ஆளுநர்களின் 51-வது மாநாட்டை கடந்த 11-ந் தேதி நடத்தி முடித்திருக்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். டெல்லியில் நடந்த இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், 29 மாநிலங்களின் கவர்னர்கள், சட்டப்பேரவை கொண்ட 3 யூனியன் பிரதேசங்கள் உள்பட 9 யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அரசுக்கு இணையாக அரசியல் பணிகளை முன்னெடுக்கலாம் என்றும், மக்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும், ஆளுநர்களுக்குச் சொல்லப் பட்டிருக்கிறது. அதனாலேயே இந்த மாநாட்டிற்கு பிறகு, ஆளுநர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளனர் மாநில முதல்வர்கள்.
மாநாட்டில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், "மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த ஆளுநர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அடிக்கடி சொந்த மாநிலங்களுக்கு செல்வதை நீங்கள் தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு விசயத்திலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். மாநில அரசுகளுடன் நட்பாகவும் வழிகாட்டி யாகவும் இருப்பதில் உங்களின் பங்களிப்பு மிக முக்கியம். மக்களோடு நெருக்கமாக இருங்கள். மக்களுக்கு சேவை செய்வது உங்களின் கடமை''’என்று சொல்லியுள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசும்போது,’"மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்களை கண்காணிப்பதில் ஆளுநர்கள் பலரும் சோர்வாக இருப்பதாகத் தெரிகிறது. இனி அது கூடாது. மத்திய அர சின் திட்டங்கள் மாநிலத்தில் எப்படி செயல்படுத் தப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிலும் அதன் கட்டமைப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய ஆளுநர்கள், இந்த விஷயத்தில் மக்களை யும் ஒன்றிணைத்துச் செயலாற்ற அவர்களைத் திரட்டுவதில் முனைப்பாக இருக்க வேண்டும்'' என்று அழுத்தமாகப் பேசினார்.
இதனையடுத்துப் பேசிய பிரதமர் மோடி,’"நாட்டின் ஒற்றுமையையும் அமைதி யையும் கவனிப்பதில் ஆளுநர்களின் பணி மிக முக்கியமானது. மக்களோடு நெருக்கமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். மாநிலம் முழுவதும் பயணித்து மக்களிடம் பேசுவதற்கு ஆளுநர்களிடம் ஆர்வம் இருப்பதில்லை. கிராமங்களுக்குச் செல்லுங்கள். மக்களிடம் உரையாடுங்கள். மக்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்பது தெரிந் தால் உங்களால் இயங்கமுடியும். ஆளுநர் மாளிகை அமைதியாகக் இருக்கக்கூடாது. அது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக நடப்பதை எதிர்ப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். மாநிலத்தில் ஏற்படும் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம். கடலோர மாநில ஆளுநர்களும், எல்லைகளிலுள்ள மாநில ஆளுநர்களும் மக்களிடம் நெருக்கமாக இருப்பதற்கு ஆர்வம் காட்டவேண்டும். அந்த மக்களுக்காக உங்களின் நேரத்தை செலவு செய்யுங்கள்''‘என்று வலியுறுத்தினார்.
இதே பாணியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நம் நாட்டில் 70 சதவீத பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. உயர்கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்களின் எண்ணிக்கை பல்கலைக்கழகங்களில்தான் அதிகம். பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக இருக்கும் உங்களுக்கு, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பங்களிப்பு அதிகமுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் புதிய தலைமுறையினரின் கல்வி இதனை நோக்கித்தான் இருக்கவேண்டும். அதனால், மாணவ- மாணவிகளிடமும் மக்களிடமும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்''’என்றார்.
இந்த மாநாட்டில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் உள்பட 6 பேருக்கு பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மாநிலத்தில் தாங்கள் செயலாற்றிய விதம், மாநிலத்திலுள்ள பிரச்சினைகள், அதை சரிசெய்யும் நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை ஆளுநர்கள் பேசினர். மாநாட்டில் ராம்நாத் கோவிந்த், வெங்கையா, மோடி, அமித்ஷா அனைவருமே, "மக்களிடம் செல்லுங்கள், மக்களோடு நெருக்கமாக இருங்கள்' என்று ஆளுநர்களுக்கு வலியுறுத்தியது, அரசியல் ரீதியாக சொல்லப்பட்ட அசைன்மெண்டாகவே பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துத்தான் அனைத்து அரசியல் சித்து விளையாட்டுகளையும் மோடியும் அமித்ஷாவும் நடத்திவருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தி.மு.க. அரசின் நிர்வாகத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதை ஏற்கனவே துவக்கிவிட்டார்.
புதிய கல்விக் கொள்கையை எந்த சூழலிலும், அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்தாலும், அதுபற்றி ராஜ்பவன் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. அதனை நிரூபிப்பது போல, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கான புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் தலைமை யில் தேடுதல் குழுவை அமைத்துள்ளார் ஆர்.என்.ரவி.
இந்த நிலையில்... கடலோர மாநில கவர்னர்களுக்கு புதிய அறிவுறுத்தலை மோடியும் அமித்ஷாவும் கொடுத்திருக்கின்றனர். கடலோர மாநிங்களில் தமிழகமும் ஒன்று என்பதால், மக்களை தரிசிக்கும் பயணத்திற்கான திட்ட மிடல்களை ராஜ்பவன் போட்டுக்கொண்டி ருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி நடக்கும்போது, மாநில உரிமைகள் தொடர்பாக அரசியல் ரீதியான பரபரப்பை கவர்னர் உருவாக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.