ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டால் 7 ஆண்டு சிறை என்கிற ராஜ்பவனின் அறிவிப்பு சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. "மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநர், மாநில அரசுக்கு எதிராக உளவு வேலை பார்ப்பதால் அந்தப் பதவியே தேவையில்லை' என்பது அண்ணா காலத்திலிருந்து வலியுறுத்தப்படும் கோரிக்கை. ஜெ. மருத்துவமனையில் அட்மிட்டானதிலிருந்தே தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சிதான் நடக்கிறது என்பது பொதுமக்களின் மனநிலை.
கவர்னர் புரோகித், மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்வதை மாநில சுயாட்சிக்கான சவாலாகக் கருதும் தி.மு.க. கறுப்புக்கொடி காட்டி எதிர்க்கும் நிலையில், "ஆளுநருக்கு அந்த அதிகாரம் உள்ளது' என மத்திய பா.ஜ.க. அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் சொல்கின்றன.
சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறார்!
ஆளுநர்களின் சட்டரீதியான வரம்பு என்ன என்பது குறித்து முன்னாள் நீதியரசர் வள்ளிநாயகத்திடம் கேட்டோம். ""ஆளுநர் என்பவர் குடியரசுத்தலைவருக்கும் மாநிலத்திற்கும் இடையில் செயல்படக்கூடியவர். ஆகவே அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ஆளுநர் செய்து வருகிறார். கவர்னரின் இத்தகைய செயல்பாடுகளை கேள்வி எழுப்ப முடியாது. சட்டதிட்ட வரம்பை எந்தக்கட்சி மீறினாலும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவரான ஆளுநர் அது குறித்துக் கேட்கலாம். இந்திய தண்டனைச் சட்டத்தில் இருக்கக்கூடியதை அவர் சொல்லியிருக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகள், அவர் எடுக்கும், கொள்கைகள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருக்க முடியும்''’என்கிறார்.
சட்டத்தின் மாண்பு அவமதிக்கப்படுகிறது!
முன்னாள் நீதியரசர் சந்துருவிடம், ஆளுநருக்கு இருக்கக்கூடிய வரம்புகள் குறித்து கேட்டோம்.""இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநிலத்திற்கு ஓர் ஆளுநர் இருப்பார். முதலமைச்சர் தலைமையில் இருக்கக்கூடிய அமைச்சரவை ஆலோசனை சொல்ல வேண்டும். அந்த ஆலோசனைப்படி நடக்கலாம், நடக்க வேண்டும் என்று எதுவும் சொல்லப்படவில்லை. குடியரசுத் தலைவர் உத்தரவுப்படி ஆளுநர் நடக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. இதுவரை இருந்த ஆளுநர்கள் எல்லாம் மத்திய அரசின் முகவர்களாக செயல்பட்டார்களே தவிர, அரசமைப்பு சொல்லியிருக்கக்கூடிய கருத்துகளை நிறைவேற்றவில்லை. ஒரு சக்திவாய்ந்த முதல்வர் இருக்கும்போது டம்மியான கவர்னர்கள் இருந்திருப்பார்கள். சக்திவாய்ந்த கவர்னர் இருக்கும்போது டம்மியான முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். இரண்டாவதுதான் தற்போது இங்கு நடைபெற்று வருகிறது.
அமைச்சரவையின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளுங் கட்சியினரே வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் செய்வதில் தப்பே இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆளுநர் செய்வது சரியா, தவறா என்று சட்டத்தில் இல்லை. சட்டத்திற்கு என்று சில பாரம்பரியம், நடைமுறைகள் இருக்கின்றன. சட்டத்தில் எழுதப்படாத விதியாக இருந்தாலும் மாண்பு என்று இருக்கின்றன. (traditional convenction) சில சம்பிரதாயங்கள் இருக் கின்றன. மாநிலத்தில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செயல்படும்போது ஆளுநர் அதன்மீது ஸ்திரமற்றத் தன்மையை உருவாக்குவதோ, புறக்கணிப்பதோ, மக்களுக்கு அதன் மீது அவமரியாதை உண்டாவது போன்ற செயல்களைச் செய்வதோ தவறு.
ஆளுநர் ஒரு இடத்திற்கு நேரடியாக சென்றுதான் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அதிகாரிகளை ஆளுநர் மாளிகைக்கே வரவைத்துகூட தெரிந்து கொள்ளலாம். ஆனால் இவர் மாதிரி ஓர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரை நியமித்து, ஒரு மாநில அரசின் உள் நடவடிக்கையை உள்ளே புகுந்து அவர்களை பலவீனப்படுத்தி... அதில் ஒரு குழுவை தன் பக்கம் வைத்துக்கொண்டு அடுத்த தேர்தல் கூட்டணி அமைக்க பலவந்தப்படுத்த ஒரு முகவரை அனுப்பியிருக்கிறார்கள். அவர்களால் நியமனம் செய்யப்பட்டவர் அந்த வேலையைச் செய்கிறார்.
ஆளுநர் அப்படி செயல்படக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர்தான் சொல்கிறாரே தவிர ஆளுங்கட்சியில் யாரும் வாயைத் திறப்பதே இல்லை. தமிழகத்தில் விசித்திரமாக நடக்கக் கூடியது இதுதான். மற்ற மாநிலங்களில் ஆளுநர் முறை கேடாக, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால் முதலமைச்சர்களே அதற்கு எதிர்ப்பு நடவடிக்கை காட்டியிருக்கிறார்கள்.
"என்னை எதிர்த்து போராட்டம் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறையில் வைத்துவிடுவேன்' என்று ஆளுநரே சொல்வது எல்லாம் எங்கும் நடைபெறவில்லை. அது ஒரு வாய்ச் சவடால் மாதிரி இருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டத் தில் பொதுஊழியரை வேலை செய்யாமல் தடுத்தால் சிறைத்தண்டனை கொடுக்க சட்டத்தில் இருப்பதைத்தான் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். ஆனால் அடையாளப் பூர்வமாக போராட்டம் செய்தால் அது எப்படி குறுக்கீடாகும். அடையாளப் பூர்வமான போராட்டங்களுக்கும் குற்றம் கண்டுபிடித்து சுமத்துவது என்பது எந்த மாநிலத்திலும் நடக்காதது'' என்கிறார்.
ஆளுநரைப் பயன்படுத்தி தமிழ்நாட்டை சர்வாதிகார களமாக்கிப் பயிற்சி பெறுகிறது மத்திய அரசு. அதைக்கூட கேட்க முடியாமல் ஆதரிக்கிறது மாநில அரசு.
-சி.ஜீவாபாரதி