மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகளுடனான 3 நாள் மாநாட்டினை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதன்முறையாக இத்தகைய மாநாட்டிற்கு வனத்துறை உயரதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அமைச்சர்கள் மற்றும் துறையின் செயலாளர்களும் கலந்துகொண்ட இந்த மாநாட்டினை சிறப்பாக ஒருங்கிணைத்தார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 10 மாதங்களில் பல்வேறு திட்டங்களும் அறிவிப்புகளும் செயல் பாட்டில் இருக்கிறது. அந்த அறிவிப்புகளில் சுமார் 85 சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீத அறிவிப்புகளின் நிலை, நடைமுறையிலுள்ள திட்டங்களின் வளர்ச்சி, மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகள், ஆலோ சனைகள் ஆகிய அனைத்தையும் 360 டிகிரியில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரி களிடம் விவாதிக்கவே இந்த மாநாடு நடத்தப் பட்டது. சட்டம் ஒழுங்கு குறித்த விவகாரங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டன.

stalin meet

Advertisment

மாநாட்டின் முதல்நாள் காலையில் கலெக்டர் கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களும், மாலையில் காவல்துறை உயரதிகாரிகளும் மட்டும் கலந்து கொண்டனர். சட்டம் ஒழுங்கு, சாதி-மத பிரச்சனை, சைபர் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள், போக்சோ சட்டம், நெடுஞ்சாலை விபத்துகள் உள்பட 15 தலைப்புகளில் காவல்துறை அதிகாரிகள் பேசினர். இரண்டாவது நாள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்களும், மூன்றாவது நாள் மாநாட்டில் ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

முதல்நாள் மாநாட்டில், "சட்டம் ஒழுங்கில் எந்த சமரசத்தை யும் நான் செய்துகொள்ள மாட்டேன். ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்''‘என்றும், இரண்டாவது நாள் மாநாட் டில், "அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜ மானர்கள். இதை நீங்கள் மறக்கக்கூடாது. ஒரு ரூபாய் செலவு செய் தால் அந்த ஒரு ரூபாய் முழுவதும் சிந்தாமல் சிதறாமல் கடைக் கோடியிலுள்ள மக்களுக்கும் செல்லவேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகம்''’என்றும் அழுத்தமாக வலியுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த மாநாட்டில் பேசிய கலெக்டர்கள் பெரும்பாலும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, நிலங்கள் ஆக்கிரமிப்பு, மாற்றுத்திறனாளி களின் பிரச்சனைகள், வேலைவாய்ப்பின்மை, குழந்தைகள் திருமணம் மற்றும் பாலியல் கொடுமை, முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியம், தொழில் நிறுவனங்களுக்கான பிரச்சனைகள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகம் பேசினர்.

stalin

Advertisment

திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் பேசும்போது, "நல்ல பல திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அவைகளுக்கான முதலீடுகளை இறக்க தொழில் நிறுவனங்களும் விரைந்து முன் வருகின்றன. ஆனால், தொழில் தொடங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதில் சுணக்கம் இருக்கிறது. இதனால் திட்டம் அமலாவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதில் காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேரும்''’என்று சுட்டிக்காட்டியதை குறித்துக் கொண்ட முதல்வர், நல்ல யோசனை என பாராட்டினார்.

சென்னை கலெக்டர் விஜயராணி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி ஆகியோர்,’ "நிலம் அபகரிப்பு, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் அதிகமாக வருகிறது. நீர்நிலைகளில் குடியிருப்பவர்கள் பட்டா கேட்டு வருகின்றனர். நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதால் பட்டா வழங்க முடியாத சூழல்களை விவரித்தாலும் மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். நீரே இல்லை பட்டா வழங்கினால் என்ன என்றெல்லாம் பேசு கிறார்கள்''’என்று சொல்ல, "நீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த நிலத்தை பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இருக்கவே கூடாதுன்னு கோர்ட் எச்சரித்திருக்கிறது. அதனால், அதனை பாதுகாப்பதில் கவனமாக இருங் கள். இந்த விசயத்தில் மக்களை அணுகுவதிலும் எச்சரிக்கையாக இருக்கணும்''’என்று அட்வைஸ் பண்ணினார் ஸ்டாலின்.

