திரைப்பட தொழிலாளர் நலனுக்கான பெப்ஸி அமைப்பு, தனது உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் சக்கர வாகனங்கள் வாங்கித் தருவதாகக் கூறி 5000, 7000 என இரண்டுவிதமான முன்பணம் பெற்றதாகவும் ஏழு மாதங்கள் ஆனபின்பும் யாருக்கும் இரு சக்கர வாகனம் கிடைக்கவில்லை எனவும், முன்பணமாக பெற்ற தொகையும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்றும் பெப்ஸி தலைமை மீது ஒரு புகார் கூறி நமது அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
என்ன விவரம் என விசாரணையில் இறங்கினோம்.
2020-ல் பெப்ஸி, அதன் உறுப்பினர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. உறுப்பினர்களுக்கு பேட்டரியில் ஓடும் இரு சக்கர வாகனங்களை குறைந்த விலையில் வாங்கித் தருவதாகவும், உறுப்பினர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மகளிர் பெயரில் பதிவுசெய்து, முன்பணம் ரூ.5000 கட்டினால் 50 கிலோமீட்டர் வரை ஓடும் பேட்டரி வாகனமும், 7000 கட்டினால் 100 கிலோமீட்டர் வரை ஓடும் பேட்டரி வாகனமும் தரப்படும் என்பதே அது.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஏழு மாதங்களான நிலையில், இதுவரை உறுப்பினர்களுக்கு இன்னும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவில்லை என குறிப்பிட்ட புகார்தாரர், தனது பெயரைக் குறிப்பிடவேண்டாமெனவும், சந்தேகமிருந்தால் நான் சொன்னதன் உண்மைத் தன்மையை நீங்களே விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.
பெப்ஸியின் தலைவரான ஆர்.கே. செல்வமணியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “"இப்படியொரு திட்டம் அறிவிக்கப்பட்டதும், அதற்காக முன்பணம் வசூலிக்கப்பட்டதும் உண்மைதான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர்கள் சேரவில்லை. 764 பேர் இதுவரை இத்திட்டத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருக்கிறார்கள்.
கிராண்ட் இகோ நிறுவனம் சலுகை விலையில் ரூ 40,000-ல் வாகனம் தர முன்வந்தது. முந்தைய அரசில் அமைச்சராக இருந்த வேலுமணியிடம் கலந்து பேசியபோது இரண்டாயிரம் பேருக்கு அம்மா ஸ்கூட்டர் திட்டச் சலுகையை கொடுக்கலாம் எனச் சொன்னார். பெப்ஸியில் உறுப்பினராக இருப்பவர்களின் குடும்பப் பெண்களுக்கு, மகளிருக்கான சலுகை விலை இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ் உதவிபெற முயன்றோம். மற்றவர்கள் முன்பணம் போக பாக்கித் தொகையைக் கட்டவேண்டும்.
ஆனால் இத்திட்டம் அறிவிப்புக்கு வந்த வேகத்தில் ஆட்சி மாறிவிட்டது. கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. புதிய ஆட்சி வந்திருப்பதால் இப்போது பொறுப்பில் உள்ளவர்களுடன் பேசித்தான் சலுகையைப் பெறவேண்டும். அதற்குக் கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும்.
செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் அன்று இரு சக்கர வாகனம் கொடுக்கத் தீர்மானித் திருக்கிறோம். அதுவரை காத்திருக்க விருப்ப மில்லாதவர்கள் பணம் வேண்டுமானால் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறோம்''’ என்றார்.
பெப்ஸி யின் முன்னாள் இணைச்செயலாளரான தனபாலோ, இத்திட்டத்தில் வேறுசில சந்தேகங்களை எழுப்பினார். இத்திட்டத்தில் முறை கேடுகள் நடந்திருப்பதாக சந்தேகிப்பதாகக் கூறினார்.
“"கிட்டத்தட்ட 5000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பதிவு செய் திருக்கிறார்கள் என நினைக்கிறேன். கிராண்ட் இகோ என்னும் நிறுவனம் வண்டிகளை உற்பத்தி செய்து வழங்கப்போவதாகக் குறிப்பிட்டார்கள். மூன்று வெவ்வேறு நிறங்களில் பேட்டரி வாகனங்கள் உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. அந்த சாம்பிள் வண்டியில் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்னும் லோகோ எதுவும் இடம் பெறவில்லை.
