"கஜா' புயல் தாக்கியதில் முடங்கிக்கிடக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள், எழுந்து நடக்க இன்னும் எத்தனை காலம் ஆகுமோ என்ற பரிதாப நிலையில், வேதனையில் விம்முகிறார்கள். வீடுகள், மரங்கள், விவசாயப் பயிர்கள் என உடைமைகளை இழந்து குடிநீருக்காகவும், ஒருவேளை சோற்றுக்காகவும் பரிதவிக்கும் மக்களைப் பார்க்கும் அதிகார வர்க்கத்தினர் நாள், நட்சத்திரம் பார்த்து ஓரிரண்டு இடங்களில் மட்டும் மேலோட்டமாக பார்வையிட்டுச் செல்கிறார்கள்.
பொதுமக்களாலும், இளைஞர்களாலும் தங்களுடைய தொடர்புகளுக்காக சீரமைக்கப்பட்ட சாலைகளில் அமைச்சர்களின் கார்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தை மத்திய ஆய்வுக்குழு பார்வையிட வருகிறது என்ற தகவல் பரவியது. அதையடுத்து, சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கீரனூர் வந்த ஆய்வுக்குழுவினர் அங்கிருந்து குன்றாண்டார்கோயில் வழியாக கந்தர்வகோட்டை சென்று அங்கிருந்து பழையகந்தர்வகோட்டை, புதுநகர் என்று தஞ்சை செல்லும் சாலையில் உள்ள சில ஊர்களைப் பார்த்துவிட்டு தஞ்சை சென்று தங்கும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
இதையறிந்த ஆலங்குடி தொகுதி விவசாயிகள் "தென்னை, பலா, தேக்கு, வாழை என பல லட்சம் மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளின் இழப்பை பார்வையிட ஆய்வுக்குழு வராதா?' என்று ஆவேசமடைந்தனர். அதைத்தொடர்ந்து, மத்தியக்குழு வரும்வரை அணவயல் கிராமத்தில் காத்திருப்பது என்று அனைத்துக் கிராம விவசாயிகளும் அறிவித்தனர். தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வும் காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டார். தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் வழித்தடத்தை உடனடியாக மாற்றியமைத்தது.
திட்டமிட்டபடி மால

திட்டமிட்டபடி மாலை 4:30-க்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான குழுவினர் கீரனூர் வந்தனர். உடனடியாக, அங்குள்ள அருந்ததியர் காலனியில் இடிந்த வீடுகளை பார்த்தனர். பிறகு காந்தி நகர் பகுதியில் இடிந்த வீடுகளை பார்வையிட்டனர். அப்போதே மணி 6.30 ஆகிவிட்டது. எனவே, ஜெனரேட்டர் வைத்து லைட் கட்டப்பட்ட வாகனத்தின் உதவியோடு ஆய்வு தொடர்ந்தது. ஆலங்குடி தொகுதியில் உள்ள வடகாடு பகுதிக்கு வந்த குழுவினர் வடக்குப்பட்டி, கல்லிக்கொல்லை, பரமன் நகர் பகுதிகளில் லைட் வெளிச்சத்தில் ஒடிந்து கிடந்த தென்னை மரங்களை பார்த்தனர். "தென்னை, பலா, வாழை எல்லாம் ஒடிஞ்சு போச்சு. எங்கள் தொகுதிக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு எற்பட்டுள்ளது' என்று தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன் ஆய்வுக் குழுவினரிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
சிலபெண்கள் தங்கள் பாதிப்புகளைப் குழுவினரிடம் சொல்லி கதறினார்கள். அவர்களுடைய கதறலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். மாங்காடு கிராமத்திற்குள் வாழை சாய்ந்து கிடப்பதை பார்த்த குழுவினர், சோம்பிய தெரு வழியாக பிரதான சாலையில் ஏறி கந்தர்வகோட்டை சென்றனர். அங்கும் சில இடங்களை இரவிலேயே ஆய்வு செய்துவிட்டு, தஞ்சை சென்று தங்கினார்கள். மறு நாள், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, மல்லிபட்டணம் வழியாக திருவாரூர் மாவட்டத்திற்குள் ஆய்வுக்குச் சென்றனர்.
