திண்டிவனம் அருகில் உள்ளது கொல்லியம் குணம். இந்த கிராமத்தில் கடந்த 26ஆம் தேதி, பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதற்காக ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

அப்போது மயிலத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தம் என்ற பெண்மணி, "ஐயோ என் ஆறு பவுன் தாலிச்சங்கிலியைப் பறிச்சிட்டாங்களே''’என்று கூட்டத்திலிருந்து கதற ஆரம்பித்தார். அடுத்த சில நொடிகளில், இறையானூரில் இருந்து வந்திருந்த அஞ்சலை என்பவரும் தான் அணிந் திருந்த மூன்று பவுன் செயினைக் காணோம் என்று கூப்பாடு போட்டார். அவரை அடுத்து கணபதிபட்டு கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி என்பவரும் தனது மூணு பவுன் செயினைக் காணோம் என்று கூச்சலிட்டார்.

tt

Advertisment

இப்படி பெண்கள் ஆளாளுக்கு கதறித் துடிக்க, அங்கு பாதுகாப்புக்கு நின்றி ருந்த போலீசார், பெண்கள் கும்பலை ஊடுருவிச் சென்று செயின் அறுத்தது யார் என்று தேடினார்கள். அப்போது ஐந்து பெண்கள் ஒரு ஆட்டோவில் ஏறி, அவசர அவசரமாகப் புறப்பட்டதைக் கண்டதும், சந்தேகமடைந்து, அவர்களை மடக்கினர். அப்படியே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

காவல்நிலையத்தில் அந்த பெண்கள், நகைப்பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மாவட்டம் கோரிகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வி, ஜெயந்தி, கஸ்தூரி, கிராப்பட்டியை சேர்ந்த உமா, திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராசாமணி என்பது தெரியவந்தது.

இவர்கள் இதுபோல் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, அங்கெல்லாம் நடக்கும் கோயில் கும்பாபிஷேகம், திருவிழா, தேரோட்டம் என்று மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பெண்களோடு பெண்களாகப் புகுந்து, பெண் பக்தர்கள் மெய்மறந்து சாமி தரிசனம் செய்யும் போது, அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை பாக்கு வெட்டியால் சாகசமாக வெட்டி, ரகசியமாக உருவியெடுத்து விடுவார்களாம். இந்த ஐந்து பெண்களிடமிருந்து ஏழரை பவுன் திருட்டு நகைகளைப் பறிமுதல் செய்தது போலீஸ். இன்னும் எங்கெங்கே தங்கள் கைவரிசையை இவர்கள் காட்டியிருக்கிறார்கள் என்று போலீஸ் டீம் துருவிக்கொண்டிருக்கிறது.

இது குறித்து விசாரணைக் காவலர்களிடம் நாம் விசாரித்த போது... "இதுபோல் பெண்களிடம் திருடுவது எப்படி என்று கற்றுக் கொடுப்பதற்காகவே திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பெரிய நகரங்களில் க்ரைம் கோச்சிங் சென்டர்கள் செயல்படுகின்றன'' என்று கூறி நமக்கு ஹைவோல்ட் ஷாக் கொடுத்தனர்.

மேலும், "இதுபோன்ற பயிற்சி மையத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கே திருடும் பயிற்சி தரப்படுகிறது. காரணம், இந்தப் பயிற்சியில் சேர பக்குவப்பட்ட வயதும் நிதானமும்தான் குவாலிபிகேசன். இப்படிப்பட்ட க்ரைம் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்ற பெண்கள், வசதி படைத்த பெண்களைப் போல் டிப்டாப்பாக கவரிங் நகைகளை அணிந்துகொண்டு, விபூதி, குங்குமத்தைப் பூசியபடி, பக்திமயமாய் பெண்களின் கும்பலில் ஊடுருவுவார்கள். எல்லா பக்தர்களும் கும்பாபிஷேக நேரத்தில் கோபுரக் கலசத்தின் மீது தண்ணீர் ஊற்றும் போதுதான், தங்களை மறந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதுதான் நகைகளைக் கொள்ளையடிக்க சரியான முகூர்த்த நேரமாம். அப்போது களவாணிப் பெண்கள் இருவர், தாங்கள் குறி வைக்கும் பெண்களின் இருபுறத்திலும் நெருக்கமாக நின்றுகொள்வார்கள். அந்த பெண்ணுக்கு முன்புறமோ பின்புறமோ ஆண்கள் நின்று கொள்வார்கள். நைசாக பெண்கள் கழுத்தில் உள்ள தாலிச் சரடு, செயின் போன்றவற்றை வெட்டி, சத்தமில்லாமல் உருவிக்கொள்வார்கள். பறிக்கப்பட்ட நகைகள் சில நொடிகளில் அவர்களுடன் வரும் ஆண் நபர்கள் கைகளுக்கு மாறி மாறிச் சென்றுவிடும். ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் கையும் களவுமாகப் பிடிபட்டாலும், நகை கைமாறி விடுவதால், அவர்கள் எங்களிடம் இல்லை என்று எளிதாகக் கைவிரித்து விடுவார்கள். சில நேரம் அவர்களே தங்கள் உடம்பின் ரகசிய இடங் களில் பொருட்களை மறைத்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர் கள் மீது சந்தேகம் வரும்போது, காவல் நிலையத்துக்கு அந்தப் பெண்களை அழைத்துச் சென்று, முழுதாக சோதித்துக் கண்டுபிடிப்போம். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் சிவன் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. அங்கு பெண்களிடம் கைவரிசை காட்டிய, கோவை மாவட்ட பாப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த மேகலா, மஞ்சு, காளிகாம்பாள் ஆகிய மூன்று பேர் மடக்கப்பட்டார்கள்.