நாகை கலெக்டர் அருண் தம்புராஜ், "எங்கள் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பிரச்சனை இருந்துகொண்டே இருக்கிறது. இதை பயன்படுத்தும் மீனவர் களுக்கும் சாதாரண வலை பயன்படுத்தும் மீனவர்களுக்கும் எப்போதும் ஒருவித மோதல் போக்கு இருந்து கொண்டே இருக்கிறது. சுருக்கு மடி வலை வீசுபவர்கள், எல்லா மீன்களையும் பிடித்துக் கொள்வதால் பாரம்பரிய மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டுமென்றும் குற்றம் சாட்டுகிறார்கள். தீர்க்கமுடியாத பிரச்சனையாகவே இருக்கிறது'' என்று கூற, "அரசின் உயரதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தி உரிய தீர்வு காணப்படும்'' என்று உறுதி தந்தார் ஸ்டாலின்.

stalin

குழந்தைகள் திருமணம் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விவரித்த விழுப்புரம் ஆட்சியர் மோகன், "அவைகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் மாவட்டத்தில் ரத்தசோகையும் ஊட்டச் சத்து குறைபாடும் மக்களிடம் இருக்கும் முக்கிய பிரச்சனை. இதனை கண்டறிந்து 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வாட்ஸ் ஆப் குழு ஒன்றையும் துவக்கி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்து வதில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை தாமத மின்றி போக்சோ சட்டத்தில் கைது செய்துள் ளோம்'' என்று விரிவாகப் பேச, "குழந்தை திரு மணத்தை எந்த ரூபத்திலும் அனுமதிக்கக் கூடாது. அதேபோல, பாலியல் குற்றவாளிகள் மீது இரக்கமே காட்டக்கூடாது'' என்று எச்சரித்தார் முதல்வர். .

தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி,’"முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா ஆகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் பழுதடைந்திருக்கிறது. அவை களை புதுப்பித்து தரவேண்டும். இலவசத் திட் டத்தின் கீழ் ஆடு, கோழிகள் பெண்களுக்கு வழங்கி வருகிறோம். அவைகளை இடைத்தரகர்கள் இல்லா மல் விற்க முடியவில்லை என மக்கள் புகார் சொல் கிறார்கள்'' என்று சுட்டிக்காட்ட, "இடைத் தரகர் கள் இல்லாமல் விற்பதற்கு உழவர் சந்தைகள் ஏற் படுத்தவும், பழுதடைந்த வீடுகளை கட்டித் தரவும் அரசு நடவடிக்கை எடுக்கும்''‘என்றார் ஸ்டாலின்.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை எடுத்துச்சொல்லி, அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், நெல்லை கலெக்டர் விஷ்ணு, கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த் உள்பட பலரும் சுட்டிக்காட்ட, "புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தலாம். அதை விட முக்கியம், இருக்கிற வாய்ப்புகளில் அவர்களை பயன்படுத்துங்கள்'' என்றார் முதல்வர்.

ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா பேசும்போது, "வருவாய்த்துறையில் பட்டா மாறு தல் உள்பட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களை களைய கண்காணிப்பு அவசியம். தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல, சமத்துவபுரம், நமக்குநாமே, தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவைகளை சுணக்கமில்லாமல் செயல்படுத்த ஆட்சியர்களின் ஒத்துழைப்பு தேவை''’என்றார்.

காவல்துறை மாநாட்டில் பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, "சட்டம் ஒழுங்கு பிரச்சனை அவ்வப் போது முளைத்தாலும் அவைகளை முளையிலேயே கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வரு கிறோம். இதற்காக பல உத்தரவுகள் அதிகாரி களுக்கு தரப்பட்டுள்ளது''’என்றார். அதேபோல சட்டம் ஒழுங்கினை பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்துவதால் குற்றங்கள் குறைந்திருப்பதை சில புள்ளிவிபரங்களுடன் விவரித்தார் காவல்துறையின் கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன்.

அப்போது பேசிய ஸ்டாலின்,’"குற்றங்கள் குறைந்திருப்பதை விட குற்றங்களே நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளை கைது செய்வதை காட்டிலும் குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். சி.சி.டி.வி. கேமராக்களை அதிகப்படுத்துங்கள். பழுதடைந்தவைகளை சரி செய்யுங்கள்''’என்று வலியுறுத்தினார்.