மத்தியக்குழு ஆய்வு குறித்து மக்கள் கருத்தறிய கிராமங்களுக்குள் சென்றோம். அணவயல் ஆண்டவராயபுரத்தில் வீடு, மரங்கள் அத்தனையும் இழந்து, தென்னை ஓலைகளை தற்காலிக மேற்கூரையாக்கிக்கொண்டிருந்த விவசாயி சின்னப்பா.. “""மத்தியக்குழு வருதுன்னு சொன்னாக. இரவு நேரத்தில் லைட் வெளிச்சத்துல பார்த்தா... எப்படி கணக்குப் போடுவாக? இந்த பகுதியில் வறட்சி ஏற்பட்டப்ப நெல், சோளம், கடலை போன்ற சிறுபயிரிலிருந்து வறட்சியை தாங்கும் தென்னை, பலா, தேக்கு போன்ற மரங்களை நடத் தொடங்கினோம். அவற்றுக்கு இடையே, எலுமிச்சை, மிளகு, பூ, பச்சைன்னு ஒரேநிலத்தில் பல விவசாயம் செஞ்ச பூமி இது. நிலத்தடி நீர் ஆழத்துல போயிருச்சேன்னு, ரூ.15 லட்சம் செலவு செஞ்சு ஆயிரம் அடிக்கு போர் போட்டு விவசாயம் செய்றோம். எல்லாம் தென்னை, பலா, வாழையை நம்பி வாங்குன கடன். இந்தக் கடனை அடைக்க என்ன செய்யப் போறோம். இதை எல்லாம் ஏன் மத்திய குழுகிட்ட இந்த மாவட்ட அதிகாரிகளும், தமிழக அரசும் காட்ட நினைக்கல. முதல்ல அந்த குழுவிடம் யாரையும் பேசவிடல. நாங்க பேசினாலும் அவங்களுக்குப் புரியல. இப்படி புரியாத ஆட்களை வச்சு ஆய்வு செஞ்சா என்ன பலன் கிடைக்கப்போகுது''’என்றார் நொந்தபடியே.
புல்லான்விடுதி அம்மாக்கண்ணு... ""ஆம்பள இல்லாத வீட்ல பொம்பள புள்ளைகளை மட்டுமே வச்சுகிட்டு தென்னையும் பலாவும், வாழையும் சோளமும் விவசாயம் செஞ்சேன். கடனை வாங்கி போர் போட்டோம். இப்ப பலா பழத்துக்கும், தென்னை மரத்துக்கும் 5 லட்சம் கடன் வாங்கிட்டேன். எல்லாம் சாஞ்சு கிடக்குது. சோளம் தண்ணியில கிடக்குது. வீடு உடைஞ்சு கிடக்குது. வாங்குன கடனை கட்டுறது யார்? இதுவரைக்கும் எந்த அதிகாரியும் வரல. வசதியா வந்துட்டு போற ரோட்லயே போயிட்டாகளாம்''’என்றார்.
பேராவூரணி தென்னை விவசாயி ஏகாம்பரம்... ""30, 40 வருசம் பின்னோக்கிப் போயிருச்சு. மத்திய குழுவோ, மாநிலக் குழுவோ எங்க பக்கம் திரும்பிக்கூட பார்க்கல. ஆய்வுன்னா ஒரு கிராமத்தையாவது முழுமையா பார்க்கணும். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திட்டமிட்டு ஒரு இடத்தை காட்டிட்டுப் போயிடுவாங்க. அதை பார்த்து எப்படி அறிக்கை கொடுக்க முடியும்''’என்றார்.