இதுபோல் ஒட்டன்சத்திரம் கோயில் திருவிழாவில் நகைகளைத் திருடிய வத்தலகுண்டு சத்யா, முத்துமாரி, கோவில்பட்டி ராணி ஆகியோர் மடக்கப்பட்டனர்'' என்றார்கள் விரிவாகவே.

ஓய்வுபெற்ற பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடாசலமோ, "இப்படிப் பட்ட திருட்டுப் பயிற்சி பெற்ற பெண்கள், சகல தந்திரங்களையும் திருட்டுக்காக பயன் படுத்துவார்கள். வங்கிகளில் பணம் எடுப்பவர்களின் கவனத்தைத் திருப்ப, பணத்தை இறைப்பார் கள். அதை எடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முயல்வதற்குள், அவர்களின் பணம் எளிதாகக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும். பண்டிகைக் காலங்களில் கடைகளுக்குள் புகுந்தும் இப்படிப் பட்டவர்கள் கைவரிசையைக் காட்டுவார்கள். இப்படிப்பட்ட திருடிகளுக்குத் தண்டனை கொடுப்பதால் எந்த பயனும் இல்லை, திருந்தமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டியிருக் கும். இப்போது தொழில்நுட்பம் பெருகிவிட்ட தால், அதையும் திருட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்''’என்றார் கவலையாக.

திட்டக்குடியில் சமீபத்தில் பிரபலமான கோவில் ஒன்றின் கும்பாபிஷேகம் நடந்தது. அங்கு கூடிய கும்பலில் புகுந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் 156 பவுன் நகைகளை அறுத்துச் சென்றது ஒரு கும்பல். இதில் சம்பந்தப்பட்ட சில பெண்களை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்துகொண்டிருக்கும்போதே, திருச்சியில் இருந்து ஒரு வழக்கறிஞர் போலீசாருக்கு போன்செய்து, களவு போன நகைகளைத் திருப்பி ஒப்படைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து, அதேபோல் களவாடிய 156 பவுன் நகைகளையும் ஒப்படைத்த கூத்தும் அரங்கேறியது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற தொழில் முறை திருடர்களை திருத்துவதற்காக ஒரு காவல்துறை அதிகாரியை அங்கே அனுப்பி வைத்தார்கள். அவரும் அப்பகுதியில் தங்கி தொழில்முறைத் திருடர்கள் மனம் மாறுவதற்கான வழிமுறைகளைச் செய்து வந்தார். அவர் அங்கு தங்கியிருந்தபோது அந்த கும்பலைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அந்தப் போலீஸ் அதிகாரியைத் தன் வசப்படுத்திக் கொண்டார். அப்புறம் என்ன? திருடர்களைத் திருத்தப் போன அந்த அதிகாரி, அவர்களுக்கு இன்பார்மராக மாறிவிட்டார். இதனால் அவரை அனுப்பி வைத்த உயர் அதிகாரிகள் நொந்து போய்விட்டார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயரைச் சொன்னாலே எல்லோரும் பதறுவார்கள். அந்த அளவுக்கு திருட்டில் சாதனை படைக்கும் கிராமம் அது. அதேபோல் திருடுகிற பலரும் அந்த ஊரில்தான் தாங்கள் திருடிய பொருட்களை விற்பார்கள். அதனால் திருமணம் நடக்கும் குடும்பத்தினர் இந்த ஊருக்கு வந்து குறைந்த விலையில் திருட்டு நகைகளை வாங்கிச் செல்வார்கள். அப்படிப்பட்ட அந்த கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியரும் எஸ்.பி.யும் சென்று, அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு சில வாழ்வாதாரத்தை உண்டாக்கிக் கொடுத்தால் அங்கே க்ரைம் எண்ணிக்கை குறையும்''’என்றார் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த மஞ்சப்பன்.

எனவே, பயிற்சி பெற்றுத் திருடும் திருடர்களைப் பிடிக்கத் தீவிரமாக காவல்துறை களமிறங்க வேண்டும். அவர்களை மடக்குவதோடு, அவர்களுக்கு மன ரீதியில் கவுன்சிலிங்கையும் கொடுத்து, அவர்களுக்கு, மாற்றாக ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரவேண்டும், இல்லையெனில், திருட்டும் வழிப்பறியும் முற்றுப்புள்ளியே இல்லாமல் சிந்துபாத் கதை போல் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

என்ன செய்யப்போகிறது காவல்துறை?