆற்காடு நவாப் படையில் சேர்ந்து போர்ப் பயிற்சி பெற்று, கான்சாகிப்பாக மதம் மாறி, போர் புரிந்து மதுரையைக் கைப்பற்றினார். அப்போது கான்சாகிப் படையில் இருந்த குதிரைகளை பராமரிக்கும் இடமாகவும் ஆயுதங்கள் செய்யும் இடமாகவும் மதுரையில் இருந்த ஏரியாதான் நெல்பேட்டை. இப்போதும் பட்டரைக்காரத் தெரு, அந்த ஏரியாவில் உள்ளது.

mm

மருதநாயகம் பிள்ளையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, ஆற்காடு நவாப் படையில் சேர்ந்த அனைவருமே இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி ஏரியாவைச் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர். மருதநாயகம் வழியில் மதம் மாறிய பிறகு தங்கள் பெயருக்குப் பின்னால் இராவுத்தர் என்ற பட்டத்தைப் போட ஆரம்பித்தனர்.

இது 1700-களின் வரலாறு என்றால், இப்போது ஜிகர்தண்டாவுக்கு ஃபேமஸ் விளக்குத்தூண், கறி தோசைக்கு கோனார் மெஸ், ஐரைமீன் குழம்புக்கு குமார் மெஸ் என மதுரைக்கு ஃபேமஸைக் கூட்டுவது போல, மதுரையின் மையப்பகுதியில் இருக்கும் நெல்பேட்டை ஏரியா, ஒட்டு மொத்த மாநகர மக்களுக்கும் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஆட்டிறைச்சி, மீன் இறைச்சி, அரசின் நெல்கொள்முதல் நிலையம், தென்மாவட்டங்களில் விளைவிக்கப்படும் நெல், உணவு தானியங்களை சந்தைப்படுத்துதல், இரும்புப் பட்டரைகள் என எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்குகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னணி ராஜகோபாலன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சீனிநைனா முகமது இதே ஏரியாவைச் சேர்ந்தவர்தான். சீனி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது தம்பிகள் இப்ராஹிம், ராஜா உசேன் ஆகியோர் மீது, தமிழகத்திலேயே முதன் முதலில் தடா வழக்கு பதிவு செய்யப்பட்டது. 25 ஆண்டுகள் கழித்து அண்ணன் -தம்பி மூவருமே நிரபராதி என விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நெல்பேட்டையில் கூலித்தொழிலாளிகள் நிறைந்திருப்பதால் புறாக்கூண்டு சைஸ் வீடுகளே அதிகம் இருக்கின்றன. கழிப்பறை வசதிகூட முழுமையாக கிடையாது. இந்த ஏரியாவில் 75% இஸ்லாமி யர்கள் வசிப்பதாலும் சீனிநைனா முகமது கைது செய்யப்பட்டதிலிருந்தும் நெல்பேட்டை ஏரியா முழுவதும் போலீசின் கண்காணிப்பு பார்வையும் கைதும் வழக்கும் இப்போதுவரை நீண்டு கொண்டே செல்கிறது. அந்தப் பகுதியின் இஸ்லாமிய இளைஞர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து போலீசிட மிருந்து "நோ அப்ஜெக்ஷன்' சர்டிபிகேட் வாங்குவதும், பெரியவர்கள் தங்கள் வாழ்நாளின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித யாத்திரையான ஹஜ் பயணம் மேற்கொள்வது என்பதும் ரொம்ப ரொம்ப இயலாத காரியம்.

போலீசின் நெருக்கடியால், மதுரையின் மற்ற பகுதி இளைஞர்களைப் போல நெல்பேட்டை இளைஞர்களால் இருக்க முடிவதில்லை, அந்தப் பகுதி இளைஞர் ஆதம்பாவா விடம் கேட்ட போது, “""2011-ல் மதுரைக்கு அத்வானி ரதயாத் திரை வந்த போது, பாலத்துக்கு அடியில் யாரோ பைப் வெடிகுண்டு வைக்க, இந்த ஏரியாவைச் சேர்ந்த எங்க சமூக ஆட்களை போலீஸ் கைது செய்தது. அதேபோல் த.மு.மு.க. தவ்ஹீத் ஜமாத், தேசிய லீக் போன்ற இயக்கங்கள் வலுவாக இருப்பதும் இந்த ஏரியாதான். இதெல்லாம் போலீசுக்கு உறுத்தலை ஏற்படுத்துகிறது. நான் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணி அஞ்சு வருஷமாகியும் கிடைக்காததால் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனிடம் சிபாரிசு கடிதம் வாங்கி, அதன்பின்தான் கிடைத்தது'' என்கிறார் குமுறலுடன்.

சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஹாஜா நம்மிடம், ""பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலி, மாங்காய் பஷீர், முகமது இப்ராஹிம், சீனியப்பா, யாஸ்மின் ஆகியோரை அவர்களது ஊரில் புதைக்காமல் இங்குள்ள ஜமாத்துக்கு சொந்தமான மயானத்தில் புதைத்ததுதான் இவ்வளவுக்கும் காரணம். சின்னச் சின்ன குடும்ப பிரச்சனையைக் கூட தீவிரவாதிகள் சண்டை என திரிக்கிறார்கள். அதிலும் வடமாநில போலீஸ் அதிகாரிகள் இங்கே நியமிக்கப்பட்டால் நிலைமை இன்னும் மோசம்'' என்கிறார்.

டைரக்டர் அமீரை வைத்து "நாற்காலி' என்ற படத்தைத் தயாரித்து வரும் நெல்பேட்டையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஆதம்பாவாவிடம் நாம் பேசிய போது, “ரௌடி லிஸ்டில் இருப்பவர்கள் தொடர்ந்து மூன்று வருடங்கள் குற்றச் செயலில் ஈடுபடலைன்னா லிஸ்டில் இருந்து பேரை எடுக்கணும். ஆனா 1996-லிருந்து என் பெயர் ரௌடி லிஸ்டில் இருக்குது. போலீஸ் கைது செய்யும் இஸ்லாமியர்கள் அனைவருமே 20, 25 வருடம் கழித்து நிரபராதி என விடுதலை செய்யப்படுகிறார்கள். யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இங்கிருக்கும் எல்லோரையுமே தீவிரவாதிகள் போல சித்தரிக்கிறது போலீஸ்'' என்கிறார் ஆதங்கத்துடன்.

நாம் மதுரை எம்.பி.வெங்கடேசனிடம் நெல்பேட்டை மக்களின் குமுறலைச்சொன்ன போது, ""இதுகுறித்து மத்திய அமைச்சர்களிடமும் பார்லிமெண்டிலும் பேசுகிறேன்'' என்றார் உறுதியான குரலில்.

-அண்ணல்