பெப்ஸி தலைவரான செல்வமணியின் குரல் பதிவாகவும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதால் நிறைய உறுப்பினர்கள் பதிவுசெய்தார்கள். அடையாள அட்டை மூலம் உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களுக்குக் கூட பதிவுசெய்யலாம் என கூறப்பட்டது. ஆனால் முன்பதிவுத் தொகை பணமாக மட்டுமே கட்டப்படவேண்டும். காசோலையாகவோ, வரைவோலையாகவோ கட்டப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இரு வெவ்வேறு தொகையில் முன்பதிவு என கணக்கிட்டால் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது. இந்தத் தொகை என்ன ஆனது? முறையாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதா… என்பது நிச்சயமாகத் தெரிய வில்லை.
அ.தி.மு.க. அரசு அறிவித்த, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான மான்ய விலையிலான இரு சக்கர வாகனத் திட்டம் எப்படி பெப்ஸி உறுப்பினர்களுக்குப் பொருந்தும். அதன் சலுகைகளை எப்படி பெப்ஸி உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு அளிக்கமுடியும்?
ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டன. உறுப்பினர்களுக்கு வாகனங்கள் தரப்படவில்லை. பணத்தைத் திருப்பித் தருவது சரிதான். அந்தப் பணம் ஏன் பெப்ஸியின் வங்கிக் கணக்கில் இத்தனை மாதங்களாகச் செலுத்தப் படவில்லை?''’என கேள்விகள் எழுப்பு கிறார்.
மேலும் அவர், "பெப்ஸிக்கு வாகனங்கள் தயாரித்து அளிப்பதாகச் சொன்ன கிராண்ட் இகோ நிறுவனம் குறித்த தகவல்களை, வலைத்தளத்தில் தேடிப் பார்த்தபோது, மோட்டார் வாகனங்கள் மற்றும் ட்ரெய்லர் உற்பத்தியாளர்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 1000 ஏக்கர் பரப்பளவில், 5000 கோடி முதலீட்டில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை வருங் காலத்தில் அமைக்கவுள்ளதாக குறிப்பிடுகிறார்கள். அந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனமே வெறும் 1 லட்சம்தான் என அதன் வலைத்தளப் பக்கம் காட்டுகிறது.
இனிமேல் தயாரிப்பில் ஈடுபடவுள்ள நிறுவனத்திடம் வாகனங்களை வாங்கி எப்போது அளிக்கப்போகிறார்கள் அல்லது அந்நிறுவனம் வெறுமனே வேறு நிறுவனத்திடம் வாங்கி, ஒரு கமிஷன் வைத்து பெப்ஸியிடம் விற்கப்போகிறார்களா?''…என வேறுசில கேள்விகளை எழுப்புகிறார்.
முன்பணம் ஏன் வங்கியில் செலுத்தப்படவில்லை என தனபாலின் வினாவை பெப்ஸி தரப்பிடம் முன்வைத்தபோது, "அட்வான்ஸ் தொகையை பணமாக மட்டும்தான் கொடுக்கவேண்டுமென நாங்கள் வலியுறுத்தவில்லை. ஒருவேளை இதுபோல பிரச்சனை வரலாம்னு நாங்க எதிர்பார்த்தோம். மானியம் சாங்ஷன் ஆகலைன்னு வெச்சுக்குவோம். மானியம் இல்லாம வண்டி வேண்டாம்னு உறுப்பினர்கள் சொல்லிட்டாங்கன்னா என்ன செய்வதுன்னு, எப்ப வேண்டுமானாலும் திருப்பிக் கொடுக்க வசதியாக பணமாகவே பெப்ஸி லாக்கர்ல வைத்துவிட்டோம்''’ என்கிறார்கள்.
முன்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கையை இரு தரப்பும் மாற்றிச் சொல்வதால் சரியான எண்ணிக்கை சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். பெப்ஸி சொல்லும் முன்பதிவாளர்களின் கணக்குப்படி பார்த்தாலே, உறுப்பினர்களிடம் வசூலித்த முன்பணம் கிட்டத்தட்ட நாற்பது லட்சத்தை ஏழெட்டு மாதங்களாக வங்கியில் கட்டாமல் இருப்பது வினாக்களை எழுப்புகிறது.
-க.சுப்பிரமணியன்
_________________
வழக்குப் பதிவு !
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றும் பேராசிரியர் சந்திரமோகன் மீது முதுகலை மாணவிகள் 5 பேர் பாலியல் சீண்டல் செய்வதாக புகாரளித் திருந்தனர். இந்த புகாரையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்திருந்தது. (விரிவான செய்தி 18-ம் பக்கத்தில்)
சமூகநலத்துறையின் துணைஆணையர் தலைமையிலான தனிப்படை இந்த புகாரை விசாரணை செய்ததில் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஜூலை 7-ந் தேதி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-மகேஷ்