கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், எல்லை கடந்த கமிஷன், தரமற்ற பொருட்களைக் கொள்முதல் செய்தல் என்றெல்லாம் கேலிக் கூத்துக்கள் அரங்கேறியதால், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதனால் இந்த ஆலைகளில் வேலை செய்து வந்த சுமார் 3500 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு இன்றி பல ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்து வந்தனர். இதற்காகப் பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் நடத்திவந்தனர்.
இந்த நிலையில் தற்போதைய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரான எம்.ஆர். கே. பன்னீர் செல்வத்தின் கரிசனப் பார்வை அவர்கள் பக்கம் திரும்பியது. இதைத் தொடர்ந்து அவர்களின் கவலையை முதல்வரின் கவனத்திற்கு அவர் எடுத்துச் சென்றார். அதன் பலனாக அவர் களின் கோரிக்கையைப் பரிசீலிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்க உத்தரவிட்டு, அவர்களின் வாழ்வை இனிப்பாக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை, சிறப்பு ஊக்கத்தொகை, கரும்பு நிலுவைத் தொகை மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம், போனஸ் உள்ளிட்டவற்றை வழங்க மொத்தம் 1,223.59 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இது சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது
இது தவிர, சர்க்கரை ஆலைகளை மேம்படுத்தும் வகையில் சேத்தியாத்தோப்பில் இயங்கும் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை (1) ஆகியவற்றில் ஏற்கனவே எத்தனால் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடந்துவந்தன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்தத் திட்டப் பணிகளுக்கும் புத்துயிர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், மீதமுள்ள ஆறு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் மூலம் இணை மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ள ஊதிய உயர்வின் மூலம் தொழிலாளர் களின் அடிப்படை ஊதியம் 35% அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும் 30.9.2022 வரையி லான காலத்திற்கு, நல்லெண்ணத் தொகையாக நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையும், மற்றும் பருவ கால தொழிலாளிகளுக்கு 32 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டி ருக்கிறது. இதுதவிர, 1.10.2022 முதல் தற்போது வரை உள்ள காலத்திற்குமான நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கி வந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இரண்டு ஆலைகள், தி.மு.க. ஆட்சி வந்ததும் லாபத்தில் இயங்கி வருகிறது. தற்போது மேலும் நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் லாபகரமாக இயங்கி வருகின்றன. மேலும் நவீனமயமாக்கல் காரணமாக அனைத்துக் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு பிழி திறன் உயர்ந்து, நஷ்டம் ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக குறைந்துவிடும்'’என்றெல்லாம் அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தொழிலாளர்கள் தரப்பில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய சிலரை சந்தித்தோம். அப்போது...
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளியும் தொ.மு.ச. தலைவருமான ராஜாராமன் நம்மிடம்,’"தமிழக அரசு பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இவ்வளவு சிரமத்திற்கு இடையிலும் தமிழக முதல்வர் கூட்டுறவு மற்றும் அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணி செய்த தொழிலாளர்கள் மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பதை அறிந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேன்மைப் படுத்தும் நோக்கத்திலும் கருணையோடும் 35 சதவீதம் ஊதியத்தை உயர்த்தி வழங்கியுள்ளார். இதர பணியாளர்களுக்கும் நல்லெண்ணத் தொகையை வழங்கியதோடு, 1.10.2022 முதல் நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்கவும் அரசாணை பிறப்பித்திருக்கிறார் முதல்வர். எனவே, தமிழக முதல்வருக்கும் இதற்குக் காரணமாக இருந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பி.க்கும் தொழிலாளர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த தொ.மு.ச. மாநிலத் தலைவர் சண்முகம் எம்.பி. அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்''’என்றார் உற்சாகமாக.
"இருளில் தவித்துக் கிடந்த எங்களது வாழ்க்கை யில் விளக்கேற்றி, கசந்து கிடந்த எங்கள் வாழ்வை இனிப்பாக்கி இருக்கிறார்கள் முதல்வரும் அமைச்சரும். தற்போது வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு எங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது'' என்கிறார் மற்றொரு ஊழிய ரான ராஜதுரை,
தமிழகத்தில் கடந்த காலத்தில் சர்க்கரை உற்பத்தி மிக அதிக அளவில் இருந்து வந்தது. மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. காலப்போக்கில் மோச மான நிர்வாகத்தின் காரணமாக அனைத் தும் நஷ்டத்தில் இயங்கிவந்தன. தற்போது தி.மு.க. அரசு அதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் களமிறங்கி, அவற்றை சாதனைத் திசையில் இயங்க வைத்திருக்கிறது.
இதேபோல் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய சுமார் 1,070 கோடி ரூபாயை, தனியார் ஆலை முதலாளிகள் நிலுவையில் வைத்துள்ளனர். இதைப் பெற அவர்கள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, அவர்களின் பரிதவிப்பையும் தீர்த்து வைக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை, பரவலாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.