"சோசியல் மீடியாக்கள் பெருகியுள்ள சூழலில், அது தொடர்பான குற்றங்களும் அதி கரித்து வருகிறது. குறிப்பாக சாதி, மத துவேஷங்கள் சோசியல் மீடியாக்களில் பெருகிவிட்டன். இவைகளை தடுக்க, மத்திய அரசிடம் இருப்பது போல நேசனல் மீடியா அனலைசஸ் சென்டர் உருவாக்கப்பட வேண்டும்'' என திருவள்ளூர் போலீஸ் எஸ்.பி. வருண்குமார் கோரிக்கை வைக்க, அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணன், கன்னியாகுமரி எஸ்.பி. பத்ரிநாராயணன் ஆகியோர், "சாதிய மோதல்களும் மத மோதல்களும்தான் பெரிய பிரச்சனைகளாக இருக்கு. வேலைவாய்ப்பு கள் இல்லாததும், சமூக வலைத்தளங்களின் கட்டற்ற போக்கும்தான் இதற்கு காரணம். இந்த பிரச்சனை கள்தான் சட்டம் ஒழுங்கிற்கு சவாலாக இருக்கிறது. இவைகளைத் தடுக்கும் சிறப்பு பிரிவு கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில்தான் உள்ளது. அதை எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண் டும். இளைஞர்களுக்கு புத்தாக்க பயிற்சியும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் அவசர தேவையாக இருக்கிறது. இதற்காக, முக்கிய துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறோம்'' என்றார்.

போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது பற்றி நாகை எஸ்.பி. ஜவஹர், கைதிகளை வீடியோ கான்ஃபரன்ஸில் ஆஜர்படுத்தலாம் என வேலூர் எஸ்.பி.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் விரிவாகப் பேசினர்.

தாம்பரம் ஆணையரும் டி.ஜி.பி.யுமான ரவி பேசும்போது,”"தொழில் நிறுவனங்கள் அதிகமிருப்ப தால் ரவுடிகள் ராஜ்ஜியம் அதிகமாக உள்ளது. கல்குவாரிகளால் ரவுடிகள் உருவாகிறார்கள். ரவுடிகளைக் கட்டுப்படுத்த வெளிச்சம், உதயம், புதையல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்து கிறோம்''’என்று சொல்ல, இதனை மற்றவர்களும் பின்பற்றலாம் என்ற முதல்வர் ஸ்டாலின், "கல்குவாரிகளால் ரவுடிகள் வளரவில்லை. தொழில் போட்டிகளால் உருவாகலாம். அந்த ரவுடிகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். அது கூடாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுதான் உங்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும்'' என்றார். அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், சக்கரபாணி, சேகர்பாபு ஆகியோர் பேசினர்.

மூன்று நாள் மாநாட்டில் இறுதியாக பேசிய முதல்வர் ஸ்டாலின், "கல்வியும் சுகாதாரமும் அரசின் இரு கண்கள். மின்சாரம், சாலைகள் வசதி, உணவுப் பொருள் வழங்கல் அடுத்த இலக்கு. இவைகளில் எந்த தடைகளும் இருக்கக் கூடாது. உங்கள் தொகுதியில் முதல்வர், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, வேளாண்மை உள்ளிட்டவைகளிலும் அதிக கவனம் செலுத்துங்கள். கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்கள் இவை.

ஒவ்வொரு நாளும் திட்டங்களின் உயரத்தை நகர்த்துவதன் மூலம் தமிழகத்தை உயர்த்தமுடியும். உங்களுடைய கனவுகளை நிறைவேற்ற என்னை கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்க ளால் மட்டும்தான் முடியும். ஜாதி மோதல்களும் யும் மதப்பிரச்சனைகளும் ஒழிக்கப்பட வேண் டும். இந்த 3 நாளில் மிக உற்சாகமாக இருக்கிறேன். பட்டிமன்றத்தின் நடுவராக இருந்த அனுபவத்தால், எல்லோரையும் பேச வைத்து குறிப்பிட்ட நேரத் தில் முடிக்கவும் வைத்து மாநாட்டை ஆரோக்கிய மாக ஒருங்கிணைத்தார் தலைமைச் செயலாளர் இறையன்பு. அடுத்த மாநாட்டில் நமது சாதனை களைப் பற்றி விவாதிப்போம்''’என்றார் ஸ்டாலின் மிக உற்சாகமாக.