பட்டுக்கோட்டை விவசாயி வீரசேனன்... “""அரசாங்கமே தப்பான கணக்கெடுக்குது. அதாவது தென்னைக்கு ஒரு ஹெக்டேர்ல 175 மரம்தான் என்கிறது அரசு கணக்கு. ஆனால் வரப்புகளில், வீடு ஓரங்களில உள்ள மரங்கள் அடங்கல் கணக்கில் இருக்காது. அதனால முறையான கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு தோட்டத்திலும் நேரடியாக சென்று எடுப்பதுதான். இந்தக் குழு ஆய்வும் குத்துமதிப்பாகத்தான் இருக்கும். அப்படி ஒரு மதிப்பீடைத்தான் தமிழக அரசும் எதிர்பார்க்கிறது''’என்கிறார்.
புரட்டிப் போட்ட புயலின் தாக்கம் இன்னும் ஓயவில்லை.
-இரா.பகத்சிங்
உதவிக் கரங்கள்!
2004-ஆம் ஆண்டு சுனாமி பேரலைகள் மற்றும் 2011-ஆம் ஆண்டு, "தானே' புயல் போன்றவை ஏற்படுத்திய தாக்கம் மிக மோசமானவை. ஆனால், கஜாவைப்போல தகவல் தொடர்பையே துண்டித்து, மக்களை தனித்தீவாக ஆக்கவில்லை. முதலமைச்சர்களின் ஹெலிகாப்டர் ஆய்வும் நிவாரணப் பணிகளில் அரசு காட்டும் தொய்வும் அந்த மக்களை வாட்டியெடுக்க, நாடெங்கிலும் இருந்து தன்னார்வலர்களும், அரசியல் பிரபலங்களும், நடிகர்களும், மாணவர்களும் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கோடி நிதியளித்ததோடு, ரூ.4 கோடிக்கான நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வைத்தார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரு கோடிக்கான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேருக்கு வீடு கட்டித் தருவதாக அறிவித்திருக்கிறார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் நாகை மா.செ. டி.எல்.ராஜேஷ்வரன் தலைமையில் புயல் பாதித்த நாள் முதல் தினசரி ஆயிரம் பேருக்கு உணவு, போர்வைகள் வழங்கப்படுகின்றன. நடிகர் கமல்ஹாசனும் அவரது கட்சிக்காரர்களும் 21-ம் தேதி முதல் களப்பணியைத் தொடங்கியுள்ளனர்.
-செல்வா
வாழ்வுரிமை மீட்பு!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "கஜா' புயல் நிவாரணத்திற்காக தன் சார்பில் 2 கோடி ரூபாய் ஒதுக்கி, எந்தெந்தப் பகுதிக்கு அரசின் நிவாரண உதவிகள் போய்ச் சேரவில்லை என்று விசாரித்து, அந்தப் பகுதி மக்களைச் சந்தித்து உதவிப் பொருட்களை வழங்கி வருகிறார். அதோடு அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் தொடர்புகொள்ள, தன் கட்சி நிர்வாகிகளின் செல்போன் எண்களையும் அப்பகுதியினரிடம் கொடுத்திருக்கிறார்.
-இளையசெல்வன்
ஆளுந்தரப்பின் சரக்கு விற்பனை!
"புயல் பாதிப்பு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்தால், அங்கு போய் குடித்துவிட்டு மறியலில் ஈடுபடுகிறார்கள்' எனப் போராட்டக்காரர்கள் மீது அவதூறு சுமத்தி 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது தமிழக அரசு. அதன் காரணமாக அருகில் உள்ள திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் கடந்த ஒருவாரமாக சரக்கு விற்பனை பெருமளவு அதிகமாகியுள்ளது. இங்கிருந்து வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் மது பாட்டில்களை மாவட்ட எல்லையில் உள்ள செக்போஸ்ட்டில் சோதனையிடுவதில்லை. வாய்மொழி உத்தரவு காரணமாக போலீசார் அமைதி காக்க, புயல் வீசிய மாவட்டங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் நடத்தும் பார்களில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை நடந்துகொண்டிருக்கிறது.
-